மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 11 ஜுன் 2021

காவலருடன் வாக்குவாதம்: வழக்கறிஞர் விரைவில் கைது!

காவலருடன் வாக்குவாதம்: வழக்கறிஞர் விரைவில் கைது!

கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞருக்கு முன் ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை சேத்துபட்டு பகுதியில் கடந்த வாரத்தில் பெண் வழக்கறிஞர் தனுஜா ராஜனின் மகள் ப்ரீத்தி ராஜனுக்குக் காவல்துறையினர் அபராதம் விதித்தனர். இந்த விஷயத்தை ப்ரீத்தி, வழக்கறிஞரான தனது தாயாருக்குத் தெரிவித்து, சம்பவ இடத்துக்கு வரவழைத்தார். அங்கு வந்த தனுஜா ராஜன், முகக்கவசம் இல்லாமல் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமில்லாமல், காவல்துறையினரை மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசின வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வழக்கறிஞர் தனுஜா மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக நேரில் ஆஜராகும்படி காவல்துறை சார்பில் இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இந்த நிலையில், தனக்கும் தனது மகளுக்கும் முன் ஜாமீன் வழங்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று (ஜூன் 10) நீதிபதி செல்வக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காவல்துறை கூறுவது போல் மீன் வாங்க செல்லவில்லை. மருந்து வாங்கச் சென்ற மகளை காவல்துறை தடுத்ததால், தனுஜா அங்கு வந்து காவல்துறையிடம் விளக்கம் கேட்டார். காவலர்களைப் பேசிய கடுமையான மோசமான வார்த்தைகள் அடங்கிய வீடியோ எடிட் செய்யப்பட்டு, வழக்கறிஞர் சமூகத்தினரின் பெயரை கெடுக்கும் வகையில், ஒரு பகுதி மட்டுமே வெளியிடப்பட்டதாகவும், உணர்ச்சி வசப்பட்டு மட்டுமே பேசியதாகவும், உள்நோக்கம் ஏதும் இல்லை எனவும் வாதிடப்பட்டது.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காவல்துறையினரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளதால், முன் ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மக்களைக் காக்கும் பணியிலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தும் பணியிலும் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினரிடம் இதுபோல நடந்து கொள்ளக் கூடாது என அறிவுறுத்தினார்.

மேலும், இதுபோன்ற சம்பவத்தில் முன் ஜாமீன் வழங்கினால் தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும் என்பதாலும், வழக்கறிஞரின் செயல்பாடு சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதாலும், இருவருக்கும் முன் ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறிய நீதிபதி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம்.

-வினிதா

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்! ...

3 நிமிட வாசிப்பு

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்!

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு ...

2 நிமிட வாசிப்பு

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு அனுமதி!

வெள்ளி 11 ஜுன் 2021