ஒரே பாதுகாப்பு சட்டத்தை இயற்றக்கோரி டாக்டர்கள் போராட்டம்!

public

நாடு முழுவதும் ஒரே பாதுகாப்பு சட்டத்தை இயற்றக்கோரி இந்திய மருத்துவ சங்கம், அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னை, திருச்சி, கரூர் என்று தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த டாக்டர்கள் கறுப்புப் பட்டை அணிந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவர்கள் உட்பட மருத்துவத்துறை பணியாளர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க, மருத்துவமனைகள் மற்றும் மருத்துவத்துறை பணியாளர் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு இயற்ற வலியுறுத்தி ஜூன் 18ஆம் தேதியை தேசிய எதிர்ப்பு தினமாகவும், ‘காப்போரை – காப்பீர்’ என்ற அடைமொழியையும் இந்திய மருத்துவ சங்கம் அறிவித்தது. அதன்படி, தேசிய எதிர்ப்பு தினத்தன்று தமிழகம் உட்பட நாடு முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் கறுப்புப் பட்டை அணிந்து பணியாற்றினர்.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இந்திய மருத்துவ சங்கம், அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய மருத்துவ சங்கத்தின் (தமிழகக் கிளை) தலைவர் பி.ராமகிருஷ்ணன், செயலாளர் ஏ.கே.ரவிக்குமார், அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகி பி.பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதேபோல் திருச்சி தில்லைநகரில் உள்ள இந்திய மருத்துவ சங்க வளாகத்தில் கறுப்புப் பட்டை அணிந்து நடந்த எதிர்ப்பு தின கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு தலைவர் டாக்டர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

போராட்டம் குறித்து பேசிய ராமகிருஷ்ணன், “மத்திய அரசின் மருத்துவமனை மற்றும் மருத்துவத்துறை பணியாளர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும். ஒவ்வொரு மருத்துவமனைக்கும் நிலையான, உறுதியான பாதுகாப்பு வேண்டும். மருத்துவமனையைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். மருத்துவப் பணியாளர்கள் மீது தாக்குபவர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். இந்தப் போராட்டத்தின்போது வாசகங்கள் அடங்கிய கோரிக்கை பதாகைகளையும் மருத்துவர்கள் கையில் ஏந்தி நின்றனர்.

இதேபோல் கம்பத்தில் அரசு மருத்துவமனை முன்பு முல்லைப்பெரியாறு மருத்துவர்கள் சங்கம் கிளை சார்பில் கறுப்புப் பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிளை தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் வேலை செய்யும் டாக்டர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும், 2008இல் தமிழக அரசு நிறைவேற்றிய மருத்துவர் பாதுகாப்பு சட்டத்தை இந்தியா முழுமைக்கும் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இப்படி மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், “23 மாநிலங்களில் இந்தச் சட்டம் அமலில் உள்ளது. மற்ற மாநிலங்களில் சட்டம் இல்லை. அதனால், இந்தியா முழுவதற்குமான சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும்” என்பதே ஒட்டுமொத்த மருத்துவர்களின் கோரிக்கையாக இருந்தது.

**-ராஜ்**

.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *