மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 17 மே 2021

ஒலிம்பிக் நடக்குமா, நடக்காதா? - பெடரர்

ஒலிம்பிக் நடக்குமா, நடக்காதா? - பெடரர்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா, நடக்காதா என்பதை போட்டி அமைப்பாளர்கள் தெளிவுப்படுத்த வேண்டும் என்று முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் பெடரர் வலியுறுத்தியுள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டின் டென்னிஸ் வீரர் ரோஜா் பெடரர் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளர். கால்முட்டி காயத்துக்கு ஆபரேஷன் செய்து கொண்ட பிறகு அதிகமான போட்டிகளில் அவர் விளையாடவில்லை. இந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் நேற்று (மே 16) தொடங்கிய ஜெனீவா ஓபன் டென்னிஸ் போட்டியில் களம் இறங்கியுள்ள பெடரர் அதன் பிறகு பிரெஞ்சு ஓபனிலும் கலந்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறார்.

எல்லாவிதமான கிராண்ட்ஸ்லாம் மகுடமும் சூடிவிட்ட 39 வயதான பெடரருக்கு இன்னும் ஒலிம்பிக்கில் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் மட்டும் எட்டாக்கனியாக உள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டியை நடத்த ஏற்பாடு நடந்து வரும் நிலையில் கொரோனா பரவல் காரணமாக பெடரர் ஒலிம்பிக்கில் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது.

சமீபத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு பெடரர் அளித்த ஒரு பேட்டியில், “ஒலிம்பிக்கில் பங்கேற்று சுவிட்சர்லாந்துக்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே விருப்பம். இது என்னை பெருமையடைய செய்யும் ஒரு விஷயம். ஆனால், டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா, நடக்காதா என்பதை வீரர், வீராங்கனைகள் உறுதியாக அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். அதை போட்டி அமைப்பாளர்கள் தெளிவுப்படுத்த வேண்டும்.

ஜப்பானில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தாலும்கூட ஒலிம்பிக் போட்டி நடக்கும் என்றே நினைக்கிறேன். ஒருவேளை தற்போதைய நிலைமையில் ஒலிம்பிக் நடக்காவிட்டால் அதை புரிந்து கொள்ளக்கூடிய முதல் நபராக நான் இருப்பேன். கடினமான நிச்சயமற்ற ஒரு தன்மை நிலவுகிறது என்பதை நாங்கள் அறிவோம். ஒரு வீரராக ஒலிம்பிக் போட்டிக்குப் பயணிப்பது குறித்து நீங்கள்தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

டோக்கியா ஒலிம்பிக்குக்குச் செல்ல நிறைய எதிர்ப்பு இருப்பதாக உணர்ந்தால், அங்கு போகாமல் இருப்பதே நல்லது. என்னை பொறுத்தவரை ஒலிம்பிக்கில் பங்கேற்பேனா, இல்லையா என்பது தெரியாது. இரண்டு விதமான மனநிலையில் இருக்கிறேன்” என்றார்.

பெடரர் மட்டுமின்றி, ரபெல் நடால் (ஸ்பெயின்), செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) ஆகிய டென்னிஸ் பிரபலங்களும் கொரோனா அச்சம், புதிய கட்டுப்பாடுகள் காரணமாக ஒலிம்பிக்கில் விளையாடுவது குறித்து இன்னும் உறுதியான முடிவை எடுக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

-ராஜ்

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திங்கள் 17 மே 2021