மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 9 ஜுன் 2021

தடைக்காலம் முடிந்தாலும் மீன் பிடிக்க செல்ல மாட்டோம்!

தடைக்காலம் முடிந்தாலும் மீன் பிடிக்க செல்ல மாட்டோம்!

ஊரடங்கு காலம் என்பதால் படகுகளைப் பழுது பார்க்க முடியவில்லை. எனவே தடைக்காலம் முடிந்தாலும் மீன் பிடிக்க செல்ல மாட்டோம் என்று ராமநாதபுரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக 61 நாட்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்படும். இதன்படி கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி முதல் தொடங்கிய இந்தத் தடைக்காலம் வரும் ஜூன் 15ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து ராமநாதபுரம் மீன்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் மீனவர் சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. மீன்துறை துணை இயக்குநர் இளம்வழுதி தலைமை தாங்கினார். ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர்பாட்சா முத்துராமலிங்கம் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் பேசிய மீனவர் சங்கப் பிரதிநிதிகள், “தடைக்காலம் முடிவடைய இன்னும் ஒரு வாரக் காலம்தான் உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடைகள் திறக்கப்படாததால் படகுகளைப் பழுது பார்க்கவோ, வலைகளைச் சரி செய்யவோ முடியவில்லை. எனவே, தடைக்காலத்தை மேலும் இரண்டு வாரக் காலத்துக்கு நீட்டிக்க வேண்டும்.

படகுகள் தயாராக இல்லாத நிலையில் வருகிற 1ஆம் தேதி முதல் கடலுக்குச் செல்ல முடிவு செய்துள்ளோம். அன்றைய தினம் கடலுக்குச் செல்லும்போது எங்களுக்கு அரசு வழங்கும் மானிய டீசல் வழங்க வேண்டும். மேலும், தற்போது 1,800 லிட்டர் டீசல்தான் மானியமாக வழங்கப்படுகிறது. இதை 4,000 லிட்டராக உயர்த்தி வழங்க வேண்டும்.

இறால் உள்ளிட்ட மீன்களைக் குறைந்த விலைக்கு வாங்குகின்றனர். இதனால் மீன்களுக்கு உரிய விலை கிடைக்காமல் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகிறோம். இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு நியாயமான விலைக்கு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

மேலும், தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தியதாக சிறைபிடிக்கப்பட்ட 43 படகுகளை விடுவித்து டீசல் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

அத்துடன் மண்டபம் கடல் பகுதியில் படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்த தூண்டில் வளைவு, மீன்களை இறக்கி ஏலமிட இறங்குதளம், வடகடல் பகுதியை ஆழப்படுத்தி இருபுறமும் சோலார் விளக்கு அமைத்து தர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அதற்கு, சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், “கோரிக்கைகளை எழுத்துபூர்வமாக அளித்தால் அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதைத் தொடர்ந்து மீன்துறை உதவி இயக்குநர் இளம்வழுதி கூறும்போது, “மீன்பிடி தடைக்காலம் 14ஆம் தேதி முடிந்ததும் கடலுக்குச் செல்ல டோக்கன் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் கடலுக்குச் செல்லலாம். டீசல் மானியம், கூடுதல் டீசல் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைய நிலையில் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சிறைபிடிக்கப்பட்ட மீன்பிடி படகுகளை விடுவிக்கவோ, டீசல் மானியம் வழங்கவோ விதிகளின்படி முடியாது” என்றார்.

-ராஜ்

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

புதன் 9 ஜுன் 2021