மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 22 மே 2021

’பசித்தால் எடுத்து சாப்பிடவும்”!

’பசித்தால் எடுத்து சாப்பிடவும்”!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பழ வியாபாரி ஒருவர் வாழைப்பழம் மூலம் ஆதரவற்றோர்களின் பசியை போக்கி வருகிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று நோய் பரவலால் மக்கள் பாதிக்கப்பட்டாலும், பெரும்பாலான மக்கள் பொருளாதாரத்திலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலையான வேலை, வருவாய் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மறுபக்கம், சாலையோரத்தில் வசித்து வரும் மக்களும், ஆதரவற்றோர்களும் உணவின்றி கஷ்டப்படுகின்றனர். இருப்பினும், பெரும்பாலான மக்கள் தங்களால் இயன்ற உதவிகளை ஆதரவற்றவர்களுக்கு செய்து வருகிறார்கள். ஒரு சில இடங்களில் குடும்பமாகவே சாலையோரத்தில் இருப்பவர்களுக்காக மூன்று வேளையும் சமைத்து உணவுகளை வழங்கி வருகின்றனர். இன்னும் சிலர் நகைகளை விற்று, அதன்மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள கடலையூர் சாலையில் பழக்கடை வைத்திருப்பவர் முத்துப்பாண்டி. இவர் அரசு அனுமதிக்கப்பட்ட நேரத்தில் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டி, அதன் முன்பு 5 வாழைப்பழ தார்களை தொங்க விட்டு, “ பசி எடுத்தால் எடுத்து சாப்பிடவும்" ”பழம் இலவசம், வீணாக்க வேண்டாம்” என்ற வாசகத்தினை சிலேட்டில் எழுதி தொங்கவிட்டுள்ளார்.

அந்த வழியாகச் செல்பவர்கள், சாலையோரங்களில் வசிப்பவர்கள் என ஏராளமானோர் அந்த வாழைப்பழங்களை எடுத்து சாப்பிட்டுச் செல்கின்றனர். கடை அமைந்திருக்கும் சாலையின் முகப்பில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இருப்பதால் அங்கு வருபவர்களும் இந்த பழங்களை எடுத்து சாப்பிட்டு வருகின்றனர். தினமும் 4 முதல் 5 வாழைத்தார்களை கடைக்கு முன்பு தொங்கவிட்டு செல்கிறார் முத்துப்பாண்டி.

”பெருந்தொற்று பரவி வருகிற இந்த நேரத்தில் மக்களின் பசியாற்றுவதுதான் முக்கியம் என்னால் முடிந்ததை செய்கின்றேன். இது ஒரு பெரிய விஷயமல்ல” என்கிறார் தன்னடக்கத்துடன் முத்துப்பாண்டி.

வாழைப்பழம் மூலம் மக்களின் பசியாற்றி வரும் முகம் தெரியாத முத்துப்பாண்டிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

-வினிதா

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்! ...

3 நிமிட வாசிப்பு

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்!

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு ...

2 நிமிட வாசிப்பு

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு அனுமதி!

சனி 22 மே 2021