மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 மே 2021

ராஜகோபாலனுக்கு சிறை : மதுவந்தி விளக்கம்!

ராஜகோபாலனுக்கு சிறை : மதுவந்தி விளக்கம்!

பாலியல் புகாரில் கைதான சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை ஜூன் 8 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்த ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அமைப்பு குற்றம்சாட்டியது. இதையடுத்து சமூக வலைதளங்களில் கவனம் பெற்ற இச்சம்பவம் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தியது.

ஆரம்பத்திலேயே ராஜகோபாலன் மீது புகார் அளிக்கப்பட்டபோது எந்த நடவடிக்கையும் எடுக்காத பள்ளி நிர்வாகம், தற்போது அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

இதுகுறித்து நேற்று பல மணி நேரங்களாக ராஜகோபாலனிடம் நடத்திய விசாரணையில், மாணவிகளுக்கு வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், என்னை போன்று பல கருப்பு ஆடுகள் இருப்பதாகவும் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

குற்றத்தை ஒப்புகொண்டதையடுத்து, அவர் மீது , போக்சோ உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, சென்னையில் உள்ள எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முகமது பரூக் வீட்டில் இன்று(மே 25) காலை ராஜகோபாலனை போலீசார் ஆஜர்படுத்தினர். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக, ஜூன் 8 ஆம் தேதி வரை ராஜகோபாலனை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மற்றொரு பக்கம் சமூக வலைதளங்களில் ஒய்.ஜி.மகேந்திரன், அவரது மகள் மதுவந்தி மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே இதுகுறித்து பேசிய ஒய்.ஜி மகேந்திரன், பள்ளியை நானோ எனது மகள் மதுவந்தியோ நடத்தவில்லை. நான் பள்ளியில் ஒரு டிரஸ்டி மட்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில், மதுவந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தற்போது நடந்திருப்பது ஒரு பயங்கரமான, அசிங்கமான நிகழ்வு. பத்மசேஷாத்ரி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் ராஜகோபாலன் என்கிற ஆசிரியர் மீதான பாலியல் புகார் குறித்த விவரங்கள் எனக்கும், எனது தந்தைக்கும் வந்தது. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என என் தந்தை நேற்றிரவு 12 மணிக்கு பள்ளியின் இயக்குநர் மற்றும் நிர்வாகத்துக்கு மெயில் அனுப்பினார்.

என்னுடைய பாட்டி திருமதி ஒய்.ஜி.பி அவர்கள் ரத்தமும் வியர்வையும் சிந்தி உருவாக்கிய இந்த பள்ளிக்கு எந்தவித களங்கமும் வரவிட மாட்டோம். அது என் ஸ்கூல்தான், நான் படித்த ஸ்கூல்தான். என்னை போல ஆயிரக்கணக்கானோர் படித்து கொண்டிருக்கும் பள்ளி. இந்த சம்பவத்துக்கு சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

ஆனால், இந்த சம்பவத்தில் ஜாதி, மதம், இனம், ஆகியவற்றை புகுத்தி, பிராமின், நான் பிராமின், சத்ரியர், வைஷியர், சூத்திரர் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், ஜெயின் ,சீக்கியர்னு தப்பான அரசியலை கொண்டு வந்து விளையாட வேண்டாம். இதில் சாதி ரீதியான அரசியல் பண்ண வேண்டாம். அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம். நாங்களும் கேட்க வேண்டிய கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

இது ஒரு பெண்ணின் வாழ்க்கை. பல பேர் சேர்ந்து எழுப்பிய குரலுக்கு பத்ம சேஷாத்ரி பள்ளி நிர்வாகம் பதில் சொல்லியே ஆக வேண்டும். கண்டிப்பாக பள்ளி நிர்வாகம் பதில் சொல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒய்.ஜி.பி.யின் பேத்தி, முன்னாள் மாணவி என்ற அடிப்படையில் எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது” என பேசியுள்ளார்.

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் ...

5 நிமிட வாசிப்பு

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் வேதனை!

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

2 நிமிட வாசிப்பு

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்! ...

4 நிமிட வாசிப்பு

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!

செவ்வாய் 25 மே 2021