மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 19 ஜுன் 2021

துபாயில் தாய் மரணம்: விமானத்தில் தனியே வந்த குழந்தைக்கு உதவிய திமுகவினர்!

துபாயில் தாய் மரணம்: விமானத்தில் தனியே வந்த குழந்தைக்கு உதவிய திமுகவினர்!

துபாய் நாட்டில் பணிப்பெண் வேலைக்குச் சென்ற கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஒரு பெண்மணி, கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தார். அவர் தன்னுடன் அழைத்துச் சென்ற அவரின் 11 மாத கைக்குழந்தை விமானம் மூலம் திமுகவினர் உதவியால் திருச்சி வந்தடைந்தது பலருக்கும் ஆச்சரியத்தையும் அனுதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி எம்.ஆர். என் நகரைச் சேர்ந்தவர் ராஜா. இவரின் மகன் 38 வயதான வேலவன். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பாரதி என்பவருக்கும் கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு விக்னேஸ்வரன் (வயது 12), அகிலன் (வயது 7), தேவேஷ் (11 மாத கைக்குழந்தை) என மூன்று ஆண் குழந்தைகள்.

சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ட மூத்த மகன் விக்னேஸ்வரனை கவனித்துக்கொள்வதற்காக வேலவன் உடன் இருந்ததால், அவரால் அப்போது பணிக்குச் செல்ல முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் மகனின் சிகிச்சைக்கு அதிக தொகை தேவைப்பட்டதால், பணத்தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் மூத்த மகன் விக்னேஸ்வரன் இறந்துவிட்டார்.

வேலவன் இளங்கலை பட்டப்படிப்பு படித்திருந்தாலும் சரியான வேலை கிடைக்கவில்லை. அவரின் மனைவி பாரதி பள்ளிக் கல்வியை மட்டுமே முடித்திருந்தார். குடும்பத்தில் உள்ள வறுமை காரணமாக கடந்த 2017 முதல் இரண்டு ஆண்டுகள் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரிவதற்காக துபாய் சென்றார் பாரதி. அதன் பின் ஓரளவு பொருளாதாரச் சிக்கலின்றி அவர்கள் வாழத் தொடங்கினர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாரதி இந்தியாவுக்குத் திரும்பினார். பின்னர் கடந்த மார்ச் மாதம் தன் ஏழு மாதக் கைக்குழந்தை தேவேஷுடன் மீண்டும் துபாய் சென்ற பாரதி, அங்குள்ள வீடு ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார் பாரதி. சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

மருத்துவமனையில் பாரதி சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவரின் குழந்தையை அங்கிருந்த பாரதியின் சக தோழிகள் பாதுகாப்புடன் பராமரித்து வந்தனர். பாரதிக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த மே மாதம் 29ஆம் தேதி பாரதி உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரின் கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடலை இந்தியா கொண்டு வருவதற்கு பணமில்லை என்று கூறிய வேலவன், அங்கேயே இறுதிச் சடங்குகளை செய்து விடுமாறு எழுத்துபூர்வமாக எழுதிக்கொடுத்துள்ளார். அவரது அனுமதியின் பேரில் பாரதியின் உடல் துபாயிலேயே எரியூட்டப்பட்டது.

பெற்ற தாயை இழந்து, குடும்பத்தினர் யாரும் அருகில் இல்லாத நிலையில், பாரதியின் தோழிகளின் பராமரிப்பில் இருந்தான் குழந்தை தேவேஷ். அவன் நிலை கண்டு கண்கலங்கிய பாரதியின் தோழிகள், இதுகுறித்து துபாய் நகர திமுக அமைப்பாளர் எஸ்.எஸ்.முகமது மீரானின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.

இதன் பிறகு அடுத்தடுத்த பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்றன. அமைச்சர் பொன்முடியின் மகனும் கள்ளக்குறிச்சி எம்.பியுமான கௌதம சிகாமணி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் பார்வைக்கு, குழந்தை படும் துயர் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, எரியூட்டபட்ட பாரதியின் அஸ்தியுடன் 11 மாதக் குழந்தை தேவேஷை, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் இண்டிகோ விமானம் மூலம் துபாயிலிருந்து நேற்று அழைத்து வந்து வேலவனிடம் ஒப்படைத்தார்.

இது குறித்து பாரதியின் கணவர் வேலவன், “என் மனைவி பாரதி வறுமை காரணமாக துபாய் நாட்டுக்கு வீட்டுப் பணிப்பெண் வேலைக்குச் சென்றார். ஆனால் கொரோனாவால் அவருக்கு இப்படியொரு துயரமான முடிவு ஏற்பட்டுவிட்டது. மனைவியை கொரோனாவுக்கு பலி கொடுத்த நிலையில், என் 11 மாதக் குழந்தை அங்கு மனைவியின் தோழிகளின் உதவியில் இருந்தான். இந்த நிலையில் மகனை அழைத்து வர உதவிபுரிந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

மேலும், கெளதம சிகாமணி எம்.பி தன் குழந்தைகளின் படிப்புச் செலவை ஏற்றுக்கொள்வதாகவும், பொருளாதார ரீதியாக உதவி புரிவதாகவும் உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் வேலவன்.

- ராஜ்

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

சனி 19 ஜுன் 2021