மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 15 ஜுன் 2021

வரம்பு மீறிய வழக்கறிஞர்கள்: பார் கவுன்சிலுக்கு நீதிமன்றம் கேள்வி!

வரம்பு மீறிய வழக்கறிஞர்கள்: பார் கவுன்சிலுக்கு  நீதிமன்றம் கேள்வி!

ஊரடங்கில் வரம்பு மீறிய வழக்கறிஞர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த ஜூன் 6ஆம் தேதி சென்னை சேத்துப்பட்டு சிக்னல் அருகே போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆனந்தன் உள்ளிட்ட போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி விசாரித்தனர். அந்த காரில் வந்த சட்டப் படிப்பு படிக்கும் மாணவி ப்ரீத்தி ராஜனிடம் ஊரடங்கை மீறியதற்காக அபராத ரசீதை கொடுத்தனர். இதையடுத்து அவர் அங்கு நடந்த விஷயத்தை வழக்கறிஞரான தன் தாயிடம் கூறி அங்கு வரவழைத்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த அவரது தாயார் தனுஜா ராஜன், காவல்துறையினருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், போலீசாரை ஒருமையில் பேசினார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது.

இதையடுத்து தனுஜா ராஜன் மற்றும் அவரது மகள் மீது ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எனவே இருவரும் முன்ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை கடந்த ஜூன் 10ஆம் தேதி விசாரித்த நீதிபதி செல்வகுமார், முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு இன்று (ஜூன் 15) விசாரணைக்கு வந்தது. அப்போது ஊரடங்கு விதிமுறைகளை மீறும் வழக்கறிஞர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, மருத்துவம் மற்றும் காவல் துறையில் உள்ளவர்கள், முன் களப்பணியாளர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், வழக்கறிஞர்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றுவது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

மேலும், வழக்கறிஞர் தனுஜாவிற்கு முன் ஜாமீன் அளித்தால் அவர் அரசு மருத்துவமனைக்கு நிவாரண தொகையாக ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க தயாரா என்றும் கேள்வி எழுப்பினார்.

இந்த வழக்கில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலை பிரதிவாதியாக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதி ஊரடங்கில் வரம்பு மீறிய வழக்கறிஞர்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

தொடர்ந்து இந்த வழக்கை ஜூன் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

-பிரியா

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

பேருந்துகளில் சாதி, மத பாடல்கள் ஒலிபரப்பக் கூடாது!

3 நிமிட வாசிப்பு

பேருந்துகளில் சாதி, மத பாடல்கள் ஒலிபரப்பக் கூடாது!

செவ்வாய் 15 ஜுன் 2021