மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 23 ஜுன் 2021

போலீசார் தாக்கியதில் உயிரிழந்த விவசாயி!

போலீசார் தாக்கியதில் உயிரிழந்த விவசாயி!

சேலம், ஆத்தூர்- இடையப்பட்டி சோதனைச் சாவடியில் போலீசார் தாக்கியதில் காயமடைந்த விவசாயி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் வெள்ளையன் (எ)முருகேசன். இவரது மனைவி அன்னக்கிளி. இவர்களுக்கு ஜெயப்பிரியா, ஜெயப்பிருந்தா என்ற இருமகள்களும், கவிப்பிரியன் என்ற மகனும் உள்ளனர். விவசாயியான முருகேசன், இடையபட்டி-வாழப்பட்டி சாலையில் மளிகை மற்றும் பழக்கடைகளை நடத்தி வந்துள்ளார்.

கொரோனா காரணமாக சேலம் உட்பட 11 மாவட்டங்களில் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால், நேற்று முருகேசன் தனது நண்பர்கள் இருவருடன் கள்ளக்குறிச்சிக்கு சென்று மது அருந்திவிட்டு திரும்பி வந்துள்ளார்.

அப்போது கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி வனத்துறை சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், முருகேசன் மற்றும் அவரது நண்பர்களை நிறுத்தி விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதில் முருகேசனுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த போலீசார் முருகேசனை லத்தியால் தொடர்ந்து தாக்கியுள்ளார்.

ஏற்கனவே மதுபோதையில் இருந்த முருகேசன் போலீசார் தாக்கியதையடுத்து சாலையில் மயங்கி விழுந்தார். படுகாயமடைந்த முருகேசனை, அவரது நண்பர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

உடல்நிலை மோசமடைந்ததால், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட முருகேசன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முருகேசனை தாக்கிய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது குடும்பத்தினருக்கு அரசு நிவாரணம் வழங்கும்வரை உடலை வாங்கப் போவதில்லை என்று முருகேசனின் உறவினர்கள் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முருகேசனை போலீசார் லத்தியால் தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போலீசார் தாக்கியதால் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. நேற்று ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகியோரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட மறுநாளில் போலீசார் தாக்கி முருகேசன் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-வினிதா

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

புதன் 23 ஜுன் 2021