மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 மே 2021

சோழமண்டலத்தின் ஓவியர் பி.கோபிநாத்துடன் ஒரு சந்திப்பு!

சோழமண்டலத்தின் ஓவியர் பி.கோபிநாத்துடன் ஒரு சந்திப்பு!

வைஷ்ணவி ராமநாதன்

பகுதி -1

சென்னை கலைக் கல்லூரியில் சேர்ந்த தருணத்தைப் பற்றியும் அங்கு கிடைத்த அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்..

மலபாரில் (கேரளா) பள்ளியில் படித்து கொண்டிருந்த சமயத்திலேயே ஓவியத்தில் மிகவும் ஈடுபாடு உண்டு. ‘நீ என்ன பிக்காஸோவா?’ என்று மற்றவர்கள் கேலி செய்வார்கள். என் ஆர்வத்தைக் கண்ட ஆசிரியர் நுண்கலை படிக்க ஆலோசனை கொடுத்தார். சென்னை ஓவியக் கல்லூரிக்கு விண்ணப்பம் அனுப்பினேன். என் பெற்றோர்களுக்கு முதலில் அதில் விருப்பம் இருக்கவில்லை என்றாலும் கல்லூரியிலிருந்து பதில் வந்தவுடன் அவர்கள் சற்று சமாதானம் ஆனார்கள். சென்னைக்கு என் அப்பாவுடன் வந்தேன். பொதுவாக கல்லூரியில் படிக்க ஒரு தகுதித் தேர்வு இருக்கும். அதில் நானும் மற்ற 6 மாணவர்களும் நல்ல மதிப்பெண் பெற்று நேராக இரண்டாம் ஆண்டு சேர்ந்தோம்.

1966ல் கல்லூரியில் சேர்ந்த பொழுது நிறைய ஓவியர்களை சந்தித்தேன். வாசுதேவ், விசுவநாதன் போன்றவர்கள் என் சீனியர்ஸ். பணிக்கரும் இருந்தார். எனக்கு அவருடைய லேண்ட்ஸ்கேப் ஓவியம் மிகவும் பிடிக்கும். நாங்கள் படித்துக்கொண்டிருந்த காலத்தில் நிறைய கண்காட்சிகளுக்கு ஓவியங்களை அனுப்புவோம். அப்போது சீனியர் ஜூனியர் என்ற பேதமை கிடையாது. National Exhibition-க்கு இங்கிருந்து எங்கள் படைப்புகள் போகும் போது பணிக்கருடைய ஓவியத்துடன் எங்களுடையதும் போகும்.

கல்லூரியில் படிக்கும் போது இந்தியா முழுவதும் சுற்றுப்பயணங்கள் சென்றிருக்கிறோம். அதன் மூலம் நம் நாட்டின் கலை வளத்தை அறிந்துக் கொண்டோம். அதே சமயத்தில் நாங்கள் ஒவ்வொருவரும் எங்களுக்கென கலைப்பாணியையும் உருவாக்கிக் கொண்டிருந்தோம்.

உங்களுடைய பாணி எப்படி இருந்தது?

நான் முதலில் லேண்ட்ஸ்கேப் செய்து கொண்டிருந்தேன். பின்னர் நவீன பாணியில் வண்ணம் நிறைந்த மினியேச்சர் செய்ய ஆரம்பித்தேன். இந்திய மரபு வழி மினியேச்சரில் காணப்படும் வண்ணம் மற்றும் காம்போசிஷன் என்னை ஈர்த்தது. அதில் பல கூறுகளை பீக்டோரியாளாக வெளிப்படுத்தி இருப்பார்கள். மினியேச்சரின் முக்கியத்துவத்தை இன்னொருவரும் வலியுறுத்தினார். அந்தக் காலத்தில் சோழமண்டலத்திற்கு நிறைய ஓவியர்கள் வருவார்கள். அப்படி வந்த ஒருவர் தான் ஹோவர்ட் ஹாஜ்கின் என்ற புகழ் பெற்ற பிரிட்டிஷ் ஓவியர். அவரிடம் நல்ல மினியேச்சர் கலெக்க்ஷன் கூட இருந்தது. ஒரு நாள் அவருடன் பேசும்போது எனக்கு வெளிநாடு செல்ல வேண்டும் என்று சொன்னேன். 'உங்களிடம் கலை பொக்கிஷம் இருக்கும் போது நீ ஏன் வெளியே செல்ல வேண்டும்? ஓவியத்தைப் பற்றி இந்த நாட்டு ஓவியத்தின் மூலம் தான் கற்றுக் கொண்டேன்' என்று பதில் அளித்தார்.

பால் க்லீயும் மத்தீசும் கூட என்னை பாதித்தனர். இவர்களைத் தவிர கேரளாவில் என் இளம் வயதில் பார்த்த கலமெழுத்து போன்ற சடங்குகளும் என் மனதில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. என் தாத்தாவைப் போல் எனக்கும் கிராமிய கலையில் அதிக ஆர்வம் இருந்தது. எங்கள் ஊரில் கதகளி நாடகங்கள் நடக்கும் போது நடிகர்கள் வேஷம் போடுவதைக் கூர்ந்து கவனிப்பேன். இவையெல்லாம் சேர்ந்து என்னை ஓர் ஓவியனாக்க உதவி செய்தன.

நீங்கள் படிக்கும் காலத்திலேயே சோழமண்டலத்தில் இருந்தீர்களா? இங்கு வந்தது எப்படி?

நான் விஸ்வநாதன் போன்ற ஓவியர்களுடன் கல்லூரியில் நெருக்கமாகப் பழகினேன். அவர்கள் என்னை அழைத்ததால் சோழமண்டலத்திற்கு வர ஆரம்பித்தேன். நான் இங்கு தங்கி கல்லூரிக்குச் செல்வேன் இல்லையென்றால் சனி ஞாயிறு இங்கு வருவேன். பின்னர் ஒரே வழியாக இங்கு இருந்துவிட்டேன். அப்பொழுது பேருந்து வசதி கூட சரியாக இருக்காது. பல நாட்கள் இங்கிருந்து திருவான்மியூர் வரை நடந்து சென்றுவிட்டு அங்கிருந்து எழும்பூருக்கு பேருந்தில் செல்வேன். போகும் வழி எல்லாம் கடலும் சவுக்கு தோப்பும்தான் தெரியும். மாலையில் இங்கு அமைதி நிலவும் வேளையில் கலை சார்ந்த பல விவாதங்கள் நடக்கும். பணிக்கர் கதைகள் பலவும் சொல்வார். அவருடைய இளம் வயதில், இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் கலைக்கு அதிக வரவேற்பு இல்லை. அதனால் ஒரு வியாபாரியைப் போல அவர் வீடு வீடாக சென்று ஓவியங்களை விற்க முற்படுவார். இவ்வாறு அவர் வாழ்க்கையைப் பற்றியும் பல ஓவியர்களைப் பற்றியும் அறிந்து கொண்டோம்.

அன்று இருந்த கருத்து பகிர்வு இன்றும் சோழமண்டலத்தில் உள்ளதா?

அது இல்லைதான். ஆனால் ஓர் ஓவியனுக்கு வெவ்வேறு கட்டங்கள் உள்ளன. நாம் என்ன செய்கிறோம் என்பதை அறிந்த பிறகு அத்தகைய பரிமாற்றத்திற்கான தேவையும் குறைந்துவிடும். மற்றொரு காரணம் என்னவென்றால் எங்கள் எல்லோருக்கும் இப்போது வயதாகி விட்டது. நான் சோழமண்டலத்திற்கு வரும் போது எனக்கு 21 வயதுதான். வயது கூடக் கூட செய்வதற்கான வலிமையை இழக்கிறோம். அந்த காலத்தில் எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டோம், எல்லாம் சாத்தியம் என்று நினைத்தோம், மிகவும் கடுமையான வாழ்க்கை வாழ்ந்தோம். ஒரு மாதத்தை 100 ரூபாயில் கழிக்கப் பார்ப்போம். காலையில் எழுந்தவுடன் லுங்கியைக் கட்டிக்கொண்டு கடலிலிருந்து வரும் மீனவர்களுக்கு வலையை இழுக்க உதவி செய்வோம். உணவு மிகவும் விலை குறைவாக இருக்கும். அந்தக் காலத்தில் இங்கு ஒரு டீ கடை கூடக் கிடையாது. பின்னர் நாங்கள் கேட்டதற்காக ஒருவர் கடை திறந்தார். ஆனால் இப்போது எங்கு பார்த்தாலும் ஹோட்டல்கள்தான். அது ஒரு வேறுவிதமான வாழ்க்கை.

ஒரு நாள் அமெரிக்காவிலிருந்து ஒரு விருந்தாளி தன் மகனுடன் வந்தார். ‘என் மகனுக்கு 18 வயதாகிவிட்டது. எங்கள் ஊரில் 18 வயதாகிவிட்டால் கட்டாயமாக வியட்னாம் போருக்குச் செல்ல வேண்டும். அங்கு சென்று இறப்பதை விட அவன் இங்கு இருப்பது மேல்.’ என்றார். அந்த இளைஞனின் மூலம் மேற்கத்திய தத்துவம், கவிதை மற்றும் இசையைப் பற்றி அறிந்து கொண்டோம். வெளி உலகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று எங்களுக்குத் தெரியவந்தது. ‘Lonely Planet’ எனும் சுற்றுலா கைடில் சோழமண்டலத்தைப் பற்றி ஒரு கட்டுரை வந்தது. அதன் பின்னர் இன்னும் நிறைய விருந்தாளிகள் வருகை தந்தனர்.

தனிமையில் இருப்பது அல்லது மற்றவர்களுடன் இருப்பது, ஓர் ஓவியனுக்கு எது உசிதம்?

சில விதமான பரிமாற்றத்திற்கு மற்ற ஓவியர்கள் தேவை. அவர்களுடைய கண்ணோட்டம் மற்ற பார்வையாளர்களுடைய கண்ணோட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது வேறுபட்டிருக்கும். அதன் மூலம் நம் படைப்பை புதிய பார்வையில் பார்க்க முடியும். ஆனால் சில நேரங்களில் அது சச்சரவிலும் அடி தடியிலும் கூட முடியலாம். ஆரம்பத்தில் மற்றவர்களுடைய கண்ணோட்டத்தைப் புரிந்துக் கொள்ள முடியாது. ஆனால் அது காலப்போக்கில் மாறிவிடும்.

முன்காலம் மாதிரி இல்லாமல் இப்பொழுது கருத்துகளை நொடியில் பரிமாறிக்கொள்ள தொழில் நுட்பம் உள்ளது....

அது சரிதான். 1960இல் ‘ஆர்ட் டிரெண்ட்ஸ்’ என்ற ஓர் இதழை அச்சிட்டோம். அதன் மூலம் தேசிய அளவில் நடக்கும் கலை வளர்ச்சிகளைப் பற்றி அறிந்து கொண்டோம். எங்கள் காலத்திற்கு முன்னே கூட பல தளங்களில் எண்ணப் பரிமாற்றம் நடந்து கொண்டு தான் இருந்தது. நாம் அரூப ஓவியத்தை மேற்கத்திய படைப்பு என்று நினைக்கிறோம். ஆனால் நம் நாட்டிலே கூட அது சம்பந்தமான சிந்தனை இருந்திருக்கிறது. கடவுளை வடிவம் கொடுத்து ‘சகுண பிரம்மன்’ எனலாம் இல்லையென்றால் உருவமற்ற ‘நிற்குண பிரம்மன்’ எனலாம். பிலவாட்ஸ்கீ தியாசபி சிந்தனையத் துவங்கிய போது இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது. வாழ்க்கையைப் பற்றி மக்கள் சலிப்படைந்த சமயம். காண்டின்ஸ்கீ மற்றும் மான்றியான் தியாஸபியில் ஈடுபட்டார்கள். லெட்பீட்டர் என்ற தியாஸபி சிந்தனையாளர் ‘சிந்தனையின் வடிவம்’ (Thought-Forms) என்ற புத்தகத்தை எழுதினார். அது தாந்திரீக சிந்தனையின் முன்னோடிப் புத்தகமாகும். அதிலிருந்து தான் ஆரூப ஓவியம் துவங்கியது. காண்டின்ஸ்கீ ஒர் ஓவியத்தை வரைந்துவிட்டு அதை திருப்பி வைத்துப் பார்க்கும் போது அரூப ஓவியம் துவங்கியது என்று மற்றொரு கருத்தும் உள்ளது.

ஏறக்குறைய அதே சமயத்தில் தாகூர் ஜெர்மனி சென்று அதன் விளைவாக பாஹவுஸ் கலை கண்காட்சி ஒன்றை கல்கத்தாவில் ஏற்பாடு செய்தார். அந்தக் கண்காட்சி கநேந்திரனாத் தாகூர் போன்ற ஓவியர்களை பாதித்தது. இவ்வாறு நம் நாட்டிற்கும் மற்ற நாடுகளுக்குமிடையே சிந்தனைப் பரிமாற்றம் நடந்து கொண்டே இருந்தது.

இப்போது நாம் இருக்கும் சமூகம் கலை வெளிப்பாட்டிலும் அது சம்பந்தமான விழிப்புணர்விலும் முன்பைவிட தேர்ந்திருக்கிறது என்பீர்களா?

கட்டாயமாக, நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் தான் சென்னையில் கலை சம்பந்தமான முயற்சிகள் சூடு பிடிக்கத் துவங்கின. பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் அமெரிக்கன் சென்டர் பல கண்காட்சிகளை ஏற்பாடு செய்தன. Abstract Expressionism கண்காட்சி அமெரிக்காவிலிருந்து தில்லிக்கு வந்தபோது தேர்ந்த கலை விமர்சகர் க்லெமெண்ட் கிரீன்பர்க் சென்னைக்கும் வந்து சொற்பொழிவு அளித்தார். நாங்கள் Abstract Expressionismஇல் ஒன்றும் பேசும் படி இல்லை என்று முடிவு செய்தோம். எங்கள் ஆசிரியர் சந்தானராஜ் அந்த ஓவியங்களைக் கிண்டல் கூடச் செய்தார். ஆனால் கிரீன்பர்க் Abstract Expressionism கலையில் ஒரு புதிய திருப்பம் என்று விவரித்தார். காலம் போகப் போக எங்களுக்கும் கலை என்பது எவ்வாறு மாறிவிட்டது என்று புரிய வந்தது. பல நாட்களுக்கு நம் நாட்டில் ஓவியர்கள் என்றால் இலஸ்ட்ரேடர்ஸ் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

இலஸ்ட்ரேஷன் என்பது கலையா இல்லையா என்பதைப் பற்றி இன்றும் நிறைய விவாதம் இருக்கிறது…

ஓவியம் என்பது முற்றிலும் காட்சி சம்பந்தமான ஒன்று. அதில் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று கோட்பாடுகள் கிடையாது. எங்கள் இளம் பருவத்தில் யாருக்கும் ‘நரேடிவ் ஓவியத்தின்’ மேல் அதிக நாட்டம் கிடையாது. எல்லோருக்கும் வண்ணத்தின் சாத்தியங்களை அறிவதிலும் வடிவங்களிலும் தான் ஆர்வம் இருந்தது. பரோடா ஓவியர்களைப் போல் நாங்கள் கதை சொல்லும் ஓவியங்கள் செய்யவில்லை. National Exhibition-க்கு நாங்கள் எங்கள் படைப்புகளை அனுப்பும் போது எல்லோரும் சென்னையிலிருந்து வரும் படைப்புகளுக்காக ஆவலாக காத்துக்கொண்டிருப்பார்கள். அதில் ஏதாவது வித்தியாசமாக இருக்கும் என்று தெரியும். கோடு என்பது இங்குள்ள ஓவியங்களில் முக்கியமாக இருக்கும்.

உங்கள் ஓவியத்திற்கும் அது பொருந்துமா?

சந்தானராஜ், ஆந்தோனி தாஸ் போன்றவர்கள் என் ஆசிரியர்கள். அவர்களுடய ஓவியங்களைக் கண்டு நான் வளர்ந்தவன். அதனால் ஆரம்ப காலத்தில் எனக்கும் கோட்டோவியத்தில் அதிக ஈடுபாடு இருந்தது. ஆனால் இப்போது நான் வண்ணத்தையும் வடிவத்தையும் பிரித்துப் பார்ப்பதில்லை. இந்திய மினியேச்சர் ஓவியத்தின் தாக்கத்தினால் வண்ணத்தையும் உருவத்தையும் நோக்கிச் சென்றேன்.

நம் நாட்டு மினியேச்சர் ஓவியம் என்பது முற்றிலும் மெய்சார்ந்த பாணி கிடையாது. எடுத்துக்காட்டாக, வசந்த காலத்தைக் சித்தரிக்கும் போது அந்த சமயத்தில் பூக்கும் பூக்களையும் அப்போது இருக்கும் பறவைகளையும் குறிப்பிட்டு அந்தக் காலம் சார்ந்த மன நிலையை ஏற்படுத்துவார்கள். அதே போன்று வேட்டைக் காட்சியை விவரிக்கும் போது, வேட்டைகாரர்கள் இருக்கும் இடத்திலிருந்தே மலையின் மேல் இருக்கும் சிங்கத்தைக் காண்பது போன்ற காட்சி இருக்கும். நேரில் அவ்வாறு இருக்காது என்றாலும் காண்பவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் அந்தக் காட்சி இருக்கும். ஆந்திரா இராமாயணம் கூட மிக அருமையாக இருக்கும். அர்னவாஜ் வாசுதேவ் போன்ற ஓவியர்களை மிகவும் பாதித்தது. அதில் இருக்கும் காம்போசிஷன் மேற்கத்திய ஓவியத்தில் காண முடியாது.

சில ஓவியர்களின் படைப்பில் அவர்களுடைய தாய் நாடு அல்லது கலாசாரம் தழுவிய சிந்தனையைப் பார்க்க முடியாது. இதை ஒப்புக் கொள்கிறீர்களா?

கண்டிப்பாக இல்லை. அரூப ஓவியத்திலேயே இந்திய ஓவியர்கள் செய்வதையும் அமெரிக்காவைச் சேர்ந்த எதோ ஓர் ஓவியர் செய்வதிலும் நிறைய வேறுபாடு இருக்கும். நாம் கலையை எப்படி அணுகுகிறோம் என்பதில் கட்டாயம் பல மாற்றங்கள் இருக்கும்.

ஒரு காலத்தில் இந்தியத்தன்மை சார்ந்த கருத்துகள் பல இருந்தன. அவை எவ்வாறு உங்களை பாதித்தன? அக்கருத்துக்கள் இன்றும் பொருந்துமா?

அந்தக் காலத்திற்கு அவை பொருந்தின. ஆனால் நாங்கள் அக்கருத்துக்களைத் தாண்டி வந்துவிட்டோம். அவை தற்காலத்திற்கு சரி வராது ஏனென்றால் இது பல தாக்கங்கள் நிறைந்த போஸ்ட் மாடர்ன் காலம்.

என் ஓவியத்தைப் பொருத்த வரை மினியேச்சருக்காக புகழ் போன காங்ராவிற்குச் சென்ற என் பயணம் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அங்கு சந்து லால் ரெய்னா என்ற ஒரு மூத்த ஓவியரை சந்தித்தேன். அவர் மட்டும்தான் அந்த ஊரில் அன்றும் ஓவியம் செய்து கொண்டிருந்தார். மற்றவர்கள் எல்லோரும் அதிக வருமானம் கொடுக்கும் மற்ற வேலைகளுக்குச் சென்று விட்டனர். ஆனால் முந்தைய ஒரு காலத்தில் நிலத்தையும் செல்வங்களையும் கொடுத்து அரசர்கள் கலையையும் அதை படைக்கும் கலைஞர்களையும் ஆதரித்ததைப் பற்றி என்னிடம் சொன்னார். அவரிடமிருந்து வண்ணங்களைப் பற்றி தெரிந்துக் கொண்டேன். Gamboge yellow பெருவதற்கு மகுவா பூக்களை மாட்டிற்குக் கொடுத்து அதனுடைய சிறுநீரை சேகரித்து அதிலிருந்து அந்த மஞ்சளைப் பெறுவார்கள். வெள்ளையை கடல் சங்கிலிருந்து பெறுவார்கள். இவ்வாறு ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவையான வண்ணங்களை அவர்களே தயாரிப்பார்கள்.

நீங்களும் வண்ணங்களைத் தயாரித்ததுண்டா?

ஆரம்ப காலத்தில் நாங்கள் நிறமிகளை (pigments) வாங்கி அரைத்து தீட்டும் வண்ணங்களாக மாற்றி உபயோகிப்போம். ஆனால் தரமான நிறமிகள் கிடைக்கவில்லை. கித்தானைக் கூட நாங்களே தயார் செய்வோம். அதில் சிக்கல் என்னவென்றால் 10 கித்தான்களில் ஒன்றுதான் தேறும். மற்ற கித்தான்களின் மேல்பரப்பு விரிசல் விட்டுவிடும். ஆனால் இப்பொழுது தயார் நிலையில் கித்தான் கிடைக்கிறது.

சந்தானராஜ் தனக்கென்றே கித்தானை தயார் செய்யும் முறை வைத்திருந்தார் என்று கேள்விப்பட்டுள்ளேன்.

ஆமாம். அதை அவர் மற்றவர்களிடம் எளிதில் பகிர மாட்டார். ஆனால் என்னை அவருக்கும் பிடிக்கும் என்பதால் எனக்குச் சொல்லிக் கொடுத்தார். அந்த முறையின் சிறப்பே அதில் உபயோகிக்கும் பசைதான். மிகவும் துர்நாற்றமாக இருக்கும். விலங்கிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு விதமான பசையாகும். அதனுடன் Double boiled linseed oil-ஐச் சேர்க்க வேண்டும். சரியான அளவில் எண்ணையும் பசையும் இருத்தல் அவசியம். பசை மற்றும் எண்ணையுடன் வெள்ளை, அதாவது, zinc oxide-ஐக் கலக்க வேண்டும். இழைநயம் (texture) வேண்டும் என்றால் அதற்கு மற்ற பொருட்களைச் சேர்க்கலாம். வழுவழுப்பான மேற்பரப்பு வேண்டுமென்றால் பசையும் எண்ணையும் மட்டும் போதும். Zinc oxide-ஐயும் எண்ணையையும் சேர்த்து இழைக்க வேண்டும். பின்னர் அதனுடன் வெந்த பசையைச் சேர்க்க வேண்டும். இவை மூன்றும் சேர்ந்த கலவையை கித்தானில் பூசிய பின்னர் அதன் மேல் வண்ணத்தை தீட்ட ஆரம்பிக்கலாம். இல்லை என்றால் கித்தான் மேல் பசையை மொழுகிய பின்னர் zinc oxide-ஐயும் எண்ணையையும் சேர்ந்த கலவையை பூசலாம்.

பகுதி 2- மதியம் பதிப்பில்....

கட்டுரையாளர் குறிப்பு

வைஷ்ணவி ராமநாதன்

Curator மற்றும் கலை எழுத்தாளர். சென்னையிலும் பெங்களூரில் உள்ள சித்ர கலா பரிஷத்தில் நுண்கலை படித்தவர். இப்பொழுது சென்னை அரசு நுண்கலைக் கல்லூரியில் பகுதி நேர Art History ஆசிரியராக இருக்கிறார். மின்னம்பலத்தின் வெளியீடான 'உருவங்கள் உரையாடல்கள்' நூலின் ஆசிரியர்.

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

சனி 15 மே 2021