மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 24 மே 2021

கோயில் பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்!

கோயில் பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்!

இன்று முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கோயில் பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என்று அறநிலையத்துறை ஆணையருக்கு, திருக்கோயில் பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு முதுநிலை திருக்கோயில் பணியாளர் சங்கத் தலைவர் ஷாஜிராவ், பொதுச்செயலாளர் ஜீவானந்தம் ஆகியோர் அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “அறநிலையத்துறை முழுவதும் கணினி மயமாக்கப்படவேண்டும் என்று செயல்திட்டம் உருவாக்கி நான்கு ஆண்டுகளான நிலையில் அதை உடனடியாக அமல்படுத்தும் நோக்கில் தங்களது பணியைத் தொடங்கியிருப்பது பக்தர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக நியமிக்கப்படாமல் உள்ள அறங்காவலர் குழுக்களை உடன் நியமிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கோயில்களுக்குள் பக்தர்கள் தரிசனத்துக்குத் தடை விதிக்கப்பட்டாலும் நாள்தோறும் காலபூஜைகள் மற்றும் பிற அன்றாட பணிகளுக்காக அர்ச்சகர்கள், ஓதுவார்கள், இசை கலைஞர்கள், காவலர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர்.

இதில் பலருக்கு நோய் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சில கோயில் பணியாளர்கள் மரணமடைந்துள்ளனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் பணியாளர்களின் உடல்நலத்தில் கவனம் கொள்ளாமல் வழக்கமாகக் கேட்டு வரும் காலமுறை அறிக்கைகளை உடனடியாகவும் கேட்டு வருவது அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் மத்தியில் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது. இதை ஒத்திவைக்க வேண்டும்.

தமிழகத்தில் தொற்றால் பாதித்த நோயாளிகள், அவர்களது உறவினர்களுக்கு அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவின்பேரில் நாள்தோறும் ஒரு லட்சம் உணவு பொட்டலங்கள் கோயில்களில் தயார் செய்து மருத்துவமனைகளுக்கு நேரடியாகச் சென்று கோயில் பணியாளர்களால் வழங்கப்பட்டு வருகிறது.

கோயில்களில் மொத்தமுள்ள பணியிடங்களில் 50 சதவிகிதத்துக்கு மேல் காலியிடமாக உள்ள நிலையில் கூடுதல் பணிச்சுமைகளுக்கு இடையே கோயில் பணியாளர்கள் மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று வரும் சூழ்நிலையில், அவர்களுக்குத் தேவையான முகக்கவசம், கையுறைகள், கவச உடைகள் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட கோயில்களிலிருந்து வழங்கி பணியாளர்களின் நலனை பாதுகாக்கவும் மற்றும் கோயில் பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க ஆணையர் உரிய முன்மொழிவுகளை அரசுக்கு அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ராஜ்

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

திங்கள் 24 மே 2021