மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 28 ஜுன் 2021

தவறான தகவல்: அதிகாரிகளுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? நீதிமன்றம்!

தவறான தகவல்: அதிகாரிகளுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? நீதிமன்றம்!

ஊழியர்கள் பணி நிரந்தரம் தொடர்பாக 13 ஆண்டுகளாக தவறான தகவல் அளித்த அதிகாரிகளுக்கு எதிராக ஏன் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அரியலூர் நகராட்சியில் தற்காலிகமாகப் பணியாற்றிய ரங்கநாதன், வெலிங்டன் ஆகியோரை பணி நிரந்தரம் செய்து, நகராட்சி செயல் அலுவலர் கடந்த 2008ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார். ஆனால், உத்தரவைச் செயல்படுத்தவில்லை. அதனால், இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மூன்று மாதங்களுக்குள் இருவரையும் பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட்டது. அதை எதிர்த்து நகராட்சி நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதன் பின்னரும் பணி நிரந்தரம் செய்யாததால் ரங்கநாதன், வெலிங்டன் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியுள்ளதாக நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்று, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

ஆனால், மனுதாரர்களுக்கு பணப் பலன்கள் வழங்கப்படவில்லை. இதையடுத்து, மனுதாரர்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணையின்போது, இருவருக்கும் தலா ரூ.11 லட்சத்து 38,772 ஊதிய பாக்கி வழங்க வேண்டியுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளதாகவும், போதிய நிதி இல்லாததால் இத்தொகையை வழங்க அவகாசம் வேண்டும் எனவும் நகராட்சி சார்பில் கேட்கப்பட்டது.

அதையடுத்து, அந்தத் தொகையை இரு தவணைகளாக வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இரு தவணைகளுக்கான காசோலைகளை வழங்கிய நகராட்சி ஆணையர், கொரோனா காரணமாக வங்கியில் போதிய பணமில்லாததால் காசோலைகளை வங்கியில் செலுத்த வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காசோலைகளை வங்கியில் செலுத்த வேண்டாம் என நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட விவரம், நீதிபதி கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

நகராட்சி நிர்வாகத்தின் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, ‘வங்கியில் பணமில்லை எனத் தெரிந்தே காசோலைகள் வழங்கியது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். 2008ஆம் ஆண்டு முதல் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க, நகராட்சி நிர்வாகம் நீதிமன்றத்துக்குத் தவறான தகவல்களை அளித்துள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி உயரதிகாரிகளுக்கு ஏன் உத்தரவிடக் கூடாது?’ என்று கேள்வி எழுப்பினார். பின்னர், அரியலூர் நகராட்சி ஆணையர் வருகிற ஜூலை 7ஆம் தேதி நேரில் ஆஜராகி இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

-ராஜ்

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

திங்கள் 28 ஜுன் 2021