மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 ஜுன் 2021

இனி, தங்க நகைகளுக்கு ‘ஹால்மார்க்’ கட்டாயம்!

இனி, தங்க நகைகளுக்கு ‘ஹால்மார்க்’ கட்டாயம்!

‘தங்க நகைகளுக்கு ஹால்மார்க் கட்டாயம்’ என்ற மத்திய அரசின் உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

தங்க நகைகளின் தரத்தை உறுதி செய்யவும், நுகர்வோர்களைத் திருப்திப்படுத்தவும், இந்தியாவை உலக அளவில் முக்கிய தங்க சந்தையாக மேம்படுத்துவதற்காகவும் தங்க நகைகளில் ஹால்மார்க் முத்திரை பதிப்பதைக் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டு வந்தது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினருடன் மத்திய அரசு விரிவான ஆலோசனைகளை நடத்தி வந்தது. இதன் அடிப்படையில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் அனைவரும் தங்க நகைகளில் ஹால்மார்க் தரத்தை உறுதி செய்ய வேண்டும். மேலும் 20, 23 மற்றும் 24 காரட் தங்க நகைகளுக்கும் ஹால்மார்க் அனுமதிக்கப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது.

தங்க நகைகளுக்கு ஹால்மார்க் கட்டாயமாக்கப்படுவதன் மூலம் நுகர்வோர் திருப்தி மற்றும் நம்பிக்கை உறுதிபடுத்தப்படும் என மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

அதேநேரம் ஆண்டுக்கு 40 லட்சத்துக்கு கீழ் வர்த்தகம் நடைபெறும் சிறிய வியாபாரிகளுக்கு இந்த ஹால்மார்க் உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதைப்போல கைக்கடிகாரங்கள், பவுன்டென் பேனாக்கள், சிறப்பு வகையான நகைகள் ஆகியவற்றுக்கும் ஹால்மார்க்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் சர்வதேச கண்காட்சிகளுக்காக அரசு வர்த்தகக் கொள்கைகளின் அடிப்படையில் ஏற்றுமதி செய்தல், மறு இறக்குமதி மற்றும் அரசால் அங்கீரிக்கப்பட்ட பி 2 பி உள்நாட்டு கண்காட்சிகளுக்கான நகைகள் போன்றவையும் கட்டாய ஹால்மார்க்கிலிருந்து விலக்கு பெறுகின்றன.

புதிய நகைகளுக்கு ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டு இருக்கும் அதேநேரம், மக்களிடம் இருக்கும் ஹால்மார்க் இல்லாத பழைய நகைகளை நகை வியாபாரிகள் அப்படியே பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதைப்போல உற்பத்தியாளர்கள், மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் ஹால்மார்க் நகைகளுக்கு மாறுவதற்காக போதுமான கால அளவு வழங்கும் வகையில், ஆகஸ்ட் இறுதிவரை அபராதம் விதிக்கப்படாது என மத்திய அரசு கூறியுள்ளது.

மத்திய அரசின் இந்தப் புதிய உத்தரவால் எழும் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்ய சிறப்பு கமிட்டி அமைக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் இது தொடர்பான ஆக்கபூர்வமான பரிந்துரைகளை வரவேற்பதாக மத்திய வர்த்தக மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (ஜூன் 17) மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.77-ம், பவுனுக்கு ரூ.616-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.4,500-க்கும், ஒரு பவுன் ரூ.36,000-க்கும் விற்பனை ஆனது.

தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. வரும் நாட்களில் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள், திருமணம் உள்ளிட்ட விசேஷ தினங்கள் அதிக அளவில் வருகிறது. இந்த நேரத்தில் விலை குறைந்து இருப்பதும் ஹால் மார்க்குடன் விற்பனையாக இருப்பதும் நகை வாங்குவோரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

-ராஜ்

உலக பட்டினிக் குறியீடு: இந்தியாவுக்கான இடம் - மோடியை வாழ்த்திய ...

5 நிமிட வாசிப்பு

உலக பட்டினிக் குறியீடு: இந்தியாவுக்கான இடம் -  மோடியை வாழ்த்திய  கபில் சிபல்

வேலைவாய்ப்பு: இந்துசமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்துசமய அறநிலையத் துறையில் பணி!

அனிதா முதல் அனு வரை... : தொடரும் நீட் தற்கொலைகள்!

5 நிமிட வாசிப்பு

அனிதா முதல் அனு வரை... :  தொடரும் நீட் தற்கொலைகள்!

வெள்ளி 18 ஜுன் 2021