மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 10 ஜுன் 2021

பாலூட்டும் தாய்மார்களும் தடுப்பூசி போடலாம்!

பாலூட்டும் தாய்மார்களும் தடுப்பூசி போடலாம்!

பாலூட்டும் தாய்மார்களும் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசின் முன்னாள் பொது சுகாதார இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமி கருத்தரங்கு ஒன்றில் பேசியுள்ளார்.

பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளலாம் என ஒன்றிய அரசு ஏற்கனவே அறிவித்தாலும், தடுப்பூசி போடலாமா, வேண்டாமா என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், மத்திய அரசின் புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலகம், ஆயுஷ் அமைச்சகத்தின்கீழ் புதுச்சேரியில் செயல்பட்டு வரும் மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகியன இணைந்து நடத்திய கருத்தரங்கில் தமிழக அரசின் முன்னாள் பொது சுகாதார இயக்குநரும், கொரோனா தடுப்பு மாநிலப் பணிக்குழு உறுப்பினருமான டாக்டர் க.குழந்தைசாமி சிறப்புரை ஆற்றினார்.

“தடுப்பூசி பாதுகாப்பானவையே. கர்ப்பிணி பெண்களும், 18 வயதுக்குக் கீழுள்ளவர்கள் மட்டுமே தடுப்பூசியைப் போட முடியாது. பாலூட்டும் தாய்மார்களும் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளலாம். தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலமே மூன்றாம் அலையை எதிர்கொள்ள முடியும்.

மிதமான கொரோனா பாதிப்புள்ளவர்கள் வீட்டிலேயே மருத்துவரின் ஆலோசனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இணை நோய் உள்ளவர்கள் மற்றும் ஆக்சிஜன் அளவு 94க்குக் கீழே குறைந்தால், மருத்துவமனை செல்ல வேண்டும்.

வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் தொடர்ந்து ஆக்சிஜன் அளவைக் கண்காணிக்க வேண்டும். ஆக்சிஜன் அளவைக் கவனிக்காமல் விட்டுவிட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்ட பிறகு மருத்துவமனைக்குச் செல்வது நிலைமையை மேலும் மோசமாக்கிவிடும். அதுபோன்று கொஞ்ச காலத்துக்கு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்” எனப் பேசினார்.

சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இயக்குநர் ஜெ.காமராஜ் பேசும்போது, ”சமூக ஊடகங்களை அதிகளவில் பயன்படுத்தும் இளைஞர்கள் தவறான கருத்துகளையும் வதந்திகளையும் நம்பிவிடுகின்றனர். இளைஞர்கள் அறிவியலை நம்ப வேண்டும். தடுப்பூசி மீது அவநம்பிக்கை கொள்ளாமல் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

-வினிதா

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

3 நிமிட வாசிப்பு

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

வேலைவாய்ப்பு : இஎஸ்ஐசி-யில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  இஎஸ்ஐசி-யில் பணி!

வியாழன் 10 ஜுன் 2021