வறட்சி: விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் நாவல் விளைச்சல்!

public

தமிழ்நாட்டில் வறட்சியிலும் விவசாயிகளுக்குக் கைகொடுத்த நாவல்பழ விளைச்சலால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மா, பலா, வாழை, பப்பாளி, கொய்யா, சப்போட்டா, சீத்தா, இலந்தை உள்ளிட்ட பல்வேறு பழ வகைகள் அந்தந்த மாத சீசனில் அறுவடையாகி பலனுக்கு வருவது வழக்கம். இந்த நிலையில் மருத்துவக்குணம் நிறைந்த நாவல்பழ மரங்கள் கரூர் மாவட்டத்தில் கரூர், கிருஷ்ணராயபுரம், மாயனூர், லாலாபேட்டை உள்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும், காவிரி கரையோரத்திலும் அதிக அளவில் உள்ளன.

இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஊரடங்கு ஒருபுறமிருக்க… கரூர் மாவட்டத்தில் பல பகுதிகள் கடும் வறட்சியான பகுதிகளாக காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் நாவல் மரங்களை வைத்து பராமரித்து வருகின்றனர்.

கடும் வறட்சியை தாங்கக் கூடிய இந்த நாவல் மரம் ஆண்டுதோறும் ஒருமுறை மட்டும் ஜூலை மாத கடைசியில் மகசூல் தரும். அதன்படி கடந்த மே மாதம் பூப்பூத்து ஜூன் மாதம் பிஞ்சு பிடித்து அடுத்த மாதம் (ஜூலை) பழம் பழுக்கும் நிலை ஏற்படும்.

இந்த வருடம் அவ்வப்போது பெய்த மழையின் ஈரத்தினால் நாவல் மரங்களில் பூக்கள் பூத்து, பிஞ்சுகள் பிடித்து செழிப்பாக காணப்படுகின்றன. இதுகுறித்து பேசிய கரூர் பகுதியைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள், “கரூர் மாவட்டத்தில் விளையும் நாவல் பழங்கள் சிறியதாக இருந்தாலும், அதிக சுவை கொண்டதாக உள்ளன. இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்தவையாக உள்ளன.

குடல் புண்ணை போக்கவும், பித்தத்தைத் தணிக்கவும், மலச்சிக்கலை குணப்படுத்தவும், இதயத்தை சீராக இயங்க செய்யவும், ரத்த சோகையை குணப்படுத்தவும், சிறுநீரக வலியை நிவர்த்தி செய்யவும், சிறுநீரக கற்களைக் கரைக்கவும், மண்ணீரல் மற்றும் கல்லீரலில் உள்ள கோளாறுகளை நீக்கவும் நாவல் பழம் உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் நாவல் பழம் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். இதனால் நீரிழிவு நோயாளிகள் நாவல் பழத்தின் விதைகளை உலர வைத்து, பொடியாக்கி தண்ணீருடன் கலந்து காலையும், மாலையும் குடிக்கின்றனர்” என்கின்றனர்.

இந்த நிலையில், கரூர் மாவட்ட பகுதிகளில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் அதிக அளவு நாவல் மரங்கள் இருப்பதால் இந்த ஆண்டு நாவல் பழங்கள் உற்பத்தி அதிக அளவு இருக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *