மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 17 ஜுன் 2021

மூன்றாவது அலை : மகாராஷ்டிரா கொடுத்த எச்சரிக்கை!

மூன்றாவது அலை :  மகாராஷ்டிரா கொடுத்த எச்சரிக்கை!

டெல்டா பிளஸ் என்ற மரபணு மாற்ற வைரஸ் மூலம் மகாராஷ்டிராவில் மூன்றாவது அலை உருவாகக் கூடும் என அம்மாநில மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை குறைந்து வருகிற நிலையில், மூன்றாவது அலை ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், நேற்று(ஜூன் 16) மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள், மாநில சுகாதார அமைச்சர் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மூன்றாவது அலையை எதிர்கொள்ள தேவையான ஏற்பாடுகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய முதல்வர் உத்தவ் தாக்கரே, ”டெல்டா பிளஸ் என்னும் மாறுபட்ட வைரஸின் மூலம் மூன்றாவது அலை உருவாகக் கூடும். கொரோனா முதல் அலை மகாராஷ்டிராவைத் தாக்கியபோது மாநிலத்தில் அடிப்படை வசதிகள் இல்லை. அதன்பின்னர் மருத்துவ உள்கட்டமைப்புகள் சீரமைக்கப்பட்டன. கொரோனாவுக்கு எதிரான இந்த போரில் தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது என்றாலும், சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. ஆர்டி-பிசிஆர் சோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டும். மேலும் பிபிஇ கருவிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்க வேண்டும்.

அதுபோன்று நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் மருந்துகள் மற்றும் சுகாதார உபகரணங்கள், மருத்துவமனைகளில் படுக்கை வசதி போன்றவை மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என மூத்த மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முதல் மற்றும் இரண்டாவது அலையில் இருந்து பாடம் கற்றுகொண்டோம். அதனடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக பின்பற்றவில்லையென்றால், மூன்றாவது அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று பேசினார்.

இதையடுத்து சுகாதார அதிகாரிகள் பேசும்போது, “ வைரஸின் மாறுபாடு காரணமாக முதல் அலையை விட இரண்டாவது அலையில் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர். அதுபோன்று மூன்றாவது அலையிலும் அதிகமானோர் பாதிக்கப்படலாம். மாநிலத்தில் முதல் அலையில் 19 லட்சம் பேரும், இரண்டாவது அலையில் 40 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டனர். மூன்றாவது அலையில் இதைவிட அதிக எண்ணிக்கையில் மக்கள் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு இருக்கிறது. அதில் 10 சதவிகிதம் குழந்தைகளாக இருக்கலாம். டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று பரவலின் வேகம், இப்போது உள்ளதை விட இருமடங்கு அதிகமாக இருக்கும்” என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து டாக்டர் ராகுல் பண்டிட் கூறுகையில், ”மூன்றாவது அலையை கட்டுக்குள் வைத்திருப்பது நம் கையில்தான் உள்ளது. கூட்ட நெரிசலான இடங்களை மக்கள் தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இரண்டு முக்கவசங்களை அணிய வேண்டும். அடிப்படை வழிமுறைகளை பின்பற்ற தவறினால், மூன்றாவது அலை பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்” என கூறினார்.

‘டெல்டா பிளஸ்’ என்ற புதிய மாறுபட்ட கொரோனா வைரஸ் கவலையளிக்க கூடியதாக இன்னும் வகைப்படுத்தப்படவில்லை. கவலையளிக்கக் கூடிய வகை என்றால், பரவும் வேகம் தீவிரமாக இருக்கும். இருப்பினும், இதுகுறித்து ஆராய்ந்து சரியான நடவடிக்கை எடுத்து கண்காணிக்க வேண்டும் என நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே. பால் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

வேலைவாய்ப்பு : மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

வியாழன் 17 ஜுன் 2021