மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 17 மே 2021

ஆர்ப்பரிக்கும் அருவிகள்: ஆட்கள் இல்லாத குற்றாலம்!

ஆர்ப்பரிக்கும் அருவிகள்: ஆட்கள் இல்லாத குற்றாலம்!

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டத் தொடங்கியுள்ளது. சீசன் களைகட்டிய போதிலும் கொரோனா ஊரடங்கு காரணமாக அருவிகளில் குளிக்க அனுமதியில்லை என்பதால் ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது குற்றாலம்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் மே இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் சீசன் களைகட்டத் தொடங்கும். சீசன் நேரத்தில் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் ஆகியவற்றில் குளிப்பதற்காகப் பல்வேறு பகுதிகளிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள். 24 மணி நேரமும் அருவிகளில் கூட்டம் இருக்கும்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த (2020) ஆண்டு குற்றாலம் சீசனுக்குப் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதன் அருகில் உள்ள லட்சத்தீவு பகுதியில் நிலைகொண்டிருக்கும் டவ்தே புயல் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது.

புயலின் சீற்றம் காரணமாக இந்த (2021) ஆண்டு குற்றாலம் சீசன் முன்கூட்டியே தொடங்கி விட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். மலைப் பகுதியில் பெய்யும் மழையின் காரணமாக அருவிகள் அனைத்திலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொட்டுகிறது.

குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு வளைவையும் தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் நிறம் மாறி, மண்ணின் நிறத்தில் கொட்டுகிறது.

பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நடைபாதையிலும் தண்ணீர் ஓடுகிறது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுந்தபோதிலும் கொரோனா ஊரடங்கு காரணமாகச் சுற்றுலாப் பயணிகளோ, உள்ளூர் நபர்களோ அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

நெல்லை மாவட்டத்தில் பாபநாசத்தில் அதிகபட்சமாக 4 செ.மீ மழை பதிவானது. தென்காசி மாவட்டத்தில் தென்காசி பகுதியில் 4.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மழையின் காரணமாக நெல்லையின் பிரதான அணையான பாபநாசம் 106 அடியை (கொள்ளளவு 143 அடி) எட்டியது. 156 அடி கொள்ளளவுள்ள சேர்வலாறு அணையில் 119 அடி நீர் இருப்பு உள்ளது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை 86 அடியாக உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனா அணை 65 அடியாகவும் (கொள்ளளவு 85 அடி), ராமாநதி அணை 52 அடியாகவும் (84 அடி கொள்ளளவு) 72 அடி கொண்ட கருப்பாநதி அணை 49 அடியாகவும் உள்ளது. தொடர்ந்து பெய்துவரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

-ராஜ்

.

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

5 நிமிட வாசிப்பு

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

திங்கள் 17 மே 2021