மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 9 ஜுன் 2021

வனப்பகுதியில் ஆக்கிரமிப்பை அனுமதிக்கக் கூடாது!

வனப்பகுதியில் ஆக்கிரமிப்பை அனுமதிக்கக் கூடாது!

தமிழ்நாட்டில் ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தைக் கூட ஆக்கிரமிக்க யாரையும் அனுமதிக்கக் கூடாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கூடலூரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், ”பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்ததால், மரங்கள் வெட்டப்பட்டு, இயற்கை எழில் பாதிக்கப்பட்டுள்ளது. பறவைகள் மாயமாகி வருகின்றன. நீரோடைகள் தடுக்கப்படுவதால் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன.

நடுவட்டம் கிராமத்தில் மருத்துவர் கவிதா செண்பகம் என்பவர், தமிழ்நாடு மலைப்பகுதியில் சட்ட விதிகளை மீறி, ரிசார்ட் கட்டி வருகிறார். வன நிலங்களை ஆக்கிரமித்து கட்டுமான பொருட்களை குவித்து, வனப்பாதையை விரிவுபடுத்தியுள்ளார்.

இதுசம்பந்தமாக மாவட்ட வனத்துறை அதிகாரி, கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலரின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வனப்பகுதியைக் கட்டுமானப் பொருட்கள் வைக்க தடை விதிக்க வேண்டும். வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். மேலும், வனப்பகுதியை ஆக்கிரமித்தவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். நடுவட்டம் பகுதியில் உள்ள வனப்பகுதி நிலத்தை அளவீடு செய்து எல்லையை வரையறுக்க வேண்டும் ” என தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை இன்று(ஜூன் 9) விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, தமிழக வனப்பகுதியில் ஒரு அங்குல நிலத்தைக் கூட ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

உடனடியாக நடுவட்டம் கிராமத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியர், மாவட்ட வனத்துறை அதிகாரி ஆகியோர் ஆய்வு செய்து ஆக்கிரமிக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தை மீட்க வேண்டும். இதுசம்பந்தமாக வனத்துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வனப்பகுதியில் இருந்து தனியார் ரிசார்ட்டுக்கு தண்ணீர் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

-வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

புதன் 9 ஜுன் 2021