மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 10 ஜுன் 2021

சோலை - புல்வெளி காடுகள் - ஓர் உன்னத உயிர்ச்சூழல் அமைப்பு!

சோலை - புல்வெளி காடுகள் - ஓர் உன்னத உயிர்ச்சூழல் அமைப்பு!

மு.அ.பிரெடிட்

உலகில் பலவிதமான உயிர்ச்சூழல் அமைப்புகள் உள்ளன. சிறிய குளம் முதல் பெரிய பாலைவனம்கூட ஒரு தனித்துவமான உயிர்ச்சூழல் அமைப்புகளாகும். எவ்வாறாக இருப்பினும், காடுகளும் மலைகளும் பெரும்பாலும் பிற உயிர்ச்சூழல் அமைப்புகளுக்கு ஆதாரமாக விளங்குகின்றன. அந்த வகையில், மலைகளின் உச்சியில் வாழும் ஓர் அரிய வகை விலங்கினம் பற்றியும், அவற்றின் வாழ்விடமாக திகழும், சோலை - புல்வெளி காடுகள் பற்றிய ஒரு கட்டுரைதான் இது.

விலங்கினங்களில் மலைவாழ் குளம்பினங்கள் (Mountain Ungulate) என்று அறியப்படும் இன வகையைச் சார்ந்தவை வரையாடுகள் (Tahr). ‘வரை’ என்றால் ‘செங்குத்தான பாறை பகுதி’. செங்குத்தான பாறை நிறைந்த பகுதிகளில் வாழக்கூடிய ஆடு என்பதனால் இவை வரையாடு எனப் பெயர் பெற்றது. இவை உலக அளவில் அறிவியல் சமூகத்தினால் மூன்று வகையாக வகைப்படுத்தப்பட்டு அறியப்படுகின்றன. அவை இமயமலைத் தொடர்களில் வசிக்கின்ற இமயமலை வரையாடுகள் (Himalayan Tahr - Hemitragus Jemlahicus), அரேபிய மலைத் தொடர்களில் காணக்கூடிய அரேபிய மலை (Arabian Tahr - Arabitragus Jayakari) வரையாடுகள் மற்றும் நமது தற்போதைய தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் எல்லைகளுக்கு உட்பட்ட மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர் பகுதிகளில் மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கின்ற அரிய வகை நீலகிரி வரையாடுகள் (Nilgiri Tahr - Nilgiritragus Hylocrius) ஆகும்.

இந்திய நிலப்பரப்பில் காணக்கூடிய பன்னிரண்டு வகையான மலைவாழ் குளம்பினங்களில், தென்னிந்தியாவில் காணப்படுகின்ற ஒரே ஒரு இன வகைதான் இந்த நீலகிரி வரையாடுகள். இந்த நீலகிரி வரையாடுகள்தான் தமிழகத்தின் மாநில விலங்கு என்பது அதன் இன்றியமையா பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்தியம்புவதாகவே அமைகிறது.

தமிழகத்தின் மாநில விலங்கான வரையாட்டைப்பற்றி, தமிழ்ச் சங்க இலக்கியம் பல இடங்களில் எடுத்துரைக்கிறது. பண்டைய தமிழகத்தின் ஐந்திணை கோட்பாட்டில், குறிஞ்சி திணையைப் பற்றிய பெரும்பான்மையான குறிப்புகளில் வரையாடு முக்கியத்துவம் பெறுகிறது. இத்தனை சிறப்புகள் பொருந்திய வரையாட்டின் மற்றொரு சிறப்பு, இவை மலை சோலை - புல்வெளி சுற்றுச்சூழல் அமைப்பில் (Montane Shoal - Grassland Ecosystem) மட்டுமே வாழக்கூடியவை. ஓங்கிய சிகரங்களின் பாறை முகடுகளிலும், சரிவுகளிலும் அநாயாசமாக தாவி திரிபவை. இவ்வகை சுற்றுச்சூழல் அமைப்பின் பாதுகாப்புக்கு வரையாடு பெரும் பங்கு வகிக்கிறது. எனவே வரையாட்டை 'மலைகளின் பாதுகாவலன்' (Mountain Guardian) என்று அழைக்கிறார்கள், இயற்கை ஆர்வலர்கள்.

மலை சோலை - புல்வெளி சுற்றுச்சூழல் அமைப்பு (Montane Shola - Grassland Ecosystem)

தென்னிந்தியாவில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைகளில் காணப்படுகின்ற சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஓர் இன்றியமையா சுற்றுச்சூழல் அமைப்புதான் இந்த மலை சோலை - புல்வெளி சுற்றுச்சூழல் அமைப்பு. இவை உலக அளவில் மிகவும் அச்சுறுத்தப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாகும். பரந்துவிரிந்து கிடக்கின்ற புல்வெளிகளும் அதன் பள்ளங்களில் உள்ள குட்டையான, அடர்ந்த விதானம் (Canopy) கொண்ட மரங்களை உடைய சோலைவனம் (Shola) நிறைந்த ஒரு தனித்துவமான பகுதிகளே இந்த மலை சோலை - புல்வெளி சுற்றுச்சூழல் அமைப்பு என்று அறியப்படுகிறது. இந்த சோலை - புல்வெளிகள் பல்வேறு காரணங்களால் பல நூறு ஆண்டுகளாக எந்த பரிணாம மாற்றங்கள் நிகழாமல் இருப்பதினால் இது இறுதி தாவரங்கள் (Climax Vegetation) என்றும் அறியப்படுகிறது.

ஒவ்வொரு காலகட்டத்துக்கேற்ப உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு புரிதலின் அடிப்படையில், ஆங்கிலேயர் காலத்தில் உள்ள வன மேலாளர்கள், இந்திய வெப்ப மண்டல மலை சோலை - புல்வெளிகளில் (Tropical Montane Shola - Grassland) உள்ள புல்வெளிகளைச் சீரழிந்த சுற்றுச்சூழல் அமைப்புகளாக, தவறாகப் புரிந்துகொண்டனர். அந்த புல்வெளிகளில் பெரும்பான்மையான இடங்கள் தொடக்கத்தில் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டன. அதிலும் குறிப்பாக நீலகிரி மலைகளின் புல்வெளிகளிலும், கேரளாவில் உள்ள மூணாறு, திருநெல்வேலி மாஞ்சோலை போன்ற இடங்களில் உள்ள புல்வெளிகளில் பெரும் பகுதிகள் தேயிலை தோட்டங்களாக மாற்றப்பட்டன. பின்னர் மேலும் பெரும்பான்மையான புல்வெளிகள் சீரழிந்த சுற்றுச்சூழல் இடங்களாகக் கருதி வேற்றிட மரங்கள் (Exotic Species), செடிகள் கொண்டு நடவு செய்தார்கள். அதிலும் அதிக அளவிலான பகுதிகள் ஒற்றை வளர்ப்பு காடுகளாக (Monoculture Plantations) மாற்றப்பட்டன. இவ்வாறு மாற்றப்பட்ட இடங்களில் பெரும்பான்மையான பகுதிகளில் பல்லுயிர் இழப்பு (Biodiversity Loss) அதிக அளவில் ஏற்பட்டது என்பது பிற்கால புரிதல். இவ்வாறு மாற்றப்பட்ட இடங்களில் பெரும் பகுதிகள் நீலகிரி மலைகள், பழனி மலைகள், மூணாறு மலைகளில் அமைந்துள்ளன.

மலை சோலை - புல்வெளி சுற்றுச்சூழல் பாதுகாப்பு முக்கியத்துவம்

மற்ற உயிர்ச்சூழல் (Ecosystem) அமைப்புகளைக் காட்டிலும் இவ்வகை உயிர்ச்சூழல் அமைப்புகளில் பல்லுயிர் பெருக்கங்களை (Biodiversity) உயர்ந்த அளவில் பதிவு செய்துள்ளார்கள். மேலும், இவ்வகை உயிர்ச்சூழல்களில் உலகளவில் இந்த மலைப்பகுதிகளில் மட்டும் வாழக்கூடிய அச்சுறுத்தப்பட்ட இனங்கள் (Threatened Species) அதிக அளவில் காணப்படுகின்றன. இவ்வகை உயிர்ச்சூழல் மண்டலங்கள்தான் அதிக அளவிலான நீர் பாதுகாப்பினை உறுதி செய்கிறது. மேலும் இந்த உயிர்ச்சூழல் மண்டலங்களில்தான் இயற்கையான ஊற்றுக்கண்ணுகள் (Natural Springs) பிறக்கின்றன. அவை சிற்றோடைகளாக உருவாகி, பேரோடைகளாக மாறி, பல பேரோடைகள் ஒன்றுகூடி ஆறுகளாகவும், பேராறுகளாகவும் உருவாகி இந்த மலைகளைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள மக்களுக்கான குடிநீர் மற்றும் விவசாயத்துக்கான முக்கிய நீர் ஆதாரங்களாக அமைகிறது.

தென்னிந்தியாவில் இமாலய மலைத்தொடர் போன்று பனிபோர்த்திய சிகரங்கள் இல்லை என்றபோதிலும், வற்றாத ஜீவநதிகள் பல உள்ளன. அவை அனைத்தும், மலை உச்சியில் படர்ந்து விரிந்து காணப்படும், சோலை - புல்வெளி சுற்றுச்சூழல் அமைப்பிலிருந்தே உருவாகின்றன. சோலை - புல்வெளிகள், காற்றில் உள்ள ஈரப்பதத்தை ஈர்த்து, தக்கவைப்பதோடு, அவற்றை மெல்ல மெல்ல வெளியேற்றி, ஆறுகளாக உருவெடுக்க செய்கின்றன. தென்னிந்தியாவின் தண்ணீர் பாதுகாப்பை உறுதிசெய்ய, சோலை - புல்வெளிகளைப் பாதுகாப்பது மிகவும் அவசியம்.

லேண்ட்சாட் படங்களை (LANDSAT Imageries) பயன்படுத்தி வெளிவந்த சமீபத்திய ஆய்வுக் கட்டுரையில், கடந்த 4-5 பதிற்றாண்டுகளில் (Decade), உயர்நில மலைவெளிகளில் (High Elevation Plateaus), 60 சதவிகிதம் வரை இயற்கை நிலப்பரப்பில் கணிசமான மாற்றங்கள் (Significant Landscape Modifications) ஏற்பட்டுள்ளது எனவும், மேலும் ஒற்றை வளர்ப்பு காடுகள் மட்டும் (23 சதவிகிதம், 340 சதுர கி.மீ.) நிலப்பரப்பைக் கொண்டுள்ளது எனவும் கண்டறியப்பட்டுள்ளது. மற்றும் ஓர் ஆய்வில், மேற்குத்தொடர்ச்சி மலைகளில் 62,000 ஏக்கருக்கும் மேல் உள்ள நிலங்கள் திரும்பவும் இயற்கையான சோலை - புல்வெளிகளாக மாற்றுவதற்கு ஏதுவான நிலங்களாக உள்ளன எனக் கண்டறியப்பட்டுள்ளன.

இந்தப் பிரச்னையின் முக்கியத்துவத்தை உணர்ந்த நீலகிரி மலைகளில் உள்ள இயற்கை ஆர்வலர்கள், நீலகிரி மலைகளில் உள்ள மொத்த ஒற்றை வளர்ப்பு காடுகளையும் முறையே சோலை - புல்வெளிகளாக மறுசீரமைக்க வேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு முன் தமிழக பசுமை தீர்வாணையத்தில் ஒரு பொதுநல வழக்கைத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கின் தீர்ப்பு, பிற்காலத்தில் சோலை - புல்வெளிகளின் பாதுகாப்பு முக்கியத்துவம் எவ்வாறு அமையும் என்பதாக ஏதிர்பார்க்கப்படுகிறது.

உயிர்ச்சூழல் மண்டலங்களில் உள்ள பிரச்னைகளும் தீர்வுகளும்

உலகளாவிய இயற்கை நிதியம் (WWF) மேற்கொண்டுள்ள, நீர் மேலாண்மையில், பலதரப்பட்ட வன வகைகளின் பங்கு என்னும் சமீபத்திய ஆய்வு ஒன்றில், ஒற்றை வளர்ப்பு காடுகளில் (Monoculture Plantation) ஆண்டு ஒன்றுக்குத் தாவர இலைகளிலிருந்து ஏற்படும் நீராவி இழப்பை (Evapo -transpirational Loss) எட்டு சதவிகிதம் வரை ஏற்படுத்துகிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இவ்வகை காடுகளில் பல்லுயிர் பெருக்கத்துக்கான சூழ்நிலைகள் குறைகின்றன என்று அறியப்படுகிறது. ஒற்றை வளர்ப்பு காடுகளால் பலவகையான வனவிலங்கினங்களின் வாழ்விடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பல்வேறு ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகளாவிய இயற்கை நிதிய (WWF) ஆய்வில் இயற்கையான சோலை - புல்வெளி காடுகளே நீர் பாதுகாப்பை அதிக அளவில் உறுதி செய்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே, தற்போதைய சுற்றுச்சூழல் பாதுகாப்பின் புரிதலுக்கேற்ப ஒற்றை வளர்ப்பு காடுகளை பெரிய அளவில் அகற்றி இவ்வகை இயற்கை சோலை - புல்வெளி உயிர்ச்சூழல்களை உருவாக்குவதன் மூலம் பலவகையான வனவிலங்குகளின் வாழ்விடங்களை அதிகப்படுத்தியும், பல்லுயிரியினப் பெருக்கத்தை உறுதிசெய்தும், நீராதாரத்தை மேம்படுத்தும் யுக்தியாக அமையும் என்பதில் மாற்று சிந்தனை இல்லை.

வரையாடு போன்ற அரிய விலங்கினங்கள் பாறைகள் நிறைந்த மலை சோலை - புல்வெளிகளில் மட்டுமே வாழக்கூடிய விலங்கினங்களாகும். எனவே, இந்த வகை உயிர்ச்சூழல் மண்டலங்களைப் பாதுகாப்பதன் மூலமாகவே, வரையாடுகளைப் பாதுகாக்க இயலும் என்பதும் நிதர்சனம்.

வரையாடு பாதுகாப்பில் உலகளாவிய இயற்கைக்கான நிதியமைப்பின் (WWF -India) பங்கு

கேரளாவில் உள்ள மூணாறில் 2006இல் உலகளாவிய மலைவாழ் குளம்பினங்களுக்கான மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் வரையாட்டினைப் பற்றி விளக்கும்போது அன்றைய நிலவரப்படி அதன் தொகை எண்ணிக்கை வெறும் 2000-2500 ஆடுகள் மட்டுமே, அதன் இயற்கையான வாழிடங்களில் உள்ளதாக விவாதிக்கப்பட்டது. மேலும் அவற்றின் வாழிடங்களில் உள்ள குறிப்பிட்ட மலைப்பகுதிகளில் மட்டுமே அதன் தொகை நிலவரக் கணக்கெடுப்பு நடைபெற்றுள்ளதாகவும், அவை பெரும்பாலும் மலை முகடுகளிலும், செங்குத்தான வரைகளில் வாழுவதாலும், அந்த மலைப் பகுதிகள் பாதைகளற்ற பகுதிகளாக உள்ளதானாலும் அவற்றின் தொகை எண்ணிக்கை மற்றும் வாழ்வியல் நிலவரங்களை யாரும் முழுமையாகக் கணக்கிட முற்படவில்லை என்றும் விவாதிக்கப்பட்டது.

அந்த விவாதத்தின் நீட்சியாக 2008இல் வரையாடு பாதுகாப்பின் யுக்திகளை வகுக்க, தமிழகம் மற்றும் கேரளத்தில் உள்ள பெரும்பான்மையான வல்லுநர்களையும், பாதுகாப்புப் பணியில் இருந்த அன்றைய இரு மாநில வனத்துறை உயர்நிலை மேலாளர்களையும், கோவையில் ஒன்று சேர்த்த, உலகளாவிய இயற்கை நிதியம், வரையாட்டின் பாதுகாப்பு யுக்திகளை வகுக்க முற்பட்டது. இந்தக் குழுவின் விவாதத்திலிருந்து வரையாட்டின் அன்றைய முக்கிய பாதுகாப்பு யுக்தியாக அதன் வாழ்விடங்களை முழுமையாக ஆராய்ந்து அங்கு அதன் தொகை நிலை கணக்கெடுப்பை மேற்கொள்வது மற்றும் அந்த விலங்கினத்தின் பாதுகாப்புக்கு உள்ள மனித இடையூறுகளைக் கணக்கிடுவதென்பதும், அன்றைய முக்கியமான தேவைகள் என்று முடிவெடுக்கப்பட்டது.

அந்த முடிவை ஒட்டி உலகளாவிய இயற்கை நிதியம் தங்களை வரையாட்டின் பாதுகாப்பு ஆய்வில் ஈடுபடுத்திக்கொண்டது. 2008 முதல் அந்த அமைப்பின் ஆராய்ச்சியாளர்களின் குழு, வரையாட்டின் வாழ்விடங்களான கேரள மற்றும் தமிழகத்தில் வடக்கே உள்ள நீலகிரி மலை முதல் தெற்கே உள்ள குமரி மலைகள் வரை உள்ள பெரும்பான்மையான இடங்களில் ஒரு முழுமையான ஆய்வை நடத்தி அதன் தொகை நிலவரம் மற்றும் அதற்கு ஏற்படும் மனித இடையூறுகளை மதிப்பீடு செய்து ஓர் ஆய்வு அறிக்கையை 2015இல் வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையின்படி உலகில் உள்ள வனங்களில் வரையாட்டின் எண்ணிக்கை மொத்தம் 3,122 என்று கணக்கிடப்பட்டது. மேலும் அந்த ஆய்வில் இதுவரை அறிவியல் உலகத்துக்கு அறியாத 17 புதிய வரையாடு வாழிடங்களைப் பதிவு செய்துள்ளார்கள். இந்த ஆய்வு அறிக்கையே இன்றைய நிலையில் வரையாடு பாதுகாப்பின் ஒரு முழுமையான அறிக்கையாக விளங்குகிறது.

உலகளாவிய இயற்கை நிதியம் (WWF-India) தொடர்ந்து, வரையாடுகளின் பாதுகாப்பிலும், சோலை - புல்வெளி உயிர்ச்சூழலின் மேம்பாட்டிலும், தன்னை ஈடுபடுத்தி வருகிறது. தற்போது மீண்டும் 2021ஆம் ஆண்டுக்கான தொகை நிலை கணக்கீட்டினை தமிழகம் முழுவதும் உள்ள வரையாடு வாழ்விடங்களில் மேற்கொண்டு வருகிறது. இதில் இரண்டு முக்கிய அம்சங்களாக அமையும் ஒன்று, ஒரே கணக்கெடுப்பு முறையைப் பயன்படுத்தி குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதன் மொத்த வாழிடங்களிலும் (தமிழகம் மற்றும் கேரளத்தில்) கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதும், மற்றொன்று, வரையாடு பாதுகாப்பு தினம் என்று ஒரு தினத்தை அரசாங்கம் ஏற்படுத்தவும், அதன் மூலன் வரையாட்டையும் அது வாழும் சோலை - புல்வெளி உயிர்ச்சூழல் மண்டல பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்பதே அனைவரின் அவா. இந்தத் தொடர் ஆய்வுகளின் மூலம், வரையாடு போன்ற அருகிவரும் விலங்கினங்களையும், அவற்றின் வாழ்விடங்களையும், பாதுகாப்போம் என நம்புகிறோம்.

(மு.அ. பிரெடிட், ஒரு பதிற்றாண்டுக்கும் மேலாக, வரையாடு பற்றிய ஆய்வுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது WWF-Indiaவின் வரையாடு பாதுகாப்புத் திட்டத்தின் இணை ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிகிறார். இன்றைய தேதியில், நீலகிரி வரையாடு சம்பந்தமான பாதுகாப்பு ஆய்வில் இந்திய அளவில் ஈடுபட்டிருக்கும் ஆய்வாளர்களில் முக்கியமானவர்)

.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வியாழன் 10 ஜுன் 2021