மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 மே 2021

சோழ மண்டலத்தின் ஓவியர் பி.கோபிநாத்துடன் ஒரு சந்திப்பு - பகுதி -2

சோழ மண்டலத்தின் ஓவியர் பி.கோபிநாத்துடன் ஒரு சந்திப்பு - பகுதி -2

வைஷ்ணவி ராமநாதன்

பகுதி -2

உங்களுக்கு பிடித்தமான ஓவிய ஊடகம்?

எண்ணெய் ஓவியங்கள் பிடிக்கும் ஆனால் அவை உலருவதற்கு நிறைய நேரம் தேவை. அக்ரிலிக் ஓவியத்திற்கு நீர் வண்ண மற்றும் எண்ணை ஓவியத்திற்கான இரண்டு குணமும் உண்டு. அதனால் தற்போது அக்ரிலிக்கில் வேலை செய்கிறேன்.

உங்கள் ஓவியத்தில் சிவப்பு நிறத்திற்கு முக்கிய பங்கு உள்ளதே?

கேரளாவில் வளரும் பொழுது எங்கு பார்த்தாலும் சிவப்பு செம்பருத்திப் பூ இருக்கும். அது தவிர கலமெழுத்து போன்ற சடங்குகளிலும் பூசாரிகள் அணியும் ஆடைகளிலும் சிவப்பு முக்கியமாக இருக்கும். சில சடங்குகளில் பூசாரி தன் நெற்றியில் இரத்தம் வரும் வரை வாளால் அடித்துக் கொள்வார். இவையெல்லாம் என்னை பாதித்தன. ஆனால் எனக்கு மற்ற வண்ணங்களின் சாத்தியத்தையும் அறிய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

ஓவியத்தைப் படைப்பதற்கு நீங்கள் பயன்படுத்தும் ‘கட் அவுட்’ முறையைப் பற்றி சொல்லுங்கள்..

நான் தினமும் வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாயத்துடன் வேலை செய்வதில்லை. தூண்டுதல் ஏற்படும் பொழுது சில நேரம் ஒரு ஸ்கெட்ச் புக்கில் வரைவேன். நான் வண்ணத்தை நேராக காகிதத்தில் தீட்டுவேன். அதனோடு மற்ற பயிற்சி ஓவியங்களிலிருந்து துண்டுகளை கட் அவுட் செய்து ஓவியத்தின் மேல் ஒட்டி கொலாஜ் செய்வேன். இதன் மூலம் பல புதிய கூறுகள் சாத்தியமாகும், காம்போசிஷனை சுதந்திரமாகவும் சுலபமாகவும் செய்யலாம். காம்போசிஷன் செய்யும் போது வரும் சில சிக்கல்களை இம்முறை தெளிவுபடுத்திவிடும்.

இப்பொது கலை சார்ந்த கருத்துக்கள் மட்டும் மாறவில்லை அதன் செய்முறையும் மாறி விட்டது. அதைப் பற்றி..

இப்போது ஓவியர்கள் உதவியாளர்களைக் கொண்டு வேலை செய்கிறார்கள். தொழிற்சாலையில் செய்யும் ஒரு பொருள் போல ஆகிவிட்டது. கலை என்பது கைப்பட செய்த ஒன்று. அதனால் தான் எனக்கு டிஜிடல் ஆர்ட் செய்வதில் நாட்டம் இல்லை. நாம் கைப்படசெய்தால் தான் அதில் திருப்தி இருக்கும். ஒரு படைப்பைத் துவங்கும் போது அது சரியாக வருமா இல்லையா என்ற அச்சம் இருக்கும். முற்றிலும் ஒழுங்கு இருக்காது. பின்னர் செய்யச் செய்ய ஒரு ஒழுங்குக்கு வரும். இந்தப் பயணம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு காலத்தில் நான் முதலில் வரைந்து விட்டு வண்ணம் தீட்டுவேன். அது எனக்கு சலிப்பாக இருந்தது. பின்னர் வண்ணங்களை நேராகவே கித்தானில் எந்த வித திட்டமும் இல்லாமல் தீட்டத் துவங்கிவிட்டேன். போகப் போக அதில் ஒரு வடிவம் வரும். இறுதியில் எப்படி இந்த ஓவியம் இருக்கும் என்பதை நான் கூடச் சொல்ல முடியாது. அது ஒரு வித மன அழுத்தத்தை ஏற்படுத்தும். நல்ல ஓர் ஓவியமாக அது உருவெடுத்தால் வியப்பை உண்டாக்கும். சரியாக வரவில்லை என்றால் அதை ஒத்தி வைத்துவிட்டு பிறகு வேலை செய்வேன். ஓவியத்தை எப்படியாவது முடித்து விட வேண்டும் என்ற கட்டாயச் சிந்தனை எனக்குப் பிடிக்காது. என் விருப்பத்தை ஓவியத்தின் மேல் திணிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். நான் ஓவியம் படைத்துக் கொண்டிருக்கும் போது சலிப்பேற்பட்டுவிட்டால் வேறு ஏதாவது செய்வேன். அது மீண்டும் கலை செய்வதற்கான புத்துணர்ச்சியும் தூண்டுதலையும் ஏற்படுத்தும்.

நீங்கள் பிரம்மாண்டமான அளவிலும் ஓவியம் படைக்கிறீர்கள். அத்தகைய அளவில் படைப்பதைப் பற்றி.

பெரிய கித்தான்களில் வேலை செய்வது உற்சாகத்தை ஏற்படுத்தும். சென்னை ஹயாத் ஹோட்டலுக்கு சுமார் 48 அடி மற்றும் 24 அடி அளவு ஓவியம் செய்தேன். ஆரம்பத்தில் அதை செய்யும் போது நாம் இதை செய்ய முடியுமா என்று அச்சமாகவே இருந்தது. அத்தகைய பரப்பளவைப் புரிந்துக் கொள்ள என் ஓவியத்தை அதன் மேல் ‘project’ செய்துப் பார்த்தேன். அதன் மூலம் அந்த ஓவியத்தின் வடிவத்திற்கான அளவைப் (scale) புரிந்து கொண்டேன். அதன் பின்னர் தனித் தனியாக 36 பாகங்களாக ஓவியத்தை முடித்து விட்டு அவ்விடத்தில் சரி வர பொருத்தினேன்.

ஓவியம் செய்யும் நேரம் போக மற்ற நேரத்தில் என்ன செய்வீர்கள்?

எனக்கு புத்தகம் படிப்பது மிகவும் பிடிக்கும். இலக்கியம் சார்ந்த பல நூல்கள் என்னிடம் உள்ளன. படிப்பது மிகவும் அவசியம். படிக்கவில்லை என்றால் பல விஷயங்களை அறியாமல் கிணற்று தவளையாகவே இருப்போம்.

உங்கள் ஓவியங்களில் எழுத்து போன்ற வடிவங்கள் உள்ளன

ஆம். இரு பரிமாண மேற் பரப்பில் ஒரு வித ஈர்ப்பை ஏற்படுத்தவும் பார்வையாளர்கள் ஓவியத்தைக் கூர்ந்து கவனிக்கவும் அவ்வாறு எழுத்தைப் பயன்படுத்துகிறேன். மேலும் பணிக்கர் எழுத்தை கலையின் உச்ச கட்ட வெளிப்பாடு என்பார். படிமங்களே எழுத்து வடிவமாக உருவெடுத்தன. எடுத்துக்காட்டாக மலையாளத்தில் ‘யானை’ என்ற சொல்லின் வடிவம் யானையின் உருவத்தைப் போன்றே இருக்கும். அதனால் தான் பணிக்கர் எழுத்தை தன் ஓவியத்தில் உபயோகித்தார்.

என் ஓவியத்தில் கரிம வடிவங்களுக்கும் (organic form) முக்கிய இடம் உண்டு. இயற்கை நம்மை சூழ்ந்திருக்கிறது. அதை நாம் எப்பொழுதும் கவனித்துக் கொண்டே இருக்கிறோம். அதிலும் இந்தியர்களுக்கு இயற்கை மேல் ஒரு தனி பிரியம் உள்ளது. அது தான் என் ஓவியத்தில் வெளியாகிறது.

உங்களுடைய அரூப ஓவியத்தை எல்லோராலும் ரசிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?

இசை, நடனம், எழுத்து, ஓவியம் எல்லாவற்றையும் புரிந்து கொள்வதற்குப் பயிற்சி தேவை. அது இருந்தால் நுணுக்கங்களைப் புரிந்துக் கொள்ளலாம். அதே சமயத்தில் ஒரு குழந்தைக்கு ஓவியத்தை எவ்வாறு அணுக வேண்டும் என்பதைக் கற்றுத்தரத் தேவை இல்லை. ஓவியம் என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணங்கள் அற்று இருப்பதால் குழந்தைகளால் ஓவியத்தை எளிதில் உள்வாங்க முடியும். ‘நான் பிறந்த குழந்தையைப் போன்று இருக்க வேண்டும்’ என்று பால் கிலீ சொன்னதற்கு இது தான் காரணம்.

அரூப ஓவியம் ஒரு வித பிம்ப ரீதியான தொடர்பு மொழி. எடுத்துக்காட்டாக கோலம் முற்றிலும் அரூப வடிவம். ஆனால் அது எல்லோருக்கும் பிடிக்கும். நம் நாட்டு நடனத்திலும் அரூப சிந்தனை இருந்திருக்கிறது. தெய்யம் போன்ற கலைகளில் உள்ள முகமூடிகளையும் ஆடைகளையும் பார்த்தால் புரியும். கலைகள் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தவை. ஆனால் இந்தக் காலத்தில் நாம் எல்லாவற்றையும் பிரித்துப் பார்க்கிறோம். மண் பாண்டங்கள் செய்யும் ஒரு குயவன் திருவிழா நேரத்தில் சிற்பியாக மாறி ஐயனார் உருவங்கள் செய்வான். நம் நாட்டில் கலைஞனையும் (artist) கைவினைப் பொருட்கள் செய்பவனையும் (craftsman) பிரித்துப் பார்த்ததே இல்லை.

இறுதியாக நீங்கள் சொன்ன இந்தக் கருத்தைப் பற்றி பணிக்கரும் எழுதியிருக்கிறார். மேலும் பண்டைக் காலத்தில் பெயரே அறியப்படாத கலைஞர்கள் எப்படி மாபெரும் கலைப் பொருட்களைச் செய்திருக்கிறார்கள் என்பதையும் பதிவு செய்திருக்கிறார். இது சார்ந்த உங்கள் கருத்து.

ஒரு கோயில் கட்டுவதில் தாத்தாவிலிருந்து பேரன் வரை ஈடுபட்டிருப்பார்கள். வழி வழியாக குடும்பத்தில் வந்த ஒரு தொழில். கலைஞனின் பெயர் அறியாமல் இருப்பதற்கு இது ஒரு காரணம். மற்றொன்று கோயில் கட்ட உத்தரவிட்ட அரசனின் பெயரைத் தான் முக்கியமாக பதிவு செய்வார்கள். அது அப்படி இருப்பினும் நாம் கோயில் சிற்பங்களைக் கூர்ந்து கவனித்தால் அதில் ஏதாவது ஒரு விதத்தில் கலைஞன் தன்னைப் பதிவு செய்திருப்பதை கண்டறியலாம். ஒரு கலைஞனால் தன்னைப் பதிவு செய்யாமல் இருக்கவே முடியாது!

சற்று முன் அந்தக் கால அரசர்கள் எவ்வாறு கலையை ஆதரித்தார்கள் என்பதைப் பற்றி சொன்னீர்கள். சம காலக் கலைக்கான ஆதரவுடன் அதை எப்படி ஒப்பீட்டுப் பார்க்கலாம்?

இந்தக் காலத்தில் ஓவியர்களை தக்க முறையில் ஆதரிப்பதில்லை. ஆக்‌ஷன் என்று நடக்கும் போது அந்தக் கலை பொருளைச் செய்த ஓவியனுக்கு ஒன்றும் கிடைப்பதில்லை. அதை ஓவியனிடமிருந்து இரண்டாவது இல்லையென்றால் மூன்றாவது முறையாக வாங்கியவர்தான் பணம் சம்பாதிக்கிறார். கலை என்பது ‘investment’ ஆக மாறி விட்டது. அதில் கலைக்கான இரசனை ஒன்றும் இல்லை. ஓவியர்களும் பணம் நிறைய கிடைக்கும் போது அலட்சியமாக இருப்பார்கள். எப்படி படைப்பு இருந்தாலும் யாராவது வாங்கிவிடுவார்கள் என்று அவர்களுக்குத் தெரிந்துவிடும். ஒரு ஓவியனின் மிக உன்னதமான படைப்பு அவன் பசியோடு இருக்கும் போது செய்வதுதான் என்று நம்புகிறேன்.

காலப்போக்கில் உங்கள் கலை எவ்வாறு மாற்றம் அடைந்திருக்கிறது.

என் பழைய ஓவியங்கள் stained glass-இல் உள்ள ஒளிபுகுமை மற்றும் வண்ண விளையாட்டுத் தன்மையுடனும் இருக்கும். அந்தத் தன்மையை மினியேச்சர்ஸிலும் காணலாம். ஒரு காலத்தில் 1960-70 இல் சென்னையில் இருந்த பல ஓவியர்களைப் போல இழைநயத்தைப் பயன்படுத்தி வந்தேன். பின்னர் அது முற்றிலும் கலை நுணுக்கத் திறம் சார்ந்ததாகவே பட்டது. அதனால் அந்த செய்முறையை நிறுத்திவிட்டேன்.

ஒர் ஓவியனுக்கு அணுகு முறையில் புதுமை தேவை. நான் ஆரம்ப காலத்தில் ரூபம் சார்ந்த பாணியிலிருந்து அரூபத்திற்குப் பயணம் செய்தேன். மாற வேண்டும் என்பதற்காக என் கலைப் போக்கை மாற்றவில்லை. யதார்த்தமாக அது நடந்தது. நான் பல ஓவியங்களுக்கு ‘biomorphic image’ என்ற தலைப்பைத் தந்திருக்கிறேன். ஆனால் அதில் ஒர் ஓவியத்திலிருந்து மற்றொன்றிற்கு மாற்றம் இருக்கும்.

என் ஓவியம் முற்றிலும் உருவமற்றது என்று சொல்ல முடியாது ஏனென்றால் உருவத்திற்கான சில எச்சங்கள் இருக்கும். மனிதனையும் அவன் இருக்கும் உலகத்தையும் நாம் ஒதுக்கி விட முடியாது. அதனால் இவ்வுலகம் சார்ந்த கூறுகள் எப்படியோ ஓவியத்திற்குள் நுழைந்துவிடும்.

அரூப ஓவியப் பாணி என்பது வாழ்க்கையின் சாரத்தை வெளிப்படுத்துவதில் ரூப ஓவியத்தைவிட வலுவானது. இந்த கருத்தை ஒப்புக் கொள்ள முடியுமா?

அரூப ஓவியம் என்பது சிந்தனை அற்ற ஒரு நிலை. எல்லா வித வாழ்க்கை ஓட்டங்களும் நின்றுவிட்ட நிலையில் நாம் அந்த கித்தானுடைய கட்டத்திற்குள் மட்டும் இருக்கிறோம். நான் சற்று முன்னே சொன்னது போல இது ஓழுங்கற்ற நிலையிலிருந்து அமைதியையும் ஒழுங்கையும் நோக்கிச் செல்லும் பயணம்.

ஓவியர் பி.கோபிநாத்

உங்கள் படைப்பில் எத்தகைய குணங்கள் இருக்க வேண்டும்?

நிலையிருப்பான தன்மை இல்லாமல் பயணம் செய்வது போன்ற உணர்வு இருக்க வேண்டும். மேற்கத்திய ஓவியத்தில் பார்வையாளர் ஒரே இடத்தில் நின்று காட்சியைப் பார்ப்பது போன்ற சித்தரிப்பு இருக்கும். ஆனால் நம் நாட்டு ஓவியத்திலோ அப்படி இல்லை. அதனால் தான் நம் கண்களை இழுத்து ஒரே இடத்தில் கட்டி வைக்கும் மையப்புள்ளியை (focal point) என் ஓவியத்தில் தவிர்க்கிறேன்.

மேலும் ஓவியத்தில் புதுமையும் தேடலும் அவசியம். அது இருக்கும் வரை கலை செய்வதற்கான தூண்டுதல் இருக்கும். கலையைப் பொருத்த வரை எதுவும் எளிதில் கிடைத்துவிடாது என்பதை மனதில் கொண்டு நமக்கென்ற புரிதலை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

கட்டுரையாளர் குறிப்பு

வைஷ்ணவி ராமநாதன்

Curator மற்றும் கலை எழுத்தாளர். சென்னையிலும் பெங்களூரில் உள்ள சித்ர கலா பரிஷத்தில் நுண்கலை படித்தவர். இப்பொழுது சென்னை அரசு நுண்கலைக் கல்லூரியில் பகுதி நேர Art History ஆசிரியராக இருக்கிறார். மின்னம்பலத்தின் வெளியீடான 'உருவங்கள் உரையாடல்கள்' நூலின் ஆசிரியர்.

சோழமண்டலத்தின் ஓவியர் பி.கோபிநாத்துடன் ஒரு சந்திப்பு!

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

சனி 15 மே 2021