மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 21 மே 2021

பரிசோதனை முடிவுகளை விரைந்து தெரிவிக்க உத்தரவு!

பரிசோதனை முடிவுகளை விரைந்து தெரிவிக்க உத்தரவு!

கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைவில் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஆக்சிஜன், தடுப்பூசி, மருந்து தட்டுப்பாடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, நேற்று (மே 20) தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு வழக்கு விசாரணை நடந்தது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை சமாளிக்க கூடிய வகையில் உள்ளது. படுக்கைகள் அதிகரிப்பது, விரைவாக பரிசோதனை முடிவுகளைத் தெரிவிப்பது உள்ளிட்ட மனுதாரர்களின் கருத்துகள் அரசிடம் கொண்டு செல்லப்படும். ஆங்கில மருத்துவம் இல்லாமல் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளும் தொடங்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து புதுச்சேரி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “புதுச்சேரி மாநிலத்தில், தமிழகத்திலிருந்து வருபவர்களும் அனுமதிக்கப்படுவதால் வரும் வாரங்களில் 65 டன் ஆக்சிஜன் தேவைப்படும் என்பதால், மத்திய அரசு ஒதுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், “கொரோனா பரிசோதனை முடிவுகள் வருவதற்கு இரண்டு, மூன்று நாட்கள் ஆவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எவ்வளவு சீக்கிரம் முடிவுகள் தெரிவிக்கப்படுகிறதோ, அவ்வளவு சீக்கிரம் கொரோனா பரவலைத் தடுக்க முடியும் என்பதால், கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து தெரிவிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

கொரோனா இரண்டாவது அலை தணிந்தாலும், எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு மத்திய, மாநில அரசுகள் திட்டங்களை வகுக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், தடுப்பூசி, ஆக்சிஜன், மருந்து ஒதுக்கீடு தொடர்பான விரைவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து, வழக்கு விசாரணை மே 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

-வினிதா

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

வெள்ளி 21 மே 2021