மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 28 மே 2021

பாலியல் தொல்லை : மதுரை சம்பவம்!

பாலியல் தொல்லை : மதுரை சம்பவம்!

சென்னையில் நடந்ததுபோன்றே, மதுரையிலும் ஒரு பள்ளியில் ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.

சென்னை பிஎஸ்பிபி பள்ளி விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தபிறகு, பல பாலியல் புகார்கள் வெளிவருகின்றன. தமிழகத்தில் 30 பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 30 மாணவர்கள் பாலியல் புகார்களை தெரிவித்துள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது.

மதுரையில் பிரபல மகரிஷி மெட்ரிக் பள்ளியை நடத்தி வரும் தாளாளரின் கணவர்தான் ஆசிரியர் விஜய் பிரபாகரன். தனது மனைவியுடன் சொந்த பள்ளியை நடத்தி வந்த நிலையில், இவருக்கு வெள்ளி வீதியார் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை கிடைத்துள்ளது. அங்கு பிளஸ் 2 படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மட்டுமில்லாமல், தன் அறையில் மாணவிகளை நிர்வாணப்படுத்தியுள்ளார். தொடர்ந்து ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு ஆபாச படங்களை அனுப்பியும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை பார்த்த மாணவியின் தந்தை ஒருவர் பள்ளி முதல்வரிடம் புகார் கொடுத்துள்ளார். இது மாநகராட்சி பள்ளி என்பதால், மாநகராட்சி கல்வி அதிகாரிகள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கைவிரிவித்துவிட்டார்.

இதையடுத்து, மாநகராட்சி கல்வி அதிகாரிகளிடம் முறையிட்டபோது, அவர்களுக்கு ஆசிரியர் விஜய் பிரபாகரன் பல லட்சங்களை கொடுத்து சரிகட்டியது மட்டுமில்லாமல், மாணவியின் தந்தைக்கும் பணம் கொடுத்து ஆபாச வீடியோ தவறாக வந்துவிட்டது எனக் கூறி பிரச்சினையை முடித்துவிட்டனர். ஆனால் அங்கிருந்த ஆசிரியர் ஒருவர் இந்த சம்பவம் தொடர்பான புகார்களை ஆதாரத்துடன் சமூக ஆர்வலர் ஜெயசந்திரன் என்பவருக்கு அனுப்பியுள்ளார்.

சமூக ஆர்வலர் ஜெயசந்திரன், இதுகுறித்து போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் புகார் அளித்தார். நீதிமன்ற உத்தரவின்படி விஜய் பிரபாகரன் மீது கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி மாவட்ட கல்வி அலுவலர்களும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு, வழக்கு தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இதுகுறித்து தெற்கு மகளிர் காவல் நிலையத்தில் இருந்து மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மீண்டும் விசாரணை நடைபெறவுள்ளது. மாநகராட்சி பள்ளி மட்டுமல்ல ஆசிரியரின் மனைவி நடத்தும் மகரிஷி பள்ளியிலும் இதுபோன்ற பாலியல் தொல்லை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை வேகம் எடுத்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக, மாநகராட்சி கல்வி அலுவலர் விஜயா, ஆசிரியர் விஜய் பிரபாகரனை சஸ்பெண்ட் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பாலியல் புகார் அளித்தவுடன் பெண்கள் பள்ளியிலிருந்து ஆண்கள் பள்ளிக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். தற்போது, மாநகராட்சி ஆணையர் உத்தரவின்படி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்” என தெரிவித்துள்ளார்.

தற்போது மதுரை மாநகராட்சியின் ஆணையராக இருக்கும் விசாகன் ஐஏஎஸ் மிகவும் நேர்மையானவர் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி ஆணையர் பதவிக்கு வேறு ஒருவர் பணிமாறுதலாகி வரும்போது ஆசிரியர் விஜய் பல லட்சங்களை கொடுத்து மீண்டும் பணிக்கு வர வாய்ப்புள்ளது. அதனால், இதனை தடுக்கும் வகையில் தற்போதைய மாநகராட்சி ஆணையர் இதில் தலையிட்டு ஆசிரியர் விஜய் என்பவரை நிரந்தரமாக பணி நீக்கம் செய்து மாணவிகளின் எதிர்கால வாழ்க்கையை பாதுகாக்குமாறு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வெள்ளி 28 மே 2021