மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 ஜுன் 2021

கணவன், மனைவிக்கு உயர் நீதிமன்றம் சொன்ன அட்வைஸ்!

கணவன், மனைவிக்கு உயர் நீதிமன்றம் சொன்ன அட்வைஸ்!

கணவன்,மனைவி இருவரும் ஈகோ, சகிப்புத்தன்மையின்மை ஆகியவற்றை காலணியாக கருதி வீட்டிற்கு வெளியே விட்டு விட வேண்டும், இல்லாவிட்டால் குழந்தைகள்தான் பாதிக்கப்படுவார்கள் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றியவர் சசிகுமார். இவருக்கு எதிராக மனைவி இந்துமதி குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சேலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கைச் சுட்டிக்காட்டி, சசிகுமாரை பணி இடைநீக்கம் செய்து கால்நடைத் துறை இயக்குநர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்து, தன்னை மீண்டும் பணியில் சேர்க்க கோரி சசிகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அதில், தன்னை துன்புறுத்தியதாகவும், தன்னை கைவிட்டுச் சென்று விவாகரத்து பெற்றதாகவும், விவாகரத்து உத்தரவு பிறப்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன் தனக்கு எதிராக குடும்ப வன்முறை தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை இன்று(ஜூன் 1) நீதிபதி வைத்தியநாதன் விசாரித்தார். அப்போது, ஏற்கனவே மனுதாரரின் வாதத்தை ஏற்று அவருக்கு விவாகரத்து வழங்கியுள்ள நிலையில், தேவையில்லாமல் மனுதாரரை துன்புறுத்தும் நோக்கில் குடும்ப வன்முறை தடைச் சட்டப் பிரிவில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகக் கூறி, அந்த வழக்கை சுட்டிக்காட்டி சசிகுமாரை பணியிடை நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து, 15 நாட்களில் அவரை மீண்டும் பணியில் சேர்க்க நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், மனைவிதான் கைவிட்டுச் சென்றார் என்ற அடிப்படையில் விவாகரத்து வழங்கப்பட்டுள்ளதால், குடும்ப வன்முறை தடைச் சட்ட வழக்கில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டால், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காலத்திற்கு, பணி செய்யாமல் ஊதியம் வழங்க வேண்டி வரும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் என்பது ஒப்பந்தமல்ல என்பதை இன்றைய தலைமுறையினர் உணர வேண்டும். கணவன், மனைவி இருவரும் ஈகோ, சகிப்புத்தன்மையின்மை ஆகியவற்றை காலணியாக எண்ணி வீட்டிற்கு வெளியே விட்டு வர வேண்டும், இல்லாவிட்டால் குழந்தைகள்தான் பாதிக்கப்படுவார்கள் என நீதிபதி அறிவுரை வழங்கியுள்ளார்.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

செவ்வாய் 1 ஜுன் 2021