மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 22 மே 2021

இந்தியாவில் 8,848 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு!

இந்தியாவில் 8,848 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு!

தமிழகத்தில் 40 பேர் உட்பட நாடு முழுவதும் 8,848 பேர் கருப்பு பூஞ்சை எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையில் மக்கள் மடிந்து வருகிற நிலையில், தொற்றிலிருந்து மீண்டவர்களை தாக்கி வருகிறது கருப்பு பூஞ்சை எனும் நோய். இந்த நோய் தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குஜராத், மகாராஷ்டிரா,ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கருப்பு பூஞ்சை அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து மாநில வாரியாக மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் சதானந்த கவுடா வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நாடு முழுவதும் 8,848 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் 2,281 பேரும்,மகாராஷ்டிராவில் 2000 பேரும்,ஆந்திராவில் 910 பேரும்,மத்தியப்பிரதேசத்தில் 720 பேரும் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தானில் 700 பேரும், கர்நாடகாவில் 500 பேரும், தெலங்கானாவில் 350 பேரும், ஹரியானாவில் 250 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 112 பேரும், தமிழகத்தில் 40 பேரும் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆம்ஃபோடெரிசின்- பி மருந்து கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மாநிலங்களில் இந்த மருந்துக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதையடுத்து, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 23,680 குப்பிகள் ஆம்ஃபோடெரிசின்- பி மருந்து அனுப்பப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

40 பேர் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு 140 குப்பிகளும், 197 பேர் பாதிக்கப்பட்டுள்ள தலைநகர் டெல்லிக்கு 670 குப்பிகள் ஆம்போடெரிசின்-பி மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு அத்தியாவசிய மருந்துகளை முறையாக மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டும். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும்.

இந்நோய்க்கான ஆம்போடெரிசின்-பி மருந்தை போதுமான அளவு இருப்பு வைக்கவும், அதிகளவு உற்பத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கருப்பு பூஞ்சை நோயாளிகளுக்கு ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

-வினிதா

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

சனி 22 மே 2021