மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 ஜுன் 2021

பறிமுதல் செய்யப்படும் மதுபாட்டில்கள்: புகுந்து விளையாடும் போலீஸார்!

பறிமுதல் செய்யப்படும் மதுபாட்டில்கள்: புகுந்து விளையாடும் போலீஸார்!

பறிமுதல் செய்த மதுபாட்டில்களைக் குறைத்து கணக்கு காட்டிய இரண்டு போலீஸார் பணியிடை நீக்கம் செய்து ஈரோடு மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் உத்தரவிட்டுள்ள நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை விற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட திருச்சிற்றம்பலம் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உட்பட நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பு ஊரடங்கால் கடந்த வாரம் வரை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில், சட்ட விரோதமாக மதுபானம் விற்கப்படுவதைத் தடுக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு போலீஸார் கடந்த 8ஆம் தேதி சித்தோடு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தைத் தடுத்தி நிறுத்தி சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் வாகனத்தில் மது கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மதுவைக் கடத்தியதாக வாகன ஓட்டியை கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்து மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் 16 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மது விலக்கு போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 96 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதில் 16 மது பாட்டில்கள் மட்டுமே வழக்கில் கொண்டு வரப்பட்டதாகவும் போலீஸ் உயரதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்த மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கோபிசெட்டிபாளையம் மது விலக்கு தலைமை காவலர்கள் பூர்ணசந்திரன், பெரியசாமி ஆகியோர் பறிமுதல் செய்த மது பாட்டில்களைக் குறைத்து கணக்கு காட்டியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இரண்டு பேரையும் பணியிடை நீக்கம் செய்து ஈரோடு மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தினர் அப்பகுதியில் சட்ட விரோதமாகப் பதுக்கிவைத்து விற்கப்பட்ட 434 மதுபான பாட்டில்களை மே 8ஆம் தேதி பறிமுதல் செய்தனர்.

ஆனால், முறையாக வழக்கு பதிவு செய்யாமல், மதுபானம் பதுக்கி வைத்திருந்தவரை கைது செய்வதை விடுத்து, எச்சரிக்கை செய்து அனுப்பி உள்ளனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்களை காவல் நிலையத்தினர் வேறொரு நபரிடம் விற்றுவிட்டதாகப் புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக, தஞ்சாவூர் சரக டிஐஜி உத்தரவின்பேரில், பட்டுக்கோட்டை டிஎஸ்பி புகழேந்தி கணேசன் விசாரணை மேற்கொண்டார். காவல் நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் டிஐஜியிடம் டிஎஸ்பி அறிக்கை அளித்தார்.

இதைத்தொடர்ந்து, திருச்சிற்றம்பலம் காவல் ஆய்வாளர் அனிதா கிரேசி, உதவி ஆய்வாளர் ராஜ்மோகன், சிறப்பு உதவி ஆய்வாளர் துரையரசன், தலைமைக் காவலர் ராமமூர்த்தி ஆகியோரை தஞ்சாவூர் சரக டிஐஜி பிரவேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

-ராஜ்

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

திங்கள் 14 ஜுன் 2021