மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 18 மே 2021

குழந்தைகளைக் குறிவைக்கும் மூன்றாவது அலை!

குழந்தைகளைக் குறிவைக்கும் மூன்றாவது அலை!

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை அதிகளவில் குழந்தைகளை பாதிக்கும் என்றும், அதற்கேற்ப முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த ஒரு மாத காலத்தில் 79,000 குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா, கர்நாடகா தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் குழந்தைகள் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது தென் ஆப்பிரிக்காவின் காவ்டெங் மாகாணத்தில் மூன்றாவது அலை பரவி வருகிறது. மூன்றாவது அலை நாடு முழுவதும் பரவவில்லை என்றாலும், காவ்டெங் மாகாணத்தில் பரவத் தொடங்கியுள்ளது. இதனால், பாதிப்பு 600லிருந்து, 1200 ஆக அதிகரித்துள்ளது என தென் ஆப்பிரிக்கா பிரதமர் டேவிட் மக்குரா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அதிகாரபூர்வமாகத் தெரிவித்திருந்தார்.

இந்தியாவில் இரண்டாவது அலை முடிவதற்குள்ளேயே, மூன்றாவது அலைக்கு தயாராகுங்கள் என்றும், மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்துவதற்கான உத்திகளை கையாண்டு, தேவையான திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில், இந்தியா மூன்றாவது அலையை எதிர்கொள்ளும்போது, கொரோனா வைரஸ் தொற்று, முக்கியமாக குழந்தைகளை அதிகளவில் தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக இதய அறுவை சிகிச்சை நிபுணர் தேவி பிரசாத் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

பெங்களூருவை மையமாகக்கொண்டு செயல்பட்டு வரும் நாராயணா ஹெல்த்தின் நிறுவனரும், பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணருமான தேவி பிரசாத் ஷெட்டி எக்னாமிக் டைம்ஸ் பத்திரிகைக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில், “கொரோனா முதல் அலையில் முதியவர்களும், இரண்டாம் அலையில் நடுத்தர வயதினரும் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். அதனால் மூன்றாவது அலையில் அதிகளவில் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். அதிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.

இந்தியாவில் 165 மில்லியன் பேர், 12 வயதுக்குக் குறைவானவர்கள். இவர்களில் 20 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 5 சதவிகிதம் பேருக்குக் கூடுதல் கவனம் தேவை என்றும் வைத்துக்கொண்டால், 1.65 லட்சம் படுக்கைகள் தேவைப்படும். ஆனால், தற்போது அந்தளவு நம்மிடம் வசதி இல்லை. அதனால், அதற்கான ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும்.

தற்போதுள்ள கொரோனா நோயாளிகளை செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் கவனித்து கொள்கின்றனர். ஆனால், சிறு குழந்தைகளை பெற்றோர் இல்லாமல் ஐசியூவில் விட முடியாது. தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும், குழந்தை ஆக்சிஜன் முகமூடியை எடுக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்காகவாவது பெற்றோர்கள் உடன் இருக்க வேண்டும். அதனால், சிறு குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி போட வேண்டும். அடுத்த சில மாதங்களில் குறைந்தது 300 மில்லியன் இளம் பெற்றோர்களுக்குத் தடுப்பூசி போட வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை போல், மூன்றாம் அலை கிடையாது. இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றும், குறிப்பாக குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் என்றும் நிபுணர்கள் கூறி வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிர சிகிச்சை பிரிவு தயார் நிலையில் இருக்க வேண்டும், குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம்களையும் தீவிரப்படுத்த வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

-வினிதா

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

செவ்வாய் 18 மே 2021