மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 13 ஜுன் 2021

அதிராம்பட்டினம்: களைகட்டும் கருவாடு விற்பனை!

அதிராம்பட்டினம்: களைகட்டும் கருவாடு விற்பனை!

ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் அதிராம்பட்டினத்தில் கருவாடு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது கோடை வெயில் சுட்டெரிப்பதால் சிறிய மீன்களை காயவைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் கருவாடு வியாபாரம் செய்பவர்கள் துறைமுகப் பகுதியில் மீன்களை ஏலத்துக்கு எடுத்து உப்பு தண்ணீரில் ஊறவைத்து வெயிலில் உலரவைத்து அதை பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, பேராவூரணி, மதுக்கூர் மற்றும் கிராம பகுதியில் உள்ள மார்க்கெட் மற்றும் சந்தை பகுதிகளில் விற்பனை செய்து வந்தனர்.

கொரோனா தொற்று காரணமாக அரசு ஊரடங்கு அறிவித்ததைத் தொடர்ந்து அதிராம்பட்டினத்தில் இயங்கி வந்த மீன் மார்க்கெட்டுகள் மூடப்பட்டன. இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் தொடர்ந்து மீன் பிடிக்க கடலுக்குச் செல்லாமல் இருந்து வந்தனர். இதனால் கருவாடு விற்பனை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் அரசு தளர்வுடன் கூடிய ஊரடங்கு அறிவித்ததைத் தொடர்ந்து மீன் மார்க்கெட் இயங்க தொடங்கியது.

தற்போது அதிராம்பட்டினம் கடற்பகுதியில் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இதனால் கருவாடு விற்பனை செய்யும் தொழிலாளர்கள் மீன்பிடி துறைமுகத்துக்கு சென்று மீன்களை ஏலத்தில் எடுத்துக்கொண்டு கருவாடு உற்பத்தி செய்து தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளதால் மீன்களை கருவாடுகளாக்க அவற்றை வெயிலில் காயவைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது தோகை, கத்தாலை, பன்னா, வாவல், திருக்கை போன்ற கருவாடுகளை கடைகள் மற்றும் சந்தைகளில் விற்பனை செய்ய முடியாததால் வெளியூர் வியாபாரிகள் கருவாடுகளை கிலோ கணக்கில் விற்பனைக்கு வாங்கி செல்கின்றனர். இதனால் அதிராம்பட்டினம் பகுதியில் கருவாடு விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

ஒரு கிலோ தோகை கருவாடு கிலோ ரூ.40-க்கும், ஒரு கிலோ கத்தாலை கருவாடு ரூ.60-க்கும், பன்னா கருவாடு கிலோ ரூ.65-க்கும், சிறிய வகை வெளவல் கருவாடு கிலோ ரூ.400-க்கும், ஒரு கிலோ திருக்கை கருவாடு ரூ.450-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து பேசிய கருவாடு உற்பத்தியாளர்கள், “நாங்கள் மீன்களை விலைக்கு வாங்கி உப்பு போட்டு ஊறவைத்து வெயிலில் காய வைத்து விற்பனை செய்யும் நேரத்தில் திடீரென மழை வந்ததால் எங்கள் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டது. மேலும் முழு ஊரடங்கால் தொழில் இல்லாததால் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தோம்.

சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் மீண்டும் கருவாடுகள் உலர வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். கடலில் மீன் வரத்து குறைவாக உள்ள நிலையில் பெரிய மீன்கள் வரத்து இல்லாததால் சிறிய வகை மீன்களை வாங்கி வெயிலில் உலர வைத்து வெளியூர் வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

-ராஜ்

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

ஞாயிறு 13 ஜுன் 2021