மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 26 மே 2021

நோயாளிகளுக்கு வாழைப்பழங்களை இலவசமாகக் கொடுத்த விவசாயி!

நோயாளிகளுக்கு வாழைப்பழங்களை இலவசமாகக் கொடுத்த விவசாயி!

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு, 2.5 டன் வாழைப்பழங்களை விவசாயி ஒருவர் இலவசமாக வழங்கியுள்ளார்.

கொரோனா காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பசியால் வாடும் ஏழை, எளிய மக்களுக்குப் பலரும் உதவி செய்து வருகின்றனர். அதுபோன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுடன் உடன் இருப்பவர்களும் உணவு, தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுவதைக் காண முடிகிறது. மருத்துவமனைகளுக்குச் சென்றும் சிலர் உதவிகளைச் செய்து வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த வடுகக்குடி கிராமத்தைச் சேர்ந்த மதியழகன் (49) வாழை விவசாயி. இவர் தஞ்சாவூர் மாவட்ட வாழை உற்பத்தியாளர் சங்கத் தலைவர். இவர், தனது வாழைத்தோப்பில் விளைந்த 2.5 டன் அளவிலான, 60,000 ரூபாய் மதிப்புள்ள, 50,000 பூவன் ரக வாழைப்பழங்களை, தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு, இலவசமாக வழங்கினார். இதை தோட்டகலைத்துறை உதவி இயக்குநர் கலைச்செல்வன், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் நமச்சிவாயம் ஆகியோரிடம் விவசாயி ஒப்படைத்தார்.

இந்த வாழைப்பழங்கள் உழவர் சந்தையில் உள்ள குளிர்பதனக் கிடங்கில் வைத்து, நாள்தோறும் 2,000 கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மதியழகன் கூறுகையில், “கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கோடை மழையாலும், ஊரடங்காலும் வாழைகள் வீணாகி வருகின்றன. பழங்கள் வீணாகிப்போவதைவிட, யாருக்காவது பயன்பட்டால் நல்லது என்ற எண்ணத்தில் கொரோனா நோயாளிகளுக்காக இலவசமாக வாழைப்பழங்களைக் கொடுத்துள்ளேன். கடந்த ஆண்டும் இதுபோன்று 1.8 டன் வாழைப்பழங்களை வழங்கினேன். இப்படி உதவி செய்வது மனநிறைவை அளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனுடன் வாழைப்பழமும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

வேலைவாய்ப்பு : மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

புதன் 26 மே 2021