மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 மே 2021

ஆதரவற்றோரின் பசியைப் போக்கும் மதுரை காவல்துறை!

ஆதரவற்றோரின் பசியைப் போக்கும் மதுரை காவல்துறை!

மதுரையில் சாலையோரங்களில் வசித்து வரும் ஆதரவற்ற மக்களுக்கு பட்டாலியன் போலீஸார், தினமும் மதிய உணவை வழங்கி வருகின்றனர்.

தமிழகத்தில் தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் காய்கறி, பழம், மளிகைக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஹோட்டல்களிலும் பார்சலுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையோரங்களில் வசித்து வரும் ஆதரவற்ற மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். கடந்தாண்டு ஊரடங்கு போடப்பட்டபோதும், பலரும் தங்களால் இயன்ற உதவிகளை ஆதரவற்றவர்களுக்கு செய்து வந்தனர்.

அதேபோன்று இந்தாண்டும், இளைஞர் அமைப்புகளாக, தனி மனிதனாக, குடும்பங்களாக என அவரவர் தகுதிக்கேற்ப ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். பொதுமக்கள் போன்று காவல்துறையினரும் மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். போலீஸ் என்றாலே அடி, முரட்டுதனம் என்ற பிம்பத்தைத் தாண்டி அவர்களிடமும் மனிதநேயம் இருக்கிறது என்பதை சில சம்பவங்கள் நமக்கு உணர்த்தி வருகின்றன.

இந்த நிலையில், மதுரை நகரில் சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றவர்கள் பசியால் வாடுவதை கருத்தில்கொண்டு அவர்களுக்கு இலவச உணவளிக்க மதுரை பட்டாலியன் போலீஸ் நிர்வாகம் முடிவு செய்தது.

தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவின்பேரில், தமிழ்நாடு சிறப்புக்காவல் படை கூடுதல் டிஜிபி ஜெயந்த்முரளி, ஐஜிக்கள் லோகநாதன், தமிழ்ச்சந்திரன் ஆலோசனையின்படி, மதுரை 6ஆவது பட்டாலியன் கமாண்டன்ட் இளங்கோவன் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார்.

ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. அதன்படி, மதுரை கோரிப்பாளையம், பனகல் ரோடு, அண்ணா பேருந்து நிலையம் பகுதிகளுக்கு வாகனத்தில் உணவுப் பொட்டலங்களை ஏற்றி சென்று ஏடிஎஸ்பி முருகேசன், சுமார் 500 பேருக்கு உணவு வழங்கினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "ஊரடங்கு முடியும்வரை மதுரையில் பசியால் வாடும் ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு வழங்க முடிவு செய்துள்ளோம். இதற்காக எங்களுக்குள் நன்கொடையாகப் பணம் வசூலித்து, நாங்களே சமைத்து உணவு பொட்டலங்கள் போட்டு, வாகனங்களில் சென்று ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்க முடிவு செய்துள்ளோம். ஒரே இடத்தில் உணவு கொடுக்காமல் தினமும் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று பசியால் வாடும் மக்களுக்கு உணவு வழங்கப்படும். நாள்தோறும் 500 உணவுப் பொட்டலங்களை விநியோகிக்க திட்டமிட்டுள்ளோம். கூடுதலாகத் தேவைப்படும்பட்சத்தில் 1,000 பொட்டலங்கள் வரை தயாரித்து வழங்குவதற்குத் தயாராக இருக்கிறோம். தக்காளி சாதம், தயிர் சாதம், புளி சாதம், தண்ணீர், ஊறுகாய், கூட்டு உள்ளிட்ட உணவுகளை வழங்கி வருகிறோம். ஏழை, எளிய மக்கள், ஆதரவற்றோர் என அனைவரும் உணவை பெற்று பசியாறலாம்” என்று கூறியுள்ளார்.

-வினிதா

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்: நாகர்ஜுனா

4 நிமிட வாசிப்பு

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்:  நாகர்ஜுனா

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

செவ்வாய் 25 மே 2021