மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 17 மே 2021

மேட்டூர் அணை திறப்பு: முதல்வர் அறிவிப்பார்!

மேட்டூர் அணை திறப்பு: முதல்வர் அறிவிப்பார்!

மேட்டூர் அணை திறப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

டெல்டா பாசனத்துக்காக இந்த ஆண்டு மேட்டூர் அணை திறப்பு எப்போது என்று எதிர்பார்த்த நிலையில், ‘ஜூன் 12ஆம் தேதி திறக்கலாம்’ என வேளாண் வல்லுநர் குழு பேரவை பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்த விரிவான செய்தியை ‘மேட்டூர் அணை திறப்பு எப்போது?’ என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் பதிவு செய்திருந்தோம்.

இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் ஆகிய ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம் நேற்று (மே 16) நடைபெற்றது.

இதில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், நிகழாண்டு பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது, தூர்வாருவது குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டது.

அதன் பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், “மேட்டூர் அணை திறப்பு குறித்து விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர். பெரும்பாலான விவசாயிகள் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையைத் திறக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். இக்கருத்துகளை எல்லாம் முதல்வரிடம் தெரிவிப்போம். அவர் முறையாக அறிவிப்பார்.

மேலும் தூர்வாரும் பணி மேற்கொள்வது தொடர்பாக நிதி குழுவுக்குப் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, விரைவில் அறிவிப்பு வெளியாகும்” என்று அவர் உறுதிபடுத்தியுள்ளார்.

தற்போது அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டுர் அணைக்கு வரும் நீர்வரத்து 2,146 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் நேற்று 61.95 டிஎம்சி தண்ணீர் நீர் இருப்பு உள்ளது.

-ராஜ்

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 17 மே 2021