மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 20 ஜுன் 2021

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

இந்தியாவில், கொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என்றும், அது, அடுத்த 6-8 வாரங்களில் தாக்கக் கூடும் என்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் ஏற்பட்ட கொரோனா முதல் அலையில் இந்தியா பெரிய அளவில் பாதிப்பைச் சந்திக்கவில்லை. ஆனால், இரண்டாம் அலையில் மற்ற நாடுகள் சந்திக்காத பல பாதிப்புகளையும் சந்தித்தது. இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இரண்டாம் அலை வேகமெடுக்க தொடங்கியது. உச்சத்தைத் தொட்ட தொற்று தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இதுவே முழுமையாக முடிவடையவில்லை. அதற்குள்ளும் மூன்றாவது அலை விரைவில் இந்தியாவைத் தாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இதனால், மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த முதல் மற்றும் இரண்டாவது அலையில் நாம் பாடம் கற்றுக் கொண்டதுபோல் தெரியவில்லை. மீண்டும் மக்கள் கூட்டம் கூடுகின்றனர். மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதில்லை. முறையாக முகக்கவசம் அணிவதில்லை

இந்தியாவில் மூன்றாவது அலை தவிர்க்க முடியாததாகி விட்டது. அடுத்த 6 அல்லது 8 வாரங்களில் மூன்றாவது அலை தொடங்கும். கொஞ்ச நாட்கள்தான் இருக்கிறது. இதில் நாம் என்ன தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கிறோம் என்பதை பொறுத்தே பாதிப்பு இருக்கும்.

இரண்டாவது அலையில் உருமாறிய வைரஸ் தொற்றினால் பாதிப்பு அதிகரித்தது. உருமாறிய வைரஸ் தொடர்ந்து இருக்கத்தான் செய்யும். இதனால் 'ஹாட்ஸ்பாட்' பகுதிகளில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். வைரஸ் தொடர்ந்து உருமாறுவதால் நாம் கவனமுடன் இருக்க வேண்டும்.

ஒரு அலை உருவாக, பொதுவாக மூன்று மாதங்கள் ஆகும். ஆனால், பல காரணிகளைப் பொறுத்து குறைந்த காலத்திலும் அந்த அலை உருவாகலாம். அதனால், தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். இதன் தாக்கத்தைத் தடுக்க தடுப்பூசி போடுவதுதான் ஒரே வழி. அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது மிகவும் முக்கியம்.

மூன்றாம் அலையைச் சமாளிக்க நாம் வியூகம் அமைப்பது அவசியம். இந்தியாவைத் தாக்கவுள்ள கொரோனா மூன்றாம் அலையில் டெல்டா பிளஸ் வகை தொற்றுகளே மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே மூன்றாவது அலையின் தாக்கத்தைக் குறைக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

-வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

ஞாயிறு 20 ஜுன் 2021