மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 5 ஜுன் 2021

நேர்மறையாக சிந்திப்பது வீழ்ந்துவிடும்!

நேர்மறையாக சிந்திப்பது வீழ்ந்துவிடும்!

சத்குரு

தற்போது நேர்மறையாக சிந்திப்பது ஒரு பிரபலமான கருத்தாக்கமாக இருக்கிறது, ஆனால் உங்கள் வாழ்வை நடத்துவதற்கு இது சரியான வழியா? நீங்கள் எதிர்மறையை எவ்வளவு புறக்கணிக்க விரும்பினாலும் அது உங்களை எவ்வாறு புறக்கணிப்பதில்லை என்பது பற்றி சத்குரு இங்கு ஆராய்கிறார்.

உலகத்தில் மிக அதிகமான மக்கள் "நேர்மறையாக சிந்திப்பது" பற்றி எப்போதுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.. நேர்மறையாக சிந்திப்பது என்று நீங்கள் கூறும்போது, ஒரு வகையில் நீங்கள் யதார்த்தத்திலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறீர்கள். நீங்கள் வாழ்வின் ஒரு பக்கத்தை மட்டும் காண விரும்பும் நிலையில் மறுபக்கத்தைத் தவறவிடுகிறீர்கள். நீங்கள் மறுபக்கத்தைப் புறக்கணிக்கலாம், ஆனால் அது உங்களைப் புறக்கணிக்காது.

உலகத்தில் இருக்கும் எதிர்மறையான விஷயங்களைப் பற்றி நீங்கள் சிந்திக்காவிட்டால், நீங்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாசம் செய்வீர்கள் என்பதுடன், வாழ்க்கை அதற்காக உங்களுக்கு பாடம் புகட்டும். தற்போது வானில் கருமேகங்கள் சூழ்ந்திருந்தால், அவற்றை நீங்கள் புறக்கணித்துவிடலாம், ஆனால் அவை உங்களைப் புறக்கணிக்கப் போவதில்லை. மழையாக அது பொழியும்போது, அது பொழிகிறது. நீங்கள் அதில் நனையும்போது, நனைகிறீர்கள்.

நீங்கள் அதைப் புறக்கணித்துவிட்டு எல்லாம் நன்றாக நடக்கப்போகிறது என்றே எண்ணிக் கொள்ளலாம் - அது மன ரீதியாக மற்றும் சமூக ரீதியாக ஏற்புடையதாக இருக்கலாம், ஆனால் படைப்பியல் ரீதியாக அதற்கு எந்த மதிப்பீடும் இல்லை. அது ஆறுதலாக மட்டும் இருக்கும். யதார்த்த நிலையிலிருந்து, யதார்த்தமில்லாத நிலைக்கு நகர்வதன் மூலம், உங்களையே நீங்கள் ஆற்றுப்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறீர்கள், ஏனென்றால் யதார்த்தத்தை உங்களால் கையாளமுடியாது என்று உங்களுக்குள் எங்கோ நீங்கள் நம்புகிறீர்கள். ஒருவேளை உங்களால் கையாளமுடியாமல் இருக்கலாம். எனவே நீங்கள் நேர்மறையான சிந்தனையுடன் இணக்கமாக இருக்கிறீர்கள். எதிர்மறையை விலக்கிவிட்டு, நேர்மறையை மட்டும் சிந்திக்க விரும்புகிறீர்கள். அல்லது வேறுவிதமாகக் கூறினால், நீங்கள் எதிர்மறையைத் தவிர்க்க முயற்சிக்கிறீர்கள்.

நீங்கள் எதைத் தவிர்ப்பதற்கு முயற்சி செய்தாலும் அது உங்கள் விழிப்புணர்வின் அடித்தளமாகவே மாறிவிடுகிறது. நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்களோ அதைவிட, எதைத் தவிர்க்க வேண்டும் என்று முயற்சிக்கிறீர்களோ அது உங்களுக்குள் எப்போதும் வலிமை வாய்ந்ததாக மாறிவிடும். வாழ்வின் ஒரு அம்சத்தைத் தவிர்த்துவிட்டு, மற்றொரு அம்சத்தோடு வாழ்வதற்கு முயற்சிப்பவர் தனக்குத்தானே துன்பத்தைத்தான் தேடிக்கொள்வார்.

இருமை இயல்பு

ஒட்டுமொத்த படைப்பும் இரண்டு இருமைகளுக்கு நடுவே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நீங்கள் எதை நேர்மறை, எதிர்மறை என்று குறிப்பிடுகிறீர்களோ, அது: ஆண்தன்மை மற்றும் பெண்தன்மை, ஒளி மற்றும் இருள், பகல் மற்றும் இரவு என்றிருக்கிறது. இது இல்லாமல் வாழ்வு எவ்வாறு நிகழும்? இது எவ்வாறெனில், எனக்கு மரணம் வேண்டாம், வாழ்க்கை மட்டுமே வேண்டும் என்று சொல்வதைப் போன்றது – அப்படிப்பட்ட விஷயமே இல்லை.

மரணம் இருப்பதனால்தான் வாழ்வும் இருக்கிறது. இருள் இருப்பதால்தான் ஒளி இருக்கிறது. அது என்னவென்றால், எதிர்மறை உங்களை வெற்றி கொள்வதற்கு நீங்கள் அனுமதிக்கக் கூடாது. அவை இரண்டும் இருக்கும் நிலையில் அவை இரண்டையும் எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்று பாருங்கள்.

வாழ்வை அது எப்படி இருக்கிறதோ அந்த விதமாகவே நீங்கள் பார்த்தால், அது எப்போதும் சம அடிப்படையில் நேர்மறை மற்றும் எதிர்மறையாக இருக்கிறது. அதை உள்ளபடியே நீங்கள் நோக்கினால் நேர்மறையோ அல்லது எதிர்மறையோ உங்களை எதுவும் பாதிக்காது. அவைகள் சமமாக இருக்கும் காரணத்தினால்தான், அனைத்தும் எந்த விதமாக நிகழவேண்டுமோ அந்த விதத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அவை இரண்டையும் உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, உங்களால் இயன்றதை உருவாக்க வேண்டும்.

மின்சாரத்தில் நேர்மின்னோட்டம் மற்றும் எதிர்மின்னோட்டம் இருக்கும் காரணத்தினால்தான், ஒரு மின்சார விளக்கு எரிகிறது. ஒரு நேர்மறை விளைவு நடக்கும்போது நாம் எதிர்மறையைப் பொருட்படுத்துவதில்லை. ஒரு ஆணும், பெண்ணும் இருக்கிறார்கள் என்றால், அவர்களிடமிருந்து ஆனந்தம் வெளிப்பட்டால் அந்த ஆண் அல்லது பெண்ணை நாம் பொருட்படுத்துவதில்லை. அவர்கள் அதிகமான எதிர்மறை விளைவுகளை உருவாக்க தொடங்குகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், இப்போது அவர்களை ஒரு பிரச்சனையாக நாம் நினைக்கிறோம். பிரச்சனையாக இருப்பது நேர்மறையும், எதிர்மறையும் அல்ல. நீங்கள் வெளிப்படுத்தும் இறுதி விளைவே பிரச்சனையாக இருக்கிறது.

நேர்மறையோ அல்லது எதிர்மறையோ நீங்கள் இரண்டையும் எதிர்க்க வேண்டியதில்லை. உங்கள் திறனைப் பொருத்து, அதிலிருந்து ஒரு நேர்மறையான விளைவைத்தான் நீங்கள் உருவாக்க வேண்டும். இந்த வாழ்வைப் பற்றி நாம் அக்கறையுடன் இருக்கிறோம் என்றால், நாம் உண்மையிலேயே எங்கு இருக்கிறோம் என்பதில் நாம் நேர்மையாக இருப்பது மிகவும் முக்கியமானது. அப்போதுதான் நம்மால் ஒரு பயணம் செய்யமுடியும். நேர்மறையாக சிந்திப்பது மக்களுக்கான பல சாத்தியங்களை பாழ்படுத்திவிட்டது. நேர்மறை எண்ணம் கொண்டவர் எழுதிய ஒரு கவிதை இதோ:

விண்ணில் பறந்தது ஒரு சின்னப் பறவை

கண்ணில் விழுந்தது அதன் எச்சம் - ஆனால்

என்னால் வருந்தவும் முடியாது

கண்ணீர் வடிக்கவும் முடியாது,

ஏனெனில் நான் ஒரு நேர்மறை எண்ணத்தினன்.

நன்றி கூறி கடவுளிடம் வேண்டினேன்

வானில் எருமைகள் பறக்காதிருப்பதற்கு.

வாழ்வை அது உள்ளபடியே பார்ப்பதற்கு நீங்கள் விரும்பாவிட்டால், வாழ்வில் ஒரு அடி கூட உங்களால் எடுத்து வைக்க முடியாது. உங்களால் எதுவும் செய்ய இயலாது. மனதளவில் நீங்கள் வேடிக்கையான விஷயங்களை மட்டுமே செய்யமுடியும். சிறிது காலத்திற்கு உங்களுக்குப் பொழுதுபோக்காக இருக்கலாம், ஆனால் அவை உங்களை எங்கும் இட்டுச் செல்லாது.

மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்….

சூரிய நமஸ்காரம் செய்யும் அற்புதங்கள்!

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

சனி 5 ஜுன் 2021