மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 மே 2021

மயானங்களில் சிசிடிவி கேமரா!

மயானங்களில் சிசிடிவி கேமரா!

சென்னையில் உள்ள 140க்கும் மேற்பட்ட மின் மயானங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதனால், மயானங்களில் உடல்களை எரிக்க இடமில்லாமல் சடலங்கள் வரிசையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், உடல்களை எரிப்பதற்காக மக்கள் வரிசையில் காத்திருப்பதாகவும் வெளியாகும் வீடியோக்கள், தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்றால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு பயிற்சி பெற்ற மருத்துவர்கள் ஆலோசனை வழங்கும் கட்டளை மையம் தேனாம்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை இன்று(மே 15) சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், ஆயிரம் விளக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எழிலன், மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, “சென்னையில் ஊரடங்கை கண்காணிக்க மண்டலத்திற்கு ஒரு குழு என நியமிக்கப்பட்டிருந்த 15 குழுக்கள், இரட்டிப்பாக்கப்பட்டு, 15 மண்டலத்திற்கும் தலா 2 குழுக்களாக செயல்படவுள்ளன.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க மருத்துவப்படிப்பு இறுதியாண்டு மாணவர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. அதன்படி, இன்று முதல் 16 மருத்துவக் குழுக்கள் மத்திய சென்னையில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நபர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றன.

சென்னையில் 140க்கும் மேற்பட்ட மின்மயானங்கள் உள்ளன. மயானங்களில் உடலை எரியூட்டுவதற்காக மாலை நேரம் அதிகளவில் மக்கள் வருவதால், அதிக நேரம் மயானத்தை இயக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், எரியூட்டும் இயந்திரத்தை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என்பதால், 24 மணிநேரமும் மயானத்தை இயக்க முடியாது. மேலும், சென்னையில் உள்ள மயானங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.

ஊரடங்கை மீறியதாக தற்போது வரை ஒரு கோடியே 44 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. அபராதம் விதிப்பது எங்கள் நோக்கமல்ல. மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்த பேரிடர் காலத்தில் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே கொரோனாவை வெல்ல முடியும்” என கூறினார்.

-வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

சனி 15 மே 2021