மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 23 ஜுன் 2021

ஏடிஎம் கொள்ளை : ஹரியானாவில் இரண்டு பேர் கைது!

ஏடிஎம் கொள்ளை : ஹரியானாவில் இரண்டு பேர் கைது!

ஸ்டேட் பேங்க் ஏடிஎம் மிஷின்களை குறிவைத்து வங்கி பணத்தை மட்டும் கொள்ளையடித்து வந்த வடமாநில திருடர்களில் இருவரை சென்னை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள ஸ்டேட் பேங்க் ஏடிஎம் (பணம் போடும், பணம் எடுக்கும்) மிஷின்களில் நிரப்பும் பணம் தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனால் வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கில் பணம் குறையவில்லை.

வங்கி பணம் எப்படி திருட்டு போகிறது, அதை எப்படி ஈடுகட்டுவது என வங்கி மேலாளர்கள் பல மாதங்களாக தலையை பிய்த்துக்கொண்டு இருந்தார்கள். இந்நிலையில், ஏடிஎம் கொள்ளை சம்பவம் சென்னை கிண்டி, அண்ணா நகர், தி நகர், அடையார், என நீண்டுகொண்டே போனதால் ஸ்டேட் பேங்க் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் மூலமாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

ஸ்டேட் பேங்க் ஏடிஎம் மிஷின் சென்டர்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் சர்வர் மும்பையில் உள்ளது. அவர்களிடம் குறிப்பிட்ட ஏடிஎம் சென்டர்களின் கேமரா பதிவுகளை வாங்கி ஆராய்ந்ததில் வடமாநிலத்தைச் சேர்ந்த சில நபர்கள் மட்டும் தொடர்ந்து ஏடிஎம்களில் பணம் எடுப்பதை கண்டறிந்தனர்.

விருகம்பாக்கத்தில் 2 லட்சம், ராமாவரம் பகுதியில் 1.30 லட்சம், வடபழனியில் 69 ஆயிரம், கீழ்பாக்கம் பகுதியில் 1.18 லட்சம், பெரியமேடு பகுதியில் 16 லட்சம், தியாகராயநகர் நகரில் 70 ஆயிரம், வேளச்சேரியில் 5 லட்சம், கோட்டூர்புரத்தில் 5 லட்சம், பெரம்பூரில் 5 லட்சம், பீர்க்கங்கரணை பகுதியில் 1.5 லட்சம், தரமணி பேபி நகரில் 2 லட்சம், எஸ்.ஆர்.பி டூல்ஸ் 3 லட்சம், பல்லாவரத்தில் 3 லட்சம் என இதுவரை 50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது; கொள்ளை சம்பவம் குறித்து இதுவரை 21 புகார்கள் வந்துள்ளது.

இதுதொடர்பாக, அடையார் துணை ஆணையர் விக்ரம் மற்றும் தி நகர் துணை ஆணையர் ஹரிஹர பிரசாத் இருவரும் காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவாலுடன் ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து, தி நகர் துணை ஆணையர் ஹரிஹர பிரசாத் தலைமையில் ஒரு உதவி ஆணையர், இரண்டு இன்ஸ்பெக்டர்கள் மற்றும் க்ரைம் டீம் ஹரியானா மாநிலத்திற்கு சென்றனர். அம்மாநில போலீஸ் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தனிப்படையினர் இரண்டு கொள்ளையர்களை அவர்களின் வீட்டிலே வைத்து கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார், கொள்ளையர்களிடம் விசாரித்தபோது, ”நாங்கள் வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து மக்கள் பணத்தை எடுக்கவில்லை, எங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுப்போம். ஆனால் கணக்கில் பணம் குறையாது. ஸ்டேட் பேங்க் ஏடிஎம் சென்டர்களில் பணம் போடும், எடுக்கும் டூ இன் ஓன் மிஷின்கள், ஐந்து வருடங்களுக்கு முன்பு வந்தது. கார்டு போட்டு பணம் எடுக்கும்போது சென்சாரை மறைத்துக் கொண்டால் பெயிலர் என மெசேஜ் வரும் பணமும் கைக்கு வந்துவிடும். ஆனால், எங்கள் கணக்கில் உள்ள பணம் அப்படியே இருக்கும் “ என்று கூறியுள்ளனர்.

இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் விசாரித்தபோது, “எல்லாமே கமிஷன்தான். தரமான மிஷின் கிடையாது. ஏடிஎம் மிஷின் வாங்குதல், சர்வீஸ் என அனைத்திலும் கமிஷன்தான்” என்கிறார்கள்.

இதற்கிடையில், ஏடிஎம் கொள்ளை வழக்கு, மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அனைத்து எஸ்.பி.ஐ வங்கிகளிலும் பணம் சரியாக உள்ளதா என சோதனை மேற்கொள்ளுமாறு எஸ்பிஐ வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வணங்காமுடி, வினிதா

தமிழ்நாட்டில் புதிய 13 பேருந்து நிலையங்கள்!

2 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டில் புதிய 13 பேருந்து நிலையங்கள்!

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

இதற்கெல்லாம் பரோல் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம்!

3 நிமிட வாசிப்பு

இதற்கெல்லாம் பரோல் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம்!

புதன் 23 ஜுன் 2021