மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 18 மே 2021

மேட்டூர் அணை திறப்பும் விவசாயிகளின் மகிழ்ச்சியும்!

மேட்டூர் அணை திறப்பும் விவசாயிகளின் மகிழ்ச்சியும்!

மேட்டூர் அணை திறப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என்ற நிலையில் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,146 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்படுவது உறுதியாகிவிட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோடைக்காலம் தொடங்கியதை அடுத்து சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,000 கன அடிக்கு கீழ் குறைந்து இருந்தது. கடந்த சில வாரங்களாகவே அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,000 கன அடியிலிருந்து படிப்படியாக குறைந்து விநாடிக்கு 400 கன அடிக்குக் கீழ் சென்றது.

நேற்று முன்தினம் (மே 16) அணைக்கு விநாடிக்கு 398 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து நேற்று (மே 17) திடீரென விநாடிக்கு 2,146 கன அடியாக அதிகரித்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று முன்தினம் (மே 16) நடைபெற்ற விவசாயிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டத்துக்குப் பின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், “மேட்டூர் அணை திறப்பு குறித்து விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர். பெரும்பாலான விவசாயிகள் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையைத் திறக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். இக்கருத்துகளை எல்லாம் முதல்வரிடம் தெரிவிப்போம். அவர் முறையாக அறிவிப்பார். இது தொடர்பாக, விரைவில் அறிவிப்பு வெளியாகும்” என்று அவர் உறுதிபடுத்தியிருந்தார்.

இந்த நிலையில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 97.67 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 97.74 அடியாக உயர்ந்துள்ளது. இந்த நீர் வரத்து மேலும் அதிகரிக்குமானால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது.

2012ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை எட்டு ஆண்டுகளாக மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இருப்பு இல்லாததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. கடந்த ஆண்டு இதே காலத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியாக இருந்ததால், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் நீர் இருப்பு ஏறத்தாழ 98 அடிக்கு உயர்ந்துள்ளது. இதனால் குறுவை சாகுபடிக்கு இந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12ஆம் திறக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்படுவது உறுதியாகிவிட்டதால் அந்தப் பகுதியிலுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஜூன் 12ஆம் தேதி அணை திறக்கப்பட்டால் டெல்டா பகுதியான தஞ்சாவூர் மாவட்டத்தில் 40,000 ஹெக்டேர், திருவாரூர் மாவட்டத்தில் 36,000 ஹெக்டேர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 35,000 ஹெக்டேர் மற்றும் திருச்சி, கடலூர் மாவட்டங்களில் 24,000 ஹெக்டேர் என ஏறத்தாழ 1.35 லட்சம் ஹெக்டேரில் குறுவை சாகுபடி நடைபெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்பட வசதியாக காவிரி பாசனப் பகுதிகளில் உள்ள அணைகள், ஆறுகள், வாய்க்கால்கள் உள்ளிட்டவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் மராமத்துப் பணிகள் மற்றும் பராமரிப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

சாகுபடி பணிகளை முழு அளவில் மேற்கொள்ள வசதியாக தரமான விதைகள் மற்றும் இடுபொருட்கள், கடன் உதவி உள்ளிட்டவற்றை குறைவின்றி வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், மேட்டூர் நீர் திறப்பது தொடர்பாகத் தஞ்சாவூர் மாவட்டத்தில், டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த கலெக்டர்கள், அதிகாரிகள், விவசாய பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், அதிமுக ஆட்சி நடைபெற்ற கடந்த 10 ஆண்டுகளாக கூட்டத்தை நடத்தாமல் சென்னையிலேயே முடிவு செய்து அறிவிப்பை வெளியிட்டு வந்தனர். ஆனால், தற்போது பழைய முறையைப் பின்பற்றி விவசாயிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் கூட்டத்தை நடத்தியிருப்பது விவசாயிகள் மத்தியில் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

-ராஜ்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

செவ்வாய் 18 மே 2021