மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 மே 2021

விமானத்தை இயக்கிய 23 வயது பெண்: முதலமைச்சர் வாழ்த்து!

விமானத்தை இயக்கிய 23 வயது பெண்: முதலமைச்சர் வாழ்த்து!

கேரளாவில் கடற்கரை கிராமத்தில் பிறந்து 23 வயதில் விமானத்தை இயக்கி, இளம் பெண் விமானி என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான ஜெனி ஜெரோமை, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வாழ்த்தியுள்ளார்.

கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த முதல் பெண் பைலட் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் கேரள மாநிலம் கோவளம் கொச்சுத்துறையைச் சேர்ந்த ஜெனி ஜெரோம். பியாஸ்ட்ரா - ஜெரோம் தம்பதியின் 23 வயதான ஜெனி ஜெரோம், வயது குறைந்த விமானி என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார். விமானம் ஓட்டும் பயிற்சியை முடித்து தற்போது முதன்முதலாக விமானத்தையும் இயக்கியுள்ளார் ஜெனி ஜெரோம்.

சார்ஜாவில் இருந்து திருவனந்தபுரம் வந்த ஏர் அரேபியா (ஜி 9-449) விமானத்தில் இணை விமானியாகப் பணியாற்றி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வெற்றிகரமாக விமானத்தைத் தரை இறக்கி சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை பெண் ஜெனி ஜெரோமுக்குப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கிராம மக்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

இதுகுறித்து ஜெனி ஜெரோம் கூறுகையில், “நான் எட்டாம் வகுப்புப் படிக்கும்போதே விமானம் ஓட்ட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. ப்ளஸ் டூ முடித்த பிறகு பெற்றோரிடமும் உறவினர்களிடமும் எனது ஆசையைச் சொன்னேன். ‘பெண் பிள்ளையான நீ எப்படி பிளேன் ஓட்ட முடியும்?’ என்பது போன்ற வார்த்தைகள், என்னை சோர்வடையச் செய்யவில்லை. என் அப்பா எனது ஆசைக்குப் பெரும் துணையாக நின்றார்.

கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகு விமானம் ஓட்டும் பயிற்சிக்கு அனுப்புவதாக அப்பா சொன்னார். அதன்படி சார்ஜா ஆல்ஃபா ஏவியேஷன் அகாடமியில் பயிற்சியில் சேர்ந்தேன். 18 மாதங்கள் பயிற்சி, கொரோனா காரணமாக காலதாமதம் ஆனது. ஒருமுறை பிலிப்பைன்ஸில் விமானப் பயிற்சியின்போது கோளாறு ஏற்பட்டதால் விமானத்தைத் தரையில் மோதி நிறுத்தும் நிலை ஏற்பட்டது. எனக்கு பெரிய அளவில் காயம் இல்லை. அந்த விபத்தால் நான் தளர்ந்து போகவில்லை, மேலும் சாதிக்கும் எண்ணமே ஏற்பட்டது.

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நான் விமானத்தை இறக்கியபோது என் கண்கள் ஆனந்தக்கண்ணீரால் நிறைந்தன. முதன்முதலில் என் சொந்த ஊருக்கு விமானம் ஓட்டியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயரத்துக்கு விமானத்தில் பறக்க வேண்டும். சிறந்த பைலட் என்ற பெயர் எடுக்க வேண்டும் என்பதுதான் என் கனவு” என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் இளம் பெண் விமானி ஜெனி ஜெரோமுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில், “கேரளாவில் வயது குறைந்த பெண் வணிக விமானி என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான ஜெனி ஜெரோமுக்கு எனது வாழ்த்துகள். அவருடைய பெருமையில் கேரளம் பங்குகொள்கிறது.

பள்ளிப்பருவ கனவை நனவாக்கி சாதனை படைத்த அவருடைய வாழ்க்கை, பெண்களுக்கும் சாதாரண மக்களுக்கும் ஊக்கமாக இருக்கும். பெண் - ஆண்கள் சமம் என்ற சமுதாய நீதியினை உணர்த்தும்விதமாக ஜெனி ஜெரோமின் ஆகாய பயண சாதனை உணர்த்தியுள்ளது. ஜெனி ஜெரோமின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொடுத்த அவருடைய பெற்றோர் சமூகத்துக்கு ஒரு முன்னுதாரணம்.

பெண் குழந்தைகளுக்கு ஊக்க மருந்தாகச் செயலாற்ற இந்த சமூகம் முழுவதும் முன்வர வேண்டும். ஜெனி ஜெரோம் மென்மேலும் வாழ்வில் வானளவில் உயர வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

எட்டாம் வகுப்பில் மனதில் துளிர்விட்ட ஆசையை விடாது எட்டிப்பிடித்திருக்கும் ஜெனி ஜெரோமுக்கு சமூக வலைதளங்களிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

-ராஜ்

.

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

செவ்வாய் 25 மே 2021