மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 26 ஜுன் 2021

அரசு நிலம் ஆக்கிரமிப்பா?: தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு!

அரசு நிலம் ஆக்கிரமிப்பா?: தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு!

நீலகிரி மாவட்டம், நடுவட்டம் பகுதியில் அரசு நிலம் மற்றும் சாலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், நடுவட்டம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மகிமைராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “எங்கள் கிராமத்தில் உள்ள டி.ஆர்.பஜார் பகுதியில் மகாவீர் பிளாண்டேஷன் என்ற நிறுவனம், அரசு நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துள்ளது. அதைப் பயன்படுத்தி தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை பகுதிகளையும், அதை ஒட்டிய 8 ஆயிரம் ஏக்கர் நிலத்தையும் அந்நிறுவனம் ஆக்கிரமித்துள்ளது.

சாலையின் குறுக்கே 425 மீட்டர் நீளத்திற்குப் பெரிய அளவிலான கற்களைப் போட்டு பாதையை மறித்துள்ளதுடன், பிற சாலைகளுக்கும், வேளாண் நிலங்களுக்கும் செல்கின்ற வழிகளையும், இடுகாட்டிற்குச் செல்லும் வழியையும் அந்நிறுவனம் மறித்துள்ளது.

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வசிக்கும் மக்களின் நலனை கருதி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி நில நிர்வாக ஆணையர், நீலகிரி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய்த் துறையினர் ஆகியோருக்கு மனு அளித்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் ” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு இன்று(ஜூன் 26) நீதிபதிகள் என். கிருபாகரன், டி.வி. தமிழ்செல்வி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு, நீலகிரி மாவட்ட ஆட்சியர், காவல் துறை உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், மனுதாரர் குறிப்பிடும் பகுதிக்கான ஆவணங்களை ஆய்வுசெய்து, அப்பகுதியில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிந்து மூன்று வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். இதையடுத்து, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

-வினிதா

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி  நிறுவனத்தில் பணி!

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - இட்லி... சில சந்தேகங்களும் எளிய ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - இட்லி... சில சந்தேகங்களும் எளிய தீர்வுகளும்!

சனி 26 ஜுன் 2021