மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 10 ஜுன் 2021

யானைகளுக்கு கொரோனா பரிசோதனை!

யானைகளுக்கு கொரோனா பரிசோதனை!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒன்பது சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, அதில் நீலா எனும் பெண் சிங்கம் இறந்ததைத் தொடர்ந்து தெப்பக்காடு கும்கி யானைகள் முகாமில் உள்ள 28 யானைகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் நூற்றாண்டு புகழ்பெற்ற தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு இரண்டு குட்டி யானைகள், ஐந்து கும்கி யானைகள் உட்பட 28 வளர்ப்பு யானைகள் உள்ளன. தற்போது கொரோனா பரவல் உள்ளதால் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை.

சமீபத்தில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒன்பது சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் நீலா என்ற பெண் சிங்கம் கொரோனாவுக்கு பலியானது. இதையடுத்து, முதுமலை தெப்பக்காடு, டாப்சிலிப் உள்ளிட்ட காப்பகங்களில் உள்ள முகாம் யானைகளுக்கும் கொரோனா மாதிரி பரிசோதனை செய்ய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உத்தரவிட்டார்.

இதன் தொடர்ச்சியாக முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள 28 யானைகளுக்கும் கொரோனோ பரிசோதனைக்காக சளி மாதிரிகள் சேகரிக்கும் பணி நடந்தது.

யானைகளிடம் இருந்து சேகரிக்கப்படும் மாதிரிகள் உத்தரப்பிரதேச மாநிலம் இசாட் நகரில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி மையத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பகக் கள இயக்குநர் கிருஷ்ணகுமார் கௌசல், “யானைகளிடம் பெறப்பட்ட சளி மாதிரிகள் உத்தரப்பிரதேசத்தில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படும். இதேபோல் முன்னுரிமை அடிப்படையில் பாகன்கள் உள்ளிட்ட 52 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது’’ என்றார்.

இதைத்தொடர்ந்து, பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட உலாந்தி வனச்சரகத்தில், கோழிகமுத்தி யானைகள் முகாமில் உள்ள 22 யானைகளுக்கும் வரகளியார் பயிற்சி முகாமில் உள்ள ஆறு யானைகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கோழிகமுத்திக்கும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் கூறுகையில், ‘‘இங்கு எடுக்கப்படும் மாதிரிகள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள, இந்திய கால்நடை துறை ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. விரைவில் ஆய்வு முடிவுகள் வெளிவரும். யானைகளுக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டால், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்று கூறியுள்ளார்.

-ராஜ்

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

3 நிமிட வாசிப்பு

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

வேலைவாய்ப்பு : இஎஸ்ஐசி-யில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  இஎஸ்ஐசி-யில் பணி!

வியாழன் 10 ஜுன் 2021