மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 24 மே 2021

மின்தடை: புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண்!

மின்தடை: புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண்!

பொதுமக்களிடமிருந்து மின்தடை தொடர்பாக பெறப்படும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் வகையில் கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு மற்றும் கோடைக்காலங்களில் தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பாக அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுடன் மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் காணொலிக் காட்சி வழியாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி, இணை மேலாண்மை இயக்குநர் எஸ்.வினீத், மின் தொடரமைப்பு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ்.சண்முகம் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கொரோனா சிகிச்சை மையங்கள் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஆகிய இடங்களுக்கு மின்வாரியம் மூலம் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஊரடங்கின்போது அனைத்து நகர் மற்றும் புறநகர் பகுதிகள் குறிப்பாக மலைவாழ் மக்கள் உள்ள பகுதிகளில் தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இப்பணிகளைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

பொது மக்களிடமிருந்து மின்தடை தொடர்பாக பெறப்படும் புகார்களை உடனுக்குடன் சரி செய்யும் வகையில் கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும். பொது மக்கள் மின்தடை மற்றும் பழுது தொடர்பான புகார்களை 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் தெரிவிக்கலாம். மின்தடை மற்றும் பழுது நீக்கம் தொடர்பாக புகைப்படத்துடன் கூடிய தகவல் தெரிவிப்பதற்காக 94458 50811 என்ற வாட்ஸ்அப் எண் 24 மணி நேரமும் செயல்படும்.

கட்டணமில்லா தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் எண்கள் தொடர் பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மின்தடை தொடர்பான விவரங்களை உரிய பதிவேடுகளில் முறையாக பதிவு செய்து பராமரித்திட வேண்டும். களப்பணிகளை ஆய்வு செய்யும் அலுவலர்கள் மேற்கூறிய பதிவேடுகளை தணிக்கை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

-வினிதா

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

திங்கள் 24 மே 2021