மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 21 மே 2021

கருப்பு பூஞ்சை: தயாராக உள்ளதா தமிழகம்?

கருப்பு பூஞ்சை: தயாராக உள்ளதா தமிழகம்?

இந்தியாவில் கொரோனாவைத் தொடர்ந்து கருப்பு பூஞ்சை என்ற கண் நோய்ப் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்நோய் பரவலைக் கட்டுப்படுத்தவும், சிகிச்சை அளிக்கவும் அரசு அனைத்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கொரோனா தாக்கி, சிகிச்சைக்குப் பின் நலம் பெற்று மீண்டு வந்தவர்களை, கருப்பு பூஞ்சை (மியூகோர் மைகோசிஸ்) என்ற நோய் தாக்குவதாகக் கூறப்படுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தி குறைவானவர்கள், ஸ்டீராய்டு மருந்து தொடர்ச்சியாக எடுப்பவர்கள், வயதானவர்கள், நீரிழிவு நோயால் அதிகளவு பாதிக்கப்பட்டவர்களை இந்த நோய் தாக்குவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில தினங்களாக இந்நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இதுவரை இந்தியாவில் 7,250 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் கூறியுள்ளது.

அதன்படி, குஜராத்தில் 1,163 பாதிப்புகளும் 61 இறப்புகளும் , மத்தியப் பிரதேசத்தில் 575 பாதிப்புகளும் 31 இறப்புகளும் பதிவாகியுள்ளன என்று தெரிவித்துள்ளது. ஹரியானாவில் பாதிப்பு- 268 இறப்பு - 8 , டெல்லியில் பாதிப்பு- 203, இறப்பு 1, உத்தரப்பிரதேசத்தில் பாதிப்பு -169 இறப்பு 8 , பிகாரில் பாதிப்பு- 103, இரண்டு பேர் உயிரிழந்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கரில் பாதிப்பு- 101 ஒருவர் உயிரிழப்பு, கர்நாடகாவில் பாதிப்பு- 97, உயிரிழப்பு இல்லை. தெலங்கானாவில் பாதிப்பு 90 , 10 பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறியுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்த வரை 9 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இதில் 7 பேர் நீரிழிவு நோயாளிகள் என்றும், யாரும் உயிரிழக்கவில்லை என்றும் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும், இது அறிவிக்கப்பட வேண்டிய நோயாக பொதுச் சுகாதாரத்துறை அறிவித்துள்ளதால், இந்நோய்ப் பாதிப்புள்ளவர்கள் குறித்து உடனடியாக தனியார் , அரசு மருத்துவமனைகள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, இந்த நோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும், Liposomal, Amphotericin B or Amphotericin B போன்ற மருந்துகள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. எனவே, “நாடு முழுவதும் இம்மருந்து விநியோகம் சீராக இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். அதுவும், குறிப்பாக இம்மருந்துகளுக்கு அதிக தட்டுப்பாடு நிலவும் தமிழகத்திற்கும் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும்” என திமுக எம்.பி.கனிமொழி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், அமைச்சர் சதானந்த கவுடா ஆகியோருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், ‘Amphotericin B’ மருந்தின் பற்றாக்குறை விரைவில் தீர்க்கப்படும் என மத்திய ரசாயணம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

“இம்மருந்தை இந்தியாவில் உற்பத்தி செய்ய, இன்னும் 3 நாட்களுக்குள், 5 மருந்து நிறுவனங்கள் அனுமதி பெறும் என்றும், தற்போதுள்ள 6 மருந்து நிறுவனங்கள் இந்த மருந்தின் தயாரிப்பை ஏற்கனவே அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. 6 லட்சம் ‘‘Amphotericin B’ குப்பிகளை இறக்குமதி செய்ய, இந்திய நிறுவனங்கள் ஆர்டர் கொடுத்துள்ளன என்றும், நிலைமையை சுமுகமாக்க, அரசு அனைத்து நடவடிக்கைகளை எடுக்கிறது என்றும் கூறியுள்ளார்.

தமிழகத்திலும் கருப்பு பூஞ்சை நோய் பரவும் சூழலில், "இதனைத் தடுக்க, தமிழக அரசு ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்; இந்த மருந்து கிடைக்கும் இடங்கள், இருப்பு குறித்த தகவல்களை, தமிழக அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை இணையத்தில் வெளியிட வேண்டும்" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், “கருப்புப் பூஞ்சை நோயைக் குணப்படுத்துவதற்கான Amphotericin -B எனப்படும் ஊசி மருந்துக்குக் கடுமையாகத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. சென்னை தவிர்த்த பிற நகரங்களில் இந்த மருந்து கிடைக்கவில்லை. நாடு முழுவதும் இந்த மருந்துக்குத் தட்டுப்பாடு நிலவுவதால் 6 லட்சம் டோஸ் மருந்துகளை மத்திய அரசு இறக்குமதி செய்திருப்பதாகத் தெரிகிறது. அதிலிருந்து தமிழகத்திற்குரிய பங்கைப் பெற்றும், இந்த மருந்தைத் தயாரிக்கும் 6 தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்தும் முதல்கட்டமாகத் தமிழகத்திலுள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள் ஆகியவற்றில் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அடுத்த கட்டமாக வட்ட மருத்துவமனைகளிலும் இந்த மருந்து மற்றும் மருத்துவ வசதியை உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

-பிரியா

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

வெள்ளி 21 மே 2021