மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 20 ஜுன் 2021

கடன் வாங்கி வளர்ப்பு நாய்க்கு வைத்தியம் பார்த்த குடும்பம்!

கடன் வாங்கி வளர்ப்பு நாய்க்கு வைத்தியம் பார்த்த குடும்பம்!

தங்கள் வளர்ப்பு நாய்க்கு அறுவைசிகிச்சை செய்வதற்காக தங்களிடம் பணம் இல்லாததால், சிகிச்சைக்கான பணத்தை கடனாக வாங்கி நாயைக் காப்பாற்றிய குடும்பத்தினரின் செயல் பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது

பொதுவாக வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்புப் பிராணிகளான நாய், பூனைகள் மீது அந்தக் குடும்பத்தினர் அளவுக்கு அதிகமாக பாசம் வைப்பதுண்டு. அந்தப் பாசத்தில் அவற்றுக்கு அளவுக்கு அதிகமாக உணவு கொடுப்பதும் உண்டு. இதனால் சில நேரங்களில் வளர்ப்புப் பிராணிகளுக்கு உடற்பருமன் பிரச்சினை ஏற்பட்டுவிடுகிறது. அது போன்ற ஒரு நிலை புனேயைச் சேர்ந்த ஒரு வளர்ப்பு நாய்க்கு ஏற்பட்டது.

புனேயைச் சேர்ந்த டைஸி தாருவாலா என்பவர், கடந்த ஏழு ஆண்டுகளாகத் தன் வீட்டில் பெண் நாயை வளர்த்து வந்தார். அதற்கு தீபிகா என்று பெயரிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அந்த நாயின் உடல் எடை அதிகரித்து நடக்க முடியாத நிலைக்கு வந்தது. எப்போதும் படுத்த படுக்கையில் இருந்த அந்த நாய்க்கு மூச்சுவிடுவதிலும் சிரமம் ஏற்பட்டது.

எனவே, தாருவாலாவின் குடும்பத்தினர் புனேயில் உள்ள கால்நடை மருத்துவர் நரேந்திர பர்தேசியிடம் அந்நாயை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவர் நாயின் உடல் எடையைக் குறைக்க மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை. தினமும் தீபிகா சாப்பாட்டை விட மருந்துகளைத்தான் அதிகமாக சாப்பிட வேண்டிய நிலை. இருந்தும் அதன் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்துகொண்டே இருந்தது.

இதையடுத்து, அந்நாய்க்கு உடற்பருமன் குறைப்பு அறுவை சிகிச்சை செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டது. இதற்கு முன்பு இதுபோன்று, நாய்களுக்கு உடல் எடையைக் குறைக்கும் ஆபரேஷன் மிகவும் அபூர்வமாகவே செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் பணியாற்றும் உடற்பருமன் குறைப்பு அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் ஷசாங் ஷாவிடம் இது குறித்து நரேந்திர பர்தேசி ஆலோசனை நடத்தினார். டாக்டர் ஷா விலங்குகளுக்கு உடல் எடைக்குறைப்பு அறுவைசிகிச்சை செய்தது கிடையாது. ஆனாலும் இந்தச் சவாலான அறுவைசிகிச்சையை செய்ய டாக்டர் ஷா சம்மதித்தார்.

டாக்டர் ஷாவும், நரேந்திராவும் இந்த அறுவைசிகிச்சைக்காக ஒன்றரை மாதம் தேவையான ஏற்பாடுகளைச் செய்தனர். நாய்க்கு ஆபரேஷன் செய்ய சிறப்பு உபகரணங்கள் ஆர்டர் செய்து வாங்கப்பட்டன. நீண்ட யோசனைக்குப் பிறகு டாக்டர் ஷா இந்த ஆபரேஷனை மேற்கொண்டார்.

ஆபரேஷனுக்கு முன்பு 50 கிலோ எடை இருந்த தீபிகா, இப்போது 8 கிலோ எடை குறைந்துள்ளது. அதன் இதயத் துடிப்பு சரியாகி இருக்கிறது. மூச்சுவிடுவதில் இருந்த பிரச்சினை தீர்ந்துள்ளது.

இதுகுறித்து டைஸி குடும்பத்தினர், “தீபிகா உடல் எடையுடன் கஷ்டப்பட்டதைப் பார்க்க முடியவில்லை. இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எடைக் குறைப்பு ஆபரேஷன் தீபிகாவுக்கு மட்டுமல்லாது எனக்கும் புத்துணர்ச்சியைக் கொடுத்துள்ளது” என்கின்றனர் மகிழ்ச்சியுடன்.

இப்போது தீபிகா வீட்டுக்குள் எழுந்து நடமாட ஆரம்பித்துள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் செல்ல நாய் ஆக்டிவ்வாக இருப்பதைப் பார்த்து டைஸி குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தாருவாலா குடும்பத்தினர், தங்கள் நாய்க்கு அறுவைசிகிச்சை செய்வதற்கான செலவுக்குத் தாங்கள் பணத்தை கடனாக வாங்கித்தான் சமாளித்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். இது பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.

-ராஜ்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

ஞாயிறு 20 ஜுன் 2021