மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 22 மே 2021

வருமான வரி: புதிய இணையதளமும் கால நீட்டிப்பும்!

வருமான வரி: புதிய இணையதளமும் கால நீட்டிப்பும்!

மின்னணு முறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான புதிய இணையதளம் ஜூன் 7ஆம் தேதி செயல்பாட்டுக்கு வருகிறது. மேலும் வருமான வரி கணக்கு செலுத்த செப்டம்பர் 30ஆம் தேதிவரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மின்னணு முறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளம் பயன்பாட்டில் உள்ளது.

வருமான வரி செலுத்துபவர்கள், தங்களது தனிநபர் வருமான வரி கணக்கையும், வணிகம் தொடர்பான வருமான வரி கணக்கையும் இதில் தாக்கல் செய்து வருகிறார்கள்.

மேலும், வருமான வரித்துறையிடம் சந்தேகம் எழுப்புவதற்கும், ரீபண்ட் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை எழுப்பவும் இந்த இணையதளத்தை பயன்படுத்தி வருகிறார்கள். அதுபோல், வருமான வரித்துறையினரும் வரி செலுத்துவோரின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும், நோட்டீஸ் அனுப்பவும், மேல்முறையீடு, அபராதம், மதிப்பீடு போன்றவற்றில் இறுதி உத்தரவு பிறப்பிக்கவும் இந்த இணையதளத்தையே பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், இதற்குப் பதிலாக www.incometaxgov.in என்ற புதிய இணையதளத்தை வருமான வரித்துறை தொடங்குகிறது. ஜூன் 7ஆம் தேதி இது பயன்பாட்டுக்கு வருகிறது. இது, பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதிய இணையதளத்துக்கு மாறும் பணிகளுக்காக தற்போது உள்ள இணையதளம் ஜூன் 1ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை மூடப்படும். அந்த நாட்களில் அந்த இணையதளத்தை வரி செலுத்துபவர்களோ, வரித்துறை ஊழியர்களோ பயன்படுத்த முடியாது.

புதிய இணையதளத்துக்குப் பழகிக்கொள்ள வரி செலுத்துவோருக்கு கால அவகாசம் அளிக்கும்வகையில், அதிகாரிகள் தங்களது விசாரணை உள்ளிட்ட பணிகளை ஜூன் 10ஆம் தேதியில் இருந்து தொடங்க வேண்டும்”

என்று அதில் கூறப்பட்டுள்ளது.

2020-2021 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தனிநபர்களுக்கு ஜூலை 31ஆம் தேதி கடைசி நாள். கம்பெனிகளுக்கு அக்டோபர் 31ஆம் தேதி கடைசி நாள்.

இந்த நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், இந்த கால அவகாசத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளது.

அதன்படி, தனிநபர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தற்கான கடைசி தேதி செப்டம்பர் 30ஆம் தேதி வரையும், கம்பெனிகள் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நவம்பர் 30ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதுபோல், நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு படிவம்-16 அளிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நிதி நிறுவனங்கள் நிதி பரிவர்த்தனை அறிக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஜூன் 30ஆம் தேதி வரையும், வரி தணிக்கை அறிக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் அக்டோபர் 31ஆம் தேதி வரையும், திருத்தப்பட்ட வருமான கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

-ராஜ்

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

சனி 22 மே 2021