மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 20 மே 2021

கொரோனாவை ஒழிக்க ‘கொரோனா’ தேவி சிலை!

கொரோனாவை ஒழிக்க ‘கொரோனா’ தேவி சிலை!

கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களைக் காக்க, கோவையில் கொரோனா தேவி சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 34,867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 6,297 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 365 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். சென்னைக்கு அடுத்தப்படியாக கோவையில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

இந்த நிலையில், கோவை மாவட்டம் இருகூர் பகுதியில் உள்ள காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடத்தில் கொரோனா தேவி சிலையை நிறுவி வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கூறுகையில், "கொரோனா வைரஸ் தொற்று மனித வாழ்க்கையை முற்றிலும் சீர்குலைத்துவிட்டது. அம்மை, காலரா நோய் ஏற்பட்டபோது பலர் உயிரிழந்தனர். திக்கற்றவருக்கு தெய்வமே துணை என்ற வாக்கின்படி கிராமங்களிலே மாரியம்மன், மாகாளியம்மன், பிளேக் மாரியம்மன் போன்ற தெய்வங்களை உருவாக்கி வழிபாடு நடத்தப்பட்டது.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்கும் நிலையில் ‘கொரோனா தேவி’ என்ற கருங்கல்லாலான சிலை வடிவமைக்கப்பட்டு 48 நாட்கள் மகா யாகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த யாகத்தில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. ஆலயப் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இன்றும் பழமை வாய்ந்த கிராமங்களில் மாரியம்மன், மாகாளியம்மன் இருப்பதுபோல இந்த கொரோனா தேவி வழிபாடும் அவசியமாகிறது.

ஆதினத்தின் மூலம் செயல்படும் உலக சமாதான தெய்வீகப் பேரவை சார்பாக மக்களுக்கு கபசுரக் குடிநீர், முகக்கவசங்கள், மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

இந்தியாவில் கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை என பரவி ஆயிரக்கணக்கில் மக்களின் உயிரைப் பறித்து வருகையில், மூன்றாவது அலையும் வரும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். போதிய விழிப்புணர்வு மற்றும் அறியாமை காரணமாகத்தான் நோய் தொற்று தீவிரமாகப் பரவி வருகிற நிலையில், இதுபோன்ற மூடநம்பிக்கைகள் தேவையா என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

-வினிதா

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வியாழன் 20 மே 2021