மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 13 ஜுன் 2021

நாளை கிருஷ்ணா நீரைத் திறந்துவிடும் ஆந்திரா!

நாளை கிருஷ்ணா நீரைத் திறந்துவிடும் ஆந்திரா!

தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள், ஆந்திர நீர்வளத்துறை தலைமை பொறியாளருக்குக் கடந்த சில தினங்களுக்கு முன் கடிதம் எழுதி இரு மாநில ஒப்பந்தத்தின்படி மீதம் வழங்கவேண்டிய நீரை வழங்குமாறு வலியுறுத்தி இருந்தநிலையில், நடப்பாண்டில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நான்கு டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை நாளை (ஜூன் 14) வழங்க ஆந்திர அரசு முன்வந்துள்ளது.

சென்னையின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், ஆந்திர அரசு தெலுங்கு - கங்கை திட்டத்தின் கீழ் ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்துக்கு 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை வழங்கி வருகிறது. ஆந்திராவிலிருந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ‘ஜீரோ பாயின்ட்’ வந்தடையும் கிருஷ்ணா நதி நீரானது, அங்கிருந்து கால்வாய் வழியாக 25 கிலோமீட்டர் தூரம் பயணித்து பூண்டி ஏரியை அடைகிறது.

பின்னர் அங்கிருந்து சென்னையின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் உள்ளிட்ட பிரதான ஏரிகளுக்குத் தேவைக்கேற்ப அனுப்பி வைக்கப்படுகிறது.

ஆனால், ஆந்திர அரசு ஒப்பந்தத்தின் படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 12 டிஎம்சி நீரை முறையாக வழங்குவதில்லை. கடந்தாண்டு 2019-2020 நீர்நிலைகளில் இருப்பு மிகவும் குறைவாக உள்ளதாகக் கூறி தமிழகத்துக்கு வெறும் 8.05 டிஎம்சி நீர் மட்டுமே வழங்கப்பட்டது. நடப்பாண்டிலும் 2020-2021 ஆந்திர அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய முதல் தவணை கிருஷ்ணா நீரை வழங்கவில்லை.

பின்னர், செப்டம்பர் மாத இறுதியில் ஆந்திராவில் தென்மேற்குப் பருவமழையால் கண்டலேறு அணையில் நீர் இருப்பு கணிசமாக உயர்ந்ததால், கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட்டது. சுமார் ஏழு மாதங்கள் தொடர்ந்து ஆந்திரா, தமிழகத்துக்குக் கிருஷ்ணா நதி நீரை வழங்கியது. அதன் மூலம் தமிழகம் பெறவேண்டிய 12 டிஎம்சியில் 7.65 டிஎம்சி நீர் கிடைத்திருந்தது.

தற்போது சென்னையின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் ஏரிகளில் 6.91 டிஎம்சி அளவுக்கு நீர் கையிருப்பு உள்ளது. இருப்பினும், கோடைக்காலம் என்பதால் ஏரிகளின் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதன் காரணமாக, தமிழக நீர்வளத்துறை, ஆந்திரா வழங்க வேண்டிய நான்கு டிஎம்சி கிருஷ்ணா நீரை உடனடியாக வழங்குமாறு கடந்த ஏப்ரல் மாதம் ஆந்திர நீர்வளத்துறைக்குக் கடிதம் எழுதியது. ஆனால், தமிழகத்தின் கோரிக்கையினை ஆந்திரா அப்போது மறுத்துவிட்டது. அதனால், தமிழகத்துக்கு மே மாதம் கண்டலேறு அணையிலிருந்து நீர் திறக்கப்படாமல் போனது.

அதனையடுத்து, தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் மீண்டும் ஆந்திர நீர்வளத்துறை தலைமை பொறியாளருக்குக் கடந்த சில தினங்களுக்கு முன் கடிதம் எழுதி இரு மாநில ஒப்பந்தத்தின்படி மீதம் வழங்க வேண்டிய நீரை வழங்குமாறு வலியுறுத்தி இருந்தனர். இந்த நிலையில், நடப்பாண்டில் தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நான்கு டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை வழங்க ஆந்திரா முன்வந்துள்ளது. அதன்படி, நாளை (ஜூன் 14) ஆந்திராவின் கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்குக் கிருஷ்ணா நதி நீரைத் திறப்பதாக ஆந்திர பொதுப்பணித்துறை உறுதி அளித்திருக்கிறது.

ஆந்திர அரசு கூறியுள்ளபடி நாளை (ஜூன் 14) நான்கு டிஎம்சி நீரை திறந்து விடும்பட்சத்தில் தமிழகத்துக்கு இந்தாண்டு கிடைக்க வேண்டிய 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீர் முழுமையாக கிடைத்து விடும். சென்னையின் குடிநீர் தேவையும் பூர்த்தியாகும்.

-ராஜ்

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

ஞாயிறு 13 ஜுன் 2021