மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 19 மே 2021

பெருந்தொற்று நோயாக மாறும் கருப்பு பூஞ்சை!

பெருந்தொற்று நோயாக மாறும் கருப்பு பூஞ்சை!

கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இந்நோயை பெருந்தொற்று நோயாக அறிவித்துள்ளது ராஜஸ்தான் மாநில அரசு.

நாட்டில் பரவி வரும் இரண்டாவது அலையை சமாளிக்க முடியாத நிலையில், புதிதாக மியூகோமைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை இந்த நோய் தாக்கி வருவதாக செய்திகள் வெளியாகின்றன.

கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. இது கொரோனா தொற்றை விட அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் இந்நோய் ஏற்படுகிறது. கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் நோயாளிகளுக்கு ஸ்டீராய்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. ஏற்கனவே அவர்களது உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது,ஸ்டீராய்டுகள் பயன்பாடு காரணமாக உடலில் எதிர்ப்பு சக்தி மேலும் குறையும். அதனால் ஸ்டீராய்டுகளை தவறாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும் என டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா எச்சரித்துள்ளார்.

கண்வலி,கண் வீக்கம், தலைவலி, முகத்தில் ஆங்காங்கே வலி, சுவாசப்பாதையில் அடைப்பு பின்னர் பார்வை இழப்பு என ஒவ்வொரு நோயாளிகளுக்கும் இந்த நோயின் அறிகுறிகள் மாறுபடும்.

இந்நிலையில், கருப்பு பூஞ்சை நோயை பெருந்தொற்று நோயாக ராஜாஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது. கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இது கொரோனா நோய்த்தொற்றின் பக்க விளைவுகளாகும். அதனால், சிகிச்சை அளிப்பதற்காக, கருப்பு பூஞ்சை நோயை பெருந்தொற்று நோயாகவும், அறிவிக்கப்பட்ட நோயாகவும் அறிவிக்கப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு நாளும் இந்நோயால் பாதிக்கப்படுபவர்கள் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிக்கை வெளியிட வேண்டும்.

இந்நோயால் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர், ஜோத்பூர், கோட்டா, சிரோஹி உள்பட பல மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான சிகிச்சை நெறிமுறைகளை வகுப்பதற்காக வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கிராமங்களில் இந்த தொற்று வேகமாக பரவி வருவதால், வீடு வீடாகச் சென்று மருந்துகளை வழங்குவதற்காக 1000 கொரோனா சுகாதார ஆலோசகர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

எந்தவொரு நோயையும், ஒரு மாநில அரசு தொற்று நோய் என்று அறிவித்தால், அந்நோய் குறித்தத் தகவல்களை அனைத்து அரசு, தனியார் மருத்துவமனை, மருத்துவத் துறையின் உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பது விதிமுறை.

ஏற்கனவே இந்நோயை ஹரியானா அரசு தொற்று நோயாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

புதன் 19 மே 2021