மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 26 மே 2021

நிரம்பும் பவானிசாகர்: மகிழ்ச்சியில் விவசாயிகள்!

நிரம்பும் பவானிசாகர்: மகிழ்ச்சியில் விவசாயிகள்!

நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. நீர்பிடிப்பு கொள்ளளவு 32.8 டிஎம்சி ஆகும்.

நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியிலிருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகின்றன. பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர, ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்குகிறது.

இந்த நிலையில் பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் (மே 24) மாலை 4 மணிக்கு பவானிசாகர் அணைக்கு விநாடிக்கு 1,084 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 88.91 அடியாக இருந்தது. நேற்று (மே 25) மாலை 4 மணிக்கு அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,716 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டமும் 89.19 அடியாக உயர்ந்தது.

அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீர் மற்றும் பாசனத்துக்காக விநாடிக்கு 1,050 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைக்குத் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருவதால் அந்தப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

-ராஜ்

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

புதன் 26 மே 2021