மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 5 ஜுன் 2021

தமிழக அரசின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை: மத்திய அரசு!

தமிழக அரசின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை: மத்திய அரசு!

‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு; திட்டத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று மத்திய அரசு குறை கூறியுள்ளது.

மத்திய அரசின் பிரதமர் கரீப் கல்யாண் அன்னயோஜனா மற்றும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டச் செயல்பாடுகள் பற்றி காணொலி காட்சி மூலம் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் திட்டத்துறையின் செயலாளர் சுதன்ஷு பாண்டே பேட்டி அளித்தார்.

அப்போது அவர், “கொரோனா பரவல் சூழ்நிலையில், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயனடையும் மக்களில், அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரும் பயனடைவதை மாநில அரசுகள் உறுதி செய்வது அவசியமாகிறது.

இதை கருத்தில்கொண்டு நகர மற்றும் ஊரகப்பகுதிகளில் வாழும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிரிவினரைக் கண்டறிந்து, அவர்களுக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்ட ரேஷன் கார்டுகளை வழங்குவதற்கான சிறப்பு திட்டத்தை மேற்கொள்ளும்படி அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தெருக்களில் வசிப்பவர்கள், குப்பைகளைச் சேகரிப்பவர்கள், தெருத்தெருவாக சென்று பொருட்களை விற்பவர்கள், சைக்கிள் ரிக்‌ஷா இழுப்பவர்கள் போன்றவர்களை கண்டறியும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயனடையும் தனிநபர்களையும், குடும்பங்களையும் கண்டறிவது, ரேஷன் கார்டுகளை விநியோகம் செய்வது ஆகிய பொறுப்புகள் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம்தான் உள்ளன.

கொரோனா இரண்டாவது அலையில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில், ரேஷன் கார்டில் உள்ள உறுப்பினர்களுக்கு ஏற்கனவே வழங்குவதைவிட கூடுதலாக ஐந்து கிலோ உணவு தானியங்களை இலவசமாக வழங்க மாநில அரசுகளுக்கு ஏற்கனவே உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி மாநிலங்களுக்கு 80 லட்சம் டன் உணவு தானியம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இதன் மூலம் 80 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசு 26,000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 32 மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மாதம் ஒன்றுக்கு இந்தியா முழுவதும் 1.35 கோடி மக்கள் பயனடைகின்றனர். பிகார், ராஜஸ்தான், ஆந்திரா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம், கேரளா, கர்நாடகா, ஹரியானா, மராட்டியம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், தமிழகத்தில் இந்த திட்டத்தின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. எனவே இந்தத் திட்டத்தை நன்றாகச் செயல்படுத்த வேண்டும் என்று தமிழக உணவுத்துறை அதிகாரிகளை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம்.

மாநிலங்களில் மக்களுக்கான ரேஷன் கார்டுகளை மாநில அரசுதான் வழங்க வேண்டும். மாநில அரசு தரும் தரவுகளின் அடிப்படையில்தான் மத்திய அரசு உணவு தானியங்களை வழங்கி வருகிறது. இந்தத் தரவுகளின் உண்மைத்தன்மையை சரிபார்க்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

-ராஜ்

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

சனி 5 ஜுன் 2021