மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 18 மே 2021

ஒலிம்பிக்: 80 சதவிகித மக்கள் எதிர்ப்பு!

ஒலிம்பிக்: 80 சதவிகித மக்கள் எதிர்ப்பு!

ஜப்பானில் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த அந்நாட்டில் 80 சதவிகித மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜப்பான் நாட்டில் கொரோனா பாதிப்புக்கான அடுத்த அலை வீசி வருகிறது. இதனால் டோக்கியோ மற்றும் ஒசாகா ஆகிய பெருநகர பகுதிகள் உள்பட 10 மாகாணங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஜப்பான் நாட்டு பிரதமர் யோஷிஹிடே சுகா, கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மே 11ஆம் தேதி வரை நான்கு மாகாணங்களில் அவசரகால நிலைக்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறினார்.

இதன்படி, டோக்கியோ, ஒசாகா, கியோட்டோ மற்றும் ஹியோகோ ஆகிய மாகாணங்களில் மக்களின் போக்குவரத்து குறையும் வகையில் குறைந்த கால அளவுக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்றும் கூறினார்.

இதனால் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் மற்றும் சேவைகள் தவிர்த்து மற்ற செயல்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. மிக பெரிய வணிக வளாகங்கள் உள்ளிட்டவை செயல்பட அனுமதிக்கப்படவில்லை. மதுபான கூடங்களும் மூடப்பட்டன. மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், கடந்த வாரம் பொருளாதார மந்திரி யசுடோஷி நிஷிமுரா, “கடுமையான அவசரகால நிலை உத்தரவால் கொரோனாவின் அலை கட்டுப்படும் என அரசு நம்பிக்கை கொண்டிருந்தது. ஆனால், டோக்கியோ, ஒசாகா ஆகிய மாகாணங்களில் புதிய பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. அதனால், ஜப்பானில் அவசரகால நிலையானது மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” என கூறினார். இந்த நடைமுறை கடந்த வாரம் (11ஆம் தேதி) முதல் அமலுக்கு வந்தது.

இந்த நிலையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா பரவலால் இந்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதன்படி, வருகிற ஜூலை 23ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 5ஆம் தேதி வரை நடைபெறும்.

ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இன்னும் பத்து வாரங்களே மீதமுள்ள நிலையில், சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வே ஒன்றில், ஜப்பானில் 80 சதவிகித மக்கள் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த எதிர்ப்பு தெரிவித்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்த சர்வேயில் 80 சதவிகிதத்தினர் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் 17 சதவிகிதத்தினர் கொரோனா பாதிப்பினை முன்னிட்டு போட்டிகளை வேறு நாட்களுக்குத் தள்ளி வைக்க வேண்டும் என்றும் வழக்கம்போல் போட்டிகளை நடத்தலாம் என 3 சதவிகிதம் பேர் மட்டுமே தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, வெளிநாட்டில் இருந்து வர கூடிய போட்டியாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரால் கொரோனா வைரஸ் மேலும் பரவ கூடிய ஆபத்து உள்ளது என்று 87.7 சதவிகிதம் பேர் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் ஜப்பான் அரசு, ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

-ராஜ்

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

செவ்வாய் 18 மே 2021