மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 16 மே 2021

உயிரை பறித்த செல்ஃபி மோகம்: கிணற்றுக்குள் பாய்ந்த டிராக்டர்!

உயிரை பறித்த செல்ஃபி மோகம்: கிணற்றுக்குள் பாய்ந்த டிராக்டர்!

வாணியம்பாடி அருகே செல்ஃபி எடுப்பதற்காக டிராக்டரை இயக்கிய மாணவன், டிராக்டருடன் கிணற்றில் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள சின்னமோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் மகன் சஞ்சீவி (வயது 19), சென்னையிலுள்ள தனியார் கேட்டரிங் சென்டரில் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார்.

தற்போது, விடுமுறை காரணமாக வீட்டிலிருந்த சஞ்சீவி, அதே கிராமத்திலுள்ள ராஜேந்திரன் என்பவரின் நிலத்துக்குச் சென்றிருக்கிறார். அங்கு, சௌந்தர் என்பவர் டிராக்டரில் உழுதுகொண்டிருந்தார். அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சஞ்சீவி, தனது செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார். மதிய இடைவெளியில், டிராக்டர் ஓட்டிய நபர் சாப்பிடச் சென்றுவிட்டார்.

சாவியை வண்டியிலேயே விட்டிருந்ததால், சஞ்சீவி டிராக்டரை இயக்க ஆசைப்பட்டிருக்கிறார். டிராக்டரில் ஏறி ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த சஞ்சீவி, தனது செல்போனில் செல்ஃபி எடுத்து வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸாக வைத்திருக்கிறார். ஸ்டேட்டஸில், ‘டுடே டிரைவிங்’ என்று தன்னை மாடர்ன் விவசாயியாகக் காட்டிக்கொண்டு மகிழ்ந்திருக்கிறார்.

தொடர்ந்து, சாவியை ஆன் செய்து டிராக்டரை இயக்க முற்பட்டிருக்கிறார். அப்போது, டிராக்டர் தாறுமாறாக ஓடி அருகிலிருந்த 120 அடி ஆழமுள்ள கிணற்றில் பாய்ந்தது. டிராக்டருடன் சஞ்சீவியும் உள்ளே விழுந்தார்.

சத்தம் கேட்டு ஓடிவந்த விவசாய கூலித்தொழிலாளிகள், உடனடியாக வாணியம்பாடி தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மாணவன் சஞ்சீவியை மீட்கத் துரிதமாகச் செயல்பட்டனர். சுமார் ஐந்து மணி நேரம் போராடி கிணற்றிலிருந்த தண்ணீரை நான்கு மின் மோட்டார்கள் மூலம் வெளியேற்றிவிட்டு கிரேன் உதவியுடன் டிராக்டரையும் மேலே தூக்கினர். டிராக்டருக்கு அடியில் சிக்கியிருந்த சஞ்சீவியும் சடலமாக மீட்கப்பட்டார்.

பின்னர், மாணவன் சஞ்சீவியின் உடலைக் கைப்பற்றிய அம்பலூர் போலீஸார் பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க ஆம்புலன்ஸில் ஏற்றினர். மாணவனின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் ஒப்படைக்கக் கோரி உறவினர்கள் ஆம்புலன்ஸ் முன் அமர்ந்து போராட்டம் செய்தனர். போலீஸார் அவர்களைச் சமாதானம் செய்ததையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து, மாணவன் உடல் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்தச் சம்பவம், வாணியம்பாடிப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-ராஜ்

.

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

ஞாயிறு 16 மே 2021