மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 3 ஜுன் 2021

ரூ.5 கோடி வருவாய் இழப்பில் நீலகிரி தோட்டக்கலைத்துறை!

ரூ.5 கோடி வருவாய் இழப்பில் நீலகிரி தோட்டக்கலைத்துறை!

கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் நீலகிரியில் தோட்டக்கலைத்துறைக்கு 5 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன.

இதன்படி தோட்டக்கலைத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா ஆகிய பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டதால், வெறிச்சோடிய நிலையில் காட்சி அளிக்கின்றன.

நீலகிரியில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறும். இந்த நேரத்தில் சமவெளி பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரிப்பதாலும், விடுமுறையைக் கழிக்கவும் வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவார்கள்.

இதனால் சுற்றுலா தலங்கள் களை கட்டும். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் கோடை சீசன் நடைபெறவில்லை. நடப்பாண்டிலும் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால், கோடை சீசனையொட்டி நடத்தப்படும் அனைத்து கண்காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையைக் கொண்டு நீலகிரிக்கு ஆண்டுதோறும் எத்தனை பேர் வருகின்றனர் என்று கணக்கிடப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் 10 லட்சம் பேர் வந்தனர்.

ஐந்து நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சியை ஒரு லட்சத்து 50,000 பேர் கண்டு ரசிப்பார்கள். பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ.50 சிறியவர்களுக்கு ரூ.30 நுழைவு கட்டணமாகவும், கேமராவுக்கு ரூ.50, வீடியோ கேமராவுக்கு ரூ.100 கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது.

முழு ஊரடங்கு உத்தரவால் தோட்டக்கலை பூங்காக்கள் மூடப்பட்டதால், சுற்றுலா பயணிகள் மூலம் கிடைத்த வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக் கண்காட்சி ரத்து செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தாவரவியல் பூங்கா உட்பட ஐந்து தோட்டக்கலை பூங்காக்களிலும் சுற்றுலா பயணிகள் வராததால் 5 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

-ராஜ்

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்: நாகர்ஜுனா

4 நிமிட வாசிப்பு

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்:  நாகர்ஜுனா

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

வியாழன் 3 ஜுன் 2021